சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்ரமாதித்னுக்குப் பின்னர் அவன் மகன் இரண்டாம் கீர்த்திவர்மன் அல்லது ரஹப்பா என்பவன் சாளுக்கிய மண்ணகப் பதவியேற்றான். இரண்டாம் கீர்த்திவர்மன் சாளுக்கிய மன்னனாகப் பதவியேற்றபொழுது சாளுக்கியப் பேரரசு பறந்து விரிந்த எல்லைகளைக் கொண்டிருந்தது. மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய படையை கொண்டிருந்தது. சாளுக்கிய மன்னனாக இரண்டாம் கீர்த்திவர்மன் கி.பி.746ம் ஆண்டு முதல் கி.பி.753ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தான். இவன் ஆட்சிக்காலத்தில் பேரரசாக விளங்கிய சாளுக்ய சாம்ராஜ்யம் அதன் நிலப்பகுதிகளை பகைவர்களுக்கு இழந்து மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டது. ஏறக்குறைய 220 ஆண்டுகாலம் ஆண்ட வாதாபி சாளுக்கிய மன்னர் பரம்பரையின் இறுதி மன்னன் இரண்டாம் கீர்த்திவர்மன் ஆவான். சாளுக்கிய சாம்ராஜ்ஜியத்தின் பரந்த ஆட்சி அதிகாரத்தை இராஷ்டிரகூடர்கள் மற்றும் பாண்டியர்கள் முடிவுக்குக் கொண்டுவந்தனர். இரண்டாம் கீர்த்திவர்மனின் ஆட்சி காலத்தில் சிற்றரசர்கள் நிலைக்குத் தள்ளப்பட்ட சாளுக்கியர்கள் மீண்டும் இரண்டாம் தைலப்பனால் 973ம் ஆண்டு எழுச்சி பெற்றது.
பாண்டியன் பராங்குசன் தனது ராஜ்ய எல்லையை விரிவாக்கும் பொருட்டு கங்க நாட்டின் மீது படையெடுத்து வந்தான். சாளுக்கியர்களின் நண்பர்களாக கங்க மன்னர்கள் விளங்கியதால், கங்க மன்னன் சிறீபுருசனுக்கு ஆதரவாக இரண்டாம் கீர்த்திவர்மன் தன் சாளுக்கியப் படிகளுடன் போருக்கு வந்தான். கி.பி.740ம் ஆண்டில் அல்லது 741ம் ஆண்டில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் கீர்த்திவர்மன் மற்றும் கங்க மன்னன் சிறீபுருசனின் இணைந்த படைகள் காவிரி ஆற்றின் கரையில் வேண்பை என்ற இடத்தில் பாண்டியன் பராங்குசனின் படைகளுடன் போரில் ஈடுபட்டன. இங்கு நடந்த போரில் பாண்டியன் மன்னன் பராங்குசன் மாபெரும் வெற்றி பெற்றான்.
வேள்விக்குடிச் செப்பேடு
பாண்டிய மன்னன் பராங்குசன் கங்க நாட்டின் மன்னனான சிறீபுருசனை போரில் வென்று அவன் மகள் பூதசுந்தரியை மணந்தான். இவர்கள் இருவருக்கும் பிறந்தவனே பராந்தகன் ஆவான். வேள்விக்குடிச் செப்பேட்டின் வாயிலாக இந்தத் தகவல்களை உறுதிசெய்ய முடிகிறது. பாண்டிய மன்னன் பராங்குசன் வடக்கில் உள்ள மாளவ நாட்டையும் போரில் வென்றான். வெற்றியின் பரிசாக மாளவநாட்டு மன்னரின் மகளை மணந்து கொண்டான்
இராஷ்டிரகூடர்கள்
இரண்டாம் கீர்த்திவர்மனின் ஆட்சிக்காலத்தில் இராஷ்டிரகூட மன்னர்கள் வலிமைபெறத் துவங்கினர். இராஷ்டிரகூட மன்னன் தந்திதுர்கன் அவனின் ஆட்சி எல்லைகளை விரிவாக்கம் செய்யத் துவங்கினான். மன்னன் தந்திதுர்கன், தற்போதைய எல்லோராவைச் சுற்றித் தனது இராஷ்டிரகூட பேரரசை விரிவாக்கினான். இதைத் தொடர்ந்து தந்திதுர்கன், சாளுக்கியப் பேரரசின் வடக்கு மாகாணங்களின் கட்டுப்பாட்டைக் குலைத்தான்.
மேலும் தந்திதுர்கன் கிழக்கு மற்றும் தெலுங்கு மாகாணங்களில் சாளுக்கியரைச் சுற்றியுள்ள கலிங்க மன்னர்கள் மற்றும் கோசல மன்னர்களிடம் கூட்டணி அமைத்துக் கொண்டான். மேலும் தந்திதுர்கனின் கூட்டணியில் பல்லவன் மன்னன் நந்திவர்மனும் இணைந்துகொண்டான். இவ்வாறு சாளுக்கியப் பேரரசை சுற்றிலும் பகைவர்கள் உருவாயினர். சாளுக்கிய மன்னன் இரண்டாம் கீர்த்திவர்மன் எந்தத் திசையிலும் படை உதவி புரிவதற்கு யாரும் இன்றி தனிமை படுத்தப்பட்டான்.
இறுதிப் போர்
சாளுக்கிய மன்னன் இரண்டாம் கீர்த்திவர்மன் மீதான கடைசிப் போர் கி.பி. 752ம் ஆண்டு நடைபெற்றது. இந்தப் போரில் சாளுக்கியர்கள் முழுவதும் தோற்கடிக்கப்பட்டனர். மன்னன் இரண்டாம் கீர்த்திவர்மனே வாதாபி சாளுக்கியரில் இறுதி அரசன் ஆவான்.