கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

சங்ககாலத்தைச் சேர்ந்த மற்றும் ஒரு சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை. “மாக்கோதை” என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றி சங்க இலக்கிய நூலான புறநானூற்றில் ஒரு பாடல் உள்ளது. இந்தப் பாடலைத் தவிர சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை பற்றிய குறிப்புக்கள் வேறு எங்கும் காணோம். சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.

புறநானூறு

யாங்குப் பெரிது ஆயினும், நோய் அளவு எனைத்தே,
உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்?
கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து,
ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை;
இன்னும் வாழ்வல்; என் இதன் பண்பே!
(புறம் – 245)

விளக்கம்

தன் மனைவி இறந்தாள் என்று அழும் அரசன். அவள் இழப்பு எந்த அளவுப் பெரியதோ தெரியவில்லை. எனினும் அவளை இழந்ததால் நான் அடையும் துன்பம் மிகப் பெரிதாக உள்ளது. என் உயிரையும் உடன் மாய்த்துக்கொண்டிருக்க வேண்டும். அதற்கான வலிமை என்னிடத்தில் இல்லை. அதனால் என் துன்பம் மிகப் பெரிதாக உள்ளது. கள்ளி மண்டிய களரி நிலப் பரந்த வெளி. அங்கு விளைந்த விறகடுக்கின்மேல் கிடத்தி தீ வைத்திருக்கிறேன். இப்படித்தான் என் மனைவியை கொள்ளி வைத்திருக்கிறேன். இன்னும் நான் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை சிலகாலம் உயிர் வாழ்ந்து இறுதியில் கோட்டம்பலம் என்னுமிடத்தில் மனநோயாளியாய் உயிர் துறந்தான்.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *