சிம்மவிஷ்ணு

தமிழ்நாட்டை ஆண்ட பிற்காலப் பல்லவ மன்னர்களுள் முதல் மன்னன் சிம்மவிஷ்ணு ஆவான். இவன் அவனிசிம்மன் என்றும் அறியப்படுகிறான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் நிறுவினான். காஞ்சிக்கு தெற்கிலும் தன் சாம்ராஜ்ஜியத்தை விரிவு படுத்திய முதல் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு ஆவான்.

கல்வெட்டுகள்

மன்னன் சிம்மவிஷ்ணுவின் ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டுகளோ அல்லது செப்பேடு சாசனங்களோ ஏதும் கிடைக்கப்பெறவில்லை. மன்னன் சிம்மவிஷ்ணுவைப் பற்றி அவன் பின் ஆண்ட பல்லவ மன்னர்கள் எற்படுத்திய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் வாயிலாக அறியமுடிகிறது. மன்னன் சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்ம பல்லவன் இயற்றிய ‘மத்தவிலாச பிரஹசனம்‎’ என்னும் சமஸ்கிருத நாடகத்தில் மன்னன் சிம்மவிஷ்ணு பல நாடுகளை வெற்றிக்கொண்ட பேரரசனாய் சித்தரிக்கப்பட்டுள்ளான்.

ஆட்சிக்காலம்

மன்னன் சிம்மவிஷ்ணுவின் ஆட்சிக்காலம் இதுவரை உறுதியாய் அறியப்படவில்லை. இவனின் ஆட்சிக்காலம் குறித்து சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இடையில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றது. ஒரு சில சரித்திர ஆராய்ச்சியார்கள் மன்னன் சிம்மவிஷ்ணுவின் ஆட்சிக்காலம் கி.பி. 537ம் ஆண்டு முதல் கி.பி.570ம் ஆண்டு வரையில் என்றும் மற்றும் சில ஆராய்ச்சியாளர்கள் இவனின் ஆட்சிக்காலம் கி.பி. 575ம் ஆண்டு முதல் கி.பி. 615ம் ஆண்டு வரையில் என்றும் கணிக்கின்றனர்.

பல்லவப் பேரரசு

சிம்மவிஷ்ணு பல்லவ மன்னனாகப் பதவியேற்ற சமயத்தில், பல்லவ சாம்ராஜ்ஜியம் மிகவும் வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்தது. வீழ்ச்சிப்பெற்ற நிலையில் இருந்த பல்லவ சாம்ராஜ்யத்தை ஒரு பலம் பொருந்திய மாபெரும் பேரரசாக உருவாக்கிய பெருமை மன்னன் சிம்மவிஷ்ணுவையே சாரும். இந்த காலகட்டத்தில் தென்இந்தியா ஐந்து சாம்ராச்சியங்களாய் பிரித்து ஆளப்படுத்துவந்தது. தமிழ்நாடு மற்றும் இலங்கையை பல்லவர்களும், பாண்டியர்களும் மற்றும் சோழர்களும் ஆண்டு வந்தனர். கேரளா சேரர்களால் அளப்பட்டுவந்தது. கர்நாடகம் சாளுக்கிய மன்னர்களால் ஆளப்பட்டது. பல்லவர்களின் பலம் பெருமளவு ஒடுங்கியிருந்த நிலையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற சிம்மவிஷ்ணு ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களை ஒடுக்கி காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஒரு மாபெரும் பல்லவ சாம்ராஜ்யத்தை தென்இந்தியாவில் உருவாக்கினார். மன்னன் சிம்மவிஷ்ணுவின் பின் அவன் வம்சத்தில் வந்த பல்லவ மன்னர்கள் பிற்காலப் பல்லவர் என அறியப்படுகின்றனர்.

சற்றேறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் நீடித்த, தமிழ் நாட்டில் ஏற்பட்ட பலப்போர்களுக்கு காரணமான பல்லவர்களும் சாளுக்கியர்களுக்கும் ஆன பகைமை தொடங்கியதும் சிம்மவிஷ்ணுவின் ஆட்சி காலத்தில்தான்.

சமயம்

மன்னன் சிம்மவிஷ்ணு தீவிர விஷ்ணு பக்தனாவான். இவன் வைணவத்தை பின்பற்றினான் என்பதை அறியலாம். இவனின் மகன் முதலாம் மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தை பின்பற்றினான். பின்னர் சைவ சமயத்திற்கு மாறினான்.

மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் குடைவறைக் கோவிலில் சிம்மவிஷ்ணுவின் சிற்பத்தை காணலாம்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *