சங்ககால தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூவேந்தர்களில் ஒருவராகவும் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த நாடே சேர நாடு எனப்பட்டது. சேர நாட்டை ஆண்ட அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களே சேரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர். சேர நாடு மிக அதிகமான மலைகளையும், யானைகளையும் கொண்ட நாடு. மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
தற்போதைய கொங்கு நாட்டுப்பகுதியே அந்த கால சேர நாடு என்று கூறலாம். தமிழகத்தைச் சேர்ந்த மற்ற அரச பரம்பரையினர் போலவே சேர மன்னர்களும் தமிழ்ப் போற்றி வளர்த்தனர். பல சங்கத் தமிழ் நூல்கள் சேர நாட்டில் உருவாயின. மேலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டி நாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் சேர மன்னர்கள் ஆண்டனர்.
முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன. சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் சேர நாட்டைப் பற்றியும் சேர மன்னர்கள் பற்றியும் பல தகவல்களைத் தருகின்றன.