பிற்காலப் பல்லவர்கள்

தந்திவர்ம பல்லவன்

தந்திவர்ம பல்லவன் கி.பி 777ம் ஆண்டு முதல் கி.பி.830ம் ஆண்டு வரையில் பல்லவ நாட்டின் மன்னராக ஆட்சி புரிந்தான். இவன் இரண்டாம் நந்திவர்மனின் மகனாவான். இவனை பாரத்வாஜ கோத்திரத்தின் வழித்தோன்றிய “பல்லவ திலக குலோத்பவர் தந்திவர்மன்” என்றும் “கோவிசைய தந்திவிக்கிரமவர்மன் ” என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.

தந்திவர்மனுக்கு மாற்பிடுகு என்னும் பட்டப்பெயரும் வைரமேகன் என்னும் வேறு பெயரும் உண்டு. இவன் கடம்ப மன்னர் குலத்தில் பிறந்த அக்கள நிம்மடி என்னும் இளவரசியை மணந்துகொண்டான்.

திருச்சி மாவட்டத்தில் இன்று ஆலம்பாக்கம் என வழங்கும் தந்திவர்ம மங்கலத்திலுள்ள கைலாசநாதர் கோயிலை இவன் கட்டினான். இங்கு ஏரி ஒன்றை வெட்டி அதற்கு மாற்பிடுகு ஏரி எனப்பெயரும் வைத்துள்ளான்.

புதுக்கோட்டையில் குளத்தூர் வட்டத்தில் இன்று மலையடிப்பட்டனம் என்று வழங்கும் திருவாலத்தூர் மலைக்கோயில் இவன் காலத்தில் விடேல்விடுகு முத்தரையனாகிய குவாவன் சாத்தனால் கட்டப்பட்டது.

திருச்சிக்கு வடக்கே திருவெள்ளறை எனும் ஊரிலுள்ள மாற்பிடுகு பெருங்கிணறும் செங்கற்பட்டு வட்டத்தில் உத்தரமல்லூரிலுள்ள வைரமேகத் தடாகமும் இவன் காலத்தில் வெட்டப்பட்டவை. தந்திவர்மனுக்கு இராஷ்டிரகூட அரசன் கோவிந்தனும், பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் வரகுணனும் பகைவர்களாயிருந்தனர்

மூன்றாம் நந்திவர்மன்

மூன்றாம் நந்திவர்மன் கி.பி 825ம் ஆண்டு முதல் கி.பி.850ம் ஆண்டு வரையில் பல்லவ சாம்ராஜ்யத்தை ஆண்டான். இவன் தந்திவர்மனின் மகன் ஆவான். இவருக்கு இரு மனைவியர்கள் மற்றும் இரு மகன்கள் இருந்தனர். நந்திவர்மன் பல்லவ சாம்ராஜ்யத்தை இரண்டாக்கப் பிரித்து தென் பகுதியை நிருபதுங்கவர்மனுக்கும், வட பகுதியை கம்பவர்மனுக்கும் கொடுத்தான். கம்பவர்மன் என்பவன் பழுவேட்டரையரின் புதல்வி கண்டன் மாறம்பாவையரின் மகன்

ஆட்சி

மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் ஆட்சி காலத்தில் பல்லவர்களின் ஆட்சி வலுப்பெற்றது. இராஷ்டிரகூடர்களுடன் கங்கர்களுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு பாண்டியர்களுடன் போர் புரிந்தார். காஞ்சிக்கருகில் உள்ள தெள்ளாறு என்னுமிடத்தில் நடந்த போரில் பாண்டியர்கள் புலவர்களிடம் தோற்று ஓடினர். பின்வாங்கிச் சென்ற பாண்டியப் படைகளை வைகையாறு வரை விரட்டிச் சென்றார்.

மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் கப்பற்படை மிகவும் வலிமைமிக்கதாக இருந்துள்ளது. இவர் கடல்கடந்து தற்போதைய தாய்லாந்து மற்றும் மலேசிய நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தான்.

சமயம்

மூன்றாம் நந்திவர்மன் சைவ சமயத்தை சேர்ந்தவன். நந்திக் கலம்பகம் எனும் நூல் இவனைப் பற்றியது. இந்த நூல் இவனின் போர்ச் செயல்களையும் நகரங்களையும் பற்றி விளக்கமாகக் கூறுகிறது. ‘பல்லவர் கோன்’, மல்லை வேந்தன். மயிலை காவலன், காவிரிவளநாடன் என்பன மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் பட்டப்பெயர்கள் ஆகும்.

நிருபதுங்கவர்மன்

நிருபதுங்கவர்ம பல்லவன் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு பல்லவ நாட்டை ஆண்டுவந்தான். இவன் மூன்றாம் நந்திவர்மனின் முதல் மனைவியின் மகன் ஆவான். பல்லவ நாட்டின் மற்றொரு பகுதியை நந்திவர்மனின் இரண்டாம் மனைவியின் மகன் கம்பவர்மன் ஆண்டுவந்தான்.

நிருபதுங்கவர்மன் சைவ சமயத்தை சேர்ந்தவன். பரமேசுவரமங்கலதில் உள்ள சைலேசுவரம் கோயில் நிருபதுங்கவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. பாகூர் பட்டயங்கள் வாயிலாக இவன் வைணவ சமயத்தையும் ஆதரித்ததாகத் தெரிகிறது.

பின்னாளில் கம்பவர்மனின் மறைவுக்குப்பிறகு அவனின் மகன் அபராசிதவர்மனுக்கும் நிருபதுங்கவர்மனுக்கும் போர் நிகழ்ந்தது.

கம்பவர்மன்

கம்பவர்மன் மூன்றாம் நந்திவர்மனுக்கும், பழுவேட்டரையரின் புதல்வி கந்தன் மாறம்பாவையருக்கும் பிறந்த மகன். நிருபதுங்கவர்மன் பல்லவப் பேரரசின் தென்பகுதியை ஆண்டபோது, இவன் வடபகுதியை ஆண்டுவந்தான். கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதியின் மகள் விஜயா இவனின் மனைவி ஆவாள். இவர்களின் மகன் அபராசிதவர்ம பல்லவன் ஆவான். கம்பவர்மன் காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்திற்கு அருகில் உள்ள ஊத்துக்காட்டு ஊரிலுள்ள சிவன் கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்றன

அபராசிதவர்ம பல்லவன்

அபராசித வர்ம பல்லவன் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவப் பேரரசின் கடைசி மன்னனாவான். இவனுக்கும் நிருபதுங்கவர்மனுக்கும் ஒன்றினைந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் மன்னனாவது குறித்து போர் மூண்டது.

திருப்புறம்பியம் போர்

பல்லவ சகோதரர்கள் மற்ற அரசர்கள் துணை கொண்டு பெறும் போரில் ஈடுபட்டார்கள். கொள்ளிடத்தின் கரையில் கும்பகோணதிற்கு அருகில் உள்ள திருப்புறம்பியம் என்ற ஊரில் இந்த போர் நடை பெருது. முதுமையின் காரணத்தால விஜயாலய சோழனுக்கு மாறாக அவர் மகன் முதலாம் ஆதித்த சோழனின் தலைமையில் சோழ படைகள் போருக்கு வந்தன.

வரலாற்று சிறப்புமிக்க இந்த திருப்புறம்பியப் போரில் பாண்டிய மன்னன் வரகுணவர்மன் மற்றும் நிருபதுங்கவர்மன் படைகள் பெரும் தோல்வித் தழுவின. இப்போரில் கங்கமன்னன் முதலாம் பிருதிவிபதி இறந்தார். போரில் கிடைத்த வருவாயின் பெரும் பகுதி ஆதித்த சோழனுக்குக் கிட்டியது. போரின் முடிவில் சோழர்களின் சாம்ராஜ்ய எல்லைகள் விரிவடைந்தன. அடுத்த 400 ஆண்டுகளுக்குச் சோழப் பேரரசு தென்இந்தியாவை ஆள இந்தப் போர் ஒரு தொடக்கமாக அமைத்ததாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர்.

இந்தப் போரைத் தொடர்து குறுநில மன்னராக விளங்கிய ஆதித்த சோழன் போரில் பெற்ற செல்வதை சோழ சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்காக பயன்படுத்தினார். பின்னாளில் ஆதித்தய சோழனுக்கும் அபராஜிதவர்ம பல்லவனுக்கு இடையில் நடந்த மற்றும் ஒரு போரில் அபராஜிதவர்ம பல்லவன் இறந்தான். அபராஜிதவர்ம பல்லவன் இறந்ததைத் தொடர்ந்து பல்லவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *