மருதம் பாடிய இளங்கடுங்கோ

மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மன்னர்கள் மரபைச் சேர்ந்தவர். இவர் சேர அரச பரம்பரையில் வந்திருந்தாலும் சேர நாட்டையோ அல்லது சிறு குறுநிலத்தையோ ஆண்டதற்கான சான்றுகள் ஏதும் இல்லை. மாறாக சேர அரச பரம்பரையில் வந்த மருதம் பாடிய இளங்கடுங்கோ ஒரு தமிழ்ப் புலவராக திகழ்ந்தார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

மருதம் பாடிய இளங்கடுங்கோ சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இன்று அறியப்படுகிறார்

பெயர் காரணம்

மருதம் பாடிய இளங்கடுங்கோ பாடிய மூன்று பாடல்ளும் மருதத்திணைப் பாடல்கள் ஆகும். ஆதலால் இவருக்கு ‘மருதம் பாடிய’ என்னும் அடைமொழியைத் தந்துள்ளனர்.

புகழூர்க் கல்வெட்டு

புகழூர் ஆறுநாட்டான் மலையிலுள்ள தமிழி எழுத்துக் கல்வெட்டு மூன்று சேர மன்னர்களின் பரம்பரை வரிசையைக் கூறுகின்றது. ‘கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ’ என்ற வரிசைமுறை கல்வெட்டில் செதுக்கப்படுள்ளது. இதில் கூறப்பட்ட இளங்கடுங்கோ இந்தப் புலவன் என்று கூறலாம். மேலும் இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக்கூறும் ஆராய்ச்சியாளர்களும் உள்ளனர். ஆனால் அதற்கான தக்க சான்றுகள் ஏதும் இல்லை.

அகநானூறு

நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து,
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும்

பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி,
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும்
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!

”ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
கொண்டனை” என்ப ”ஓர் குறுமகள்” அதுவே

செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்,
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை,

அண்ணல் யானை அடு போர்ச் சோழர்,
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய,
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை,
களிறு கவர் கம்பலை போல,
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே
(அகம் – 96)

கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின்
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால்,
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில்,
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க,
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து,
வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு
இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது
ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல்,
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன்
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர!

மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து,
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக்
குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது
உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல்

புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து,
நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய,
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து

எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி,
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ்
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு,
கூர்நுனை மழுகிய எயிற்றள்
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே.
(அகம் – 176)

நற்றிணை

அறியாமையின், அன்னை! அஞ்சி,
குழையன் கோதையன் குறும் பைந் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல,
நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடை
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்,
”கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று” என,
”யாணது பசலை” என்றனன்; அதன் எதிர்,
”நாண் இலை, எலுவ!” என்று வந்திசினே
செறுநரும் விழையும் செம்மலோன் என,
நறு நுதல் அரிவை! போற்றேன்,
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே
(நற்றிணை – 50)

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *