நரசிம்மவர்ம பல்லவன்

குடைவரை கோயில் கலையை உலகிற்குத் தந்தவனும் புகழ் பெற்ற பல்லவ மன்னனுமான மகேந்திரவர்ம பல்லவன் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியுடன் ஏற்பட்ட போரில் இறந்ததைத் தொடர்ந்து அவன் மகன் நரசிம்மவர்ம பல்லவன் பல்லவ நாட்டின் மன்னனாகப் பதவியேற்றான்.

ஆட்சிக்காலம்

இவன் பல்லவ மன்னர்களுள் மிகவும் சிறப்புற்று விளங்கினான். நரசிம்மவர்ம பல்லவன் கி.பி.630ம் ஆண்டு முதல் கி.பி. 668ம் அண்டுவரையில் பல்லவ சாம்ராஜ்ஜியத்தை ஆண்டான். இவன் ஆட்சி காலத்தில் பல்லவர் குலம் மிகவும் சிறப்புற்று விளங்கியது. நரசிம்மவர்ம பல்லவனின்ன் ஆட்சி காலத்தில் பல்லவ சாம்ராஜ்ஜியம் வடக்கில் கிருஷ்ணா ஆறு முதல் தெற்கில் மதுரை வரை பரந்து விரிந்து காணப்பட்டது.

சமயம்

நரசிம்மவர்ம பல்லவனின் ஆட்சி காலத்திலேயே அப்பர், திருஞானசம்பந்தர், சிறுதொண்டர் போன்ற சைவ நாயன்மார்கள் வாழ்ந்ததாக தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அக்காலத்தில் பல்லவர்களின் எதிரிகளாக விளங்கிய சாளுக்கியரை வெற்றிகொண்டு அவர்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கியவன் நரசிம்மவர்ம பல்லவன். இவன் சிறந்த மல்யுத்த வீரனாய் திகழ்ந்ததால் மாமல்லன் என்ற சிறப்பு பட்டம் பெற்றான். நரசிம்மவர்ம பல்லவனின் நினைவாகவே மாமல்லபுரம் என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல், கலை போன்ற துறைகளில் இவனது சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை.

பட்டப்பெயர்

நரசிம்மவர்ம பல்லவன் தான் அமைத்த கோவில்களில் தன் பட்டப் பெயர்கள் பலவற்றை வெட்டுவித்துள்ளான். மகாமல்லன், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி. இரணசயன், அத்தியந்த காமன், அமேயமாயன் நயநாங்குரன்,மாமல்லன்,வாதாபி கொண்டான் என்பன சில.

சாளுக்கிய போர்

நரசிம்மவர்ம பல்லவனின் தந்தை மகேந்திரவர்ம பல்லவனின் ஆட்சி காலத்தில் சாளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசி காஞ்சி மீது படையெடுத்து, காஞ்சி நகரை முற்றுகையிட்டான். இப்போரில் மகேந்திரவர்ம பல்லவன் இறந்தான். இதற்கு பழி வாங்கும் பொருட்டு நரசிம்மவர்ம பல்லவன் கி.பி.642ம் ஆண்டு வாதாபி நகர் மீது படையெடுத்துச் சென்றான். இப்படையில் ஒரு லட்சம் காலாட்படை வீரர்களும், ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும், பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றன. இம்மாபெரும் படையெடுப்பை படைத்தளபதி பரஞ்சோதி முன் நின்று நடத்தி வாதாபி நகரை எரித்து பல்லவ குலத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்கினான் என்பதை நம் கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது. இந்த வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்ம பல்லவன் வாதாபி கொண்டான் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். பல்லவர் படைத்தளபதி பரஞ்சோதி பின்னாளில் 63 நாயன்மார்களில் ஒருத்தராக மாறி சைவத்திற்கு அரும்பணி புரிந்தார்.

About the author