பதவியேற்பு
இரண்டாம் பரமேஸ்வரவர்மன் உலகப்புகழ் பெட்ற மாமல்லபுரக் கடற்கரைக் கோயில்களைக் கட்டியவனும் காஞ்சிபுரத்திலுள்ள எழில் மிகுந்த சிற்பங்களுடன்கூடிய உலகப்புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலைக் கட்டிவனுமான இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனின் முத்த மகன் ஆவான். பல்லவ சாம்ராஜ்யத்தின் மன்னனாக கி.பி.728ம் ஆண்டு இரண்டாம் பரமேஸ்வரவர்ம பல்லவன் பதவியேற்றான்.
சாளுக்கிய பகை
முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் சாளுக்கிய மன்னன் புலிகேசியால் போரில் கொல்லப்பட்டான். இதில் துவங்கிய பல்லவ-சாளுக்கிய மன்னர்களுக்கு இடையிலாலான பகைமை உணர்வு பரம்பரையாய் தொடர்ந்து வந்தது. இந்த பகை உணர்வு இரண்டாம் பரமேஸ்வரவர்மன் காலத்திலும் தொடர்ந்தது.
அமைதிகாலம்
மாமல்லன் என்று அழைக்கப்பட்ட மன்னன் முதலாம் நரசிம்மவர்ம பல்லவனாலும் அவன் பின்னர் ஆண்ட மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்ம பல்லவனாலும் சாளுக்கியர்களின் படை பலம் மிகவும் குறைக்கப்பட்டிருந்தது. சாளுக்கியர்களின் தோழமை நாடுகளான பாண்டியர்களும் மற்றும் கன்னட மன்னர்களும் போர் புரிய பலமற்று இருந்தனர். இதனால் பல்லவ சாம்ராஜ்யத்தில் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனின் ஆட்சிக்காலத்தில் எங்கும் அமைதி நிலவியது.
மேலை கங்க நாடு
இரண்டாம் பரமேஸ்வரவர்மனின் ஆட்சி காலத்தில், சாளுக்கிய விஜயாதித்தனும் இளவரசனாக இரண்டாம் விக்ரமாதித்தனும் இருந்தனர். சாளுக்கிய நாட்டிற்கும் மேலை கங்க நாட்டிற்கும் இடையில் நல்ல உறவு நிலவந்தது. மேலைக் கங்க நாட்டின் மன்னனாக சிறீபுருசனால் இளவரசனாக இரேயப்பா இருந்தனர்.
சாளுக்கிய போர்
இரண்டாம் பரமேஸ்வரவர்மன் ஆட்சி காலத்தின் போது கி.பி.730ம் ஆண்டை ஒட்டி மேலைக் கங்க மரபின் இளவரசன் இரேயப்பா பல்லவ நாட்டின் மீது போர்தொடுத்தான். கங்கர்கள் படை மற்றும் சாளுக்கியர்களின் படை ஆகிய இரண்டு படைகளும் இணைந்த ஒரு பெரும் படைக்கு மேலைக் கங்க இளவரசன் இரேயப்பா தலைமை வகித்தான். இந்தப் போரில் இரண்டாம் பரமேசுவரவர்மன் தோல்வியடைந்தான். மேலும் பல்லவ படைகளும் பெரும் சேதத்திற்கு உள்ளாயின.
உடன்படிக்கை
போரில் தோல்வியைத் தழுவிய இரண்டாம் பரமேசுவரவர்மன் வேறு வழி ஏதும் இன்றி சாளுக்கியர்களுடன் சமாதானம் செய்துகொண்டான். இதன் படி சாளுக்கியர்களின் அணைத்து நிபந்தனைகளையும் இரண்டாம் பரமேசுவரவர்மன் ஏற்றான்.
மேலைக் கங்க போர்
போரில் தோற்றதால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க எண்ணிய இரண்டாம் பரமேசுவரவர்மன், சிறிது காலத்திற்கு பிறகு கி.பி.731ம் ஆண்டில் மேலைக் கங்க நாட்டின் மீது போர் தொடுத்தான். மேலை கங்க மன்னன் சிறீபுருசனுக்கும் இரண்டாம் பரமேசுவரவர்மனுக்கும் இடையில் இந்தப் போர் நடைபெற்றது. விலந்து என்ற இடத்தில் நடந்த இந்தப் போரில் மேலை கங்கை மன்னன் சிறீபுருசனால் இரண்டாம் பரமேசுவரவர்மன் போரில் கொல்லப்பட்டான். சிறீபுருசன் இரண்டாம் பரமேசுவரவர்மனின் முத்திரை, வெண்கொற்றக் குடை போன்றவற்றைக் கைப்பற்றி பெருமானடி என்ற பட்டம் பெற்றான். சாளுக்கிய மன்னன் விஜயாதித்தன் காலகட்டத்தில் இந்தப் போர் நிகழ்திருந்தாலும் சாளுக்கிய மன்னர்களின் பதிவுகள் இவ்வெற்றி சாளுக்கிய இளவரசன் இரண்டாம் விக்ரமாதித்யனைச் சேருவதாக புகழ்கின்றன
கோயில்
இரண்டாம் பரமேஸ்வரவர்மனால் கட்டப்பட்டு அவனது நினைவைக் கூறும்விதமாக காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது.
இறப்பு
கி.பி. 731ம் ஆண்டில் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் போரில் வாரிசுகள் ஏதும் அற்ற நிலையில் இறந்தான். இரண்டாம் பரமேஸ்வரவர்மன் இறந்ததைத் தொடர்ந்து, சிம்மவிஷ்ணுவின் வழிவந்த பல்லவ மன்னர்களின் பரம்பரை முடிவுற்றது.
Comments