வினையாதித்தன் & விஜயாதித்தன்

வினையாதித்தன்

சாளுக்கியப் பேரரசை கி.பி. 680ம் ஆண்டு முதல் கி.பி. 696ம் ஆண்டு வரையில் மன்னன் வினையாதித்தன் ஆண்டான். இவன் முதலாம் விக்ரமாதித்தனின் மகன் ஆவான். வினையாதித்தன் ஆட்சியின்போது சாளுக்கியப் பேரரசு பொதுவாக அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவன் யுத்தமல்லன், சாகசரசிகன், சத்தியஷிரேயன் ஆகிய பட்டங்களைப் பெற்றிருந்தான்.

கல்வெட்டுகள்

ஜிஜூரி பதிவு

வினையாதித்தனின் கல்வெட்டுகள் இவன் பெட்ரா வெற்றிகள் குறித்து பேசுகின்றன. வினையாதித்தன் பல்லவர்களுக்கு எதிராக தனது தந்தையுடன் இணைந்து போராடினான். கி.பி.684ம் ஆண்டின் ஜிஜூரி பதிவுகளின்படி, இவன் பல்லவர் , களப்பிரர்கள் , சேரர்கள், மத்திய இந்தியாவின் காளச் சூரியர்களையும் வென்றதாக குறிக்கிறது.

கோலாப்பூர் பட்டையங்கள்

கி.பி.678 ஆண்டைய கோலாப்பூர் பட்டையங்களில் இருந்து இவன் லங்கா,கெமர் ஆகிய அரசுகளை தோற்கடித்ததாக குறிப்பிடுகின்றன. கெமர் என்பது தற்போதைய கம்போடியாவகை இருக்கலாம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

வக்கலேரி பட்டயங்கள்

வக்கலேரி பட்டயங்கள் இலங்கை மற்றும் பாரசீக ஆட்சியாளர்கள் சாளுக்கியர்களுக்குத் திரை செலுத்தியதாகக் கூறுகின்றன. இலங்கை மற்றும் பாரசீகத் தலைவர்கள் அந்த நாடுகளில் உள்ள உறுதியற்ற அரசியல் நிலைமை கருதி, சாளுக்கியரிடம் பாதுகாப்புவேண்டி இருந்தனர். இந்த நேரத்தில், பாரசீகம் இஸ்லாமிய படையெடுப்பின் கீழ் இருந்தது.

வினையாதித்தன் தனது மகன் விஜயாதித்தன் தலைமையில் வடக்கில் படைகளை அனுப்பினான். சில தகவல்களின்படி, விஜயாதித்தன் அங்கு பிடிபட்டு சிறைவைக்கப்பட்டு சில காலத்திற்குப் பிறகு, தப்பி சாளுக்கிய நாடு திரும்பினான். இந்தப் பயணம் பற்றி வேறு எந்தத் தகவலும் இல்லை. வினையாதித்தன் கி.பி. 692ம் ஆண்டு இல் சீன அரசவைக்கு ஒரு தூதரை அனுப்பினான் என்று தெரிகிறது.

விஜயாதித்தன்

விஜயாதித்தன் கி.பி. 696ம் ஆண்டு தனது தந்தைக்குப்பின் சாளுக்கிய மன்னனாகப் பதவியேற்றான். விஜயாதித்தன் கி.பி. 696ம் ஆண்டு முதல் கி.பி.733ம் ஆண்டு வரையில் சாளுக்கிய மன்னனாக ஆட்சி புரிந்தான். விஜயாதித்தனின் நீண்ட ஆட்சிக்காலத்தில் சாளுக்கிய நாட்டில் நிலவிய பொது அமைதி மற்றும் வளமை குறிப்பிடத்தக்கது. விஜயாதித்தனும் தன் முன்னோர்போல பல கோயில்களைக் கட்டினான். பரம்பரை பகைவர்களான பல்லவர்களுடன் போர் புரிந்தான். சாளுக்கியர்களின் ஆட்சிக்கு எதிராக போராடிய அளுப்பர்களை தோற்கடித்தான். மங்களூரில் பாண்டியர் படையெடுப்பை முறியடித்தான். இவனுக்குப்பின் இவனது மகன் இரண்டாம் விக்ரமாதித்யன் 733ம் ஆண்டு சாளுக்கிய மன்னராகப் பதவியேற்றான்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *