முதலாம் சோமேசுவரனின் தற்கொலைக்குப் பின்னர் அவனின் மகன் இரண்டாம் சோமேசுவரன் சாளுக்கிய நாட்டின் மன்னனாகப் பதவியேற்றான். இரண்டாம் சோமேசுவரன் கி.பி.1068ம் ஆண்டு முதல் கி.பி.1076ம் ஆண்டு வரையில் சாளுக்கிய மன்னனாக ஆட்சி புரிந்தான்.
இரண்டாம் சோமேசுவரன் ஆட்சிக்கு வந்த உடன் சோழர்களின் படையெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது . சோழர் படைகள் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து கர்நூல் மாவட்டத்தில் உள்ள குட்டி என்ற நகரத்தை முற்றுகையிட்டனர். மேலும் கம்பில்லியைத் தாக்கினர். மேலை சாளுக்கிய பேரரசை காப்பதற்காக இரண்டாம் சோமேசுவரனுக்கு அவன் தம்பி ஆறாம் விக்ரமாதித்தன் உதவாமல் மேலை சாளுக்கிய அரியணையைக் கைப்பற்ற இதை வாய்ப்பாகக் கருதினான்.
சோழ படையெடுப்பால் நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தை ஆறாம் விக்ரமாதித்தன் தனக்கு சாதகமாக பயன் படுத்த தகுந்த வாய்ப்பாகக்கிக் கொண்டான். ஆறாம் விக்ரமாதித்தன் தனது ஆதரவாளர்களை திரட்டி, அவர்கள் உதவி மூலம் சோழ மன்னர் வீரராஜேந்திரனிடம் பேச்சுவார்த்தைகளை தொடங்கினான்.ஆறாம் விக்ரமாதித்தன் வீரராஜேந்திரன் ஆகியோரின் கூட்டணி ஏற்பட்டது. இதன் மூலம் மேலை சாளுக்கிய நாட்டின் தெற்குப்பகுதி ஆறாம் விக்ரமாதித்தன் வசம் வந்தது.
சோழப் பேரரசன் வீரராஜேந்திரசோழன் 1070ம் ஆண்டில் ல் இறந்தான். வீரராஜேந்திர சோழரின் மறைவைத் தொடர்ந்து உள்நாட்டில் கலகங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆறாம் விக்ரமாதித்தன் காஞ்சிபுரம் விரைந்தார். காஞ்சிபுரத்தில் கலகத்தை கட்டுப்படுத்தினார். கங்கை கொண்ட சோழபுரத்தில் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பத்தை போர்புரிந்து கட்டுப்படுத்தினார். இதைத் தொடர்ந்து சோழ மன்னராக அதிராஜேந்திர சோழர் பதவியேற்றார். அமைதி திரும்பிய சோழ நாட்டில் சில மாதங்கள் இருந்த ஆறாம் விக்ரமாதித்தன் அவர் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார். ஆறாம் விக்ரமாதித்தன் திரும்பிய சில நாட்களிலேயே வாரிசுகள் ஏதும் அற்ற அதிராஜேந்திர சோழர் இறந்ததும், கிழக்குச் சாளுக்கிய அரச மரபில் வந்த இளவரசன் அநபாயச் சாளுக்கியன் சோழ மன்னராகப் பதவியேற்றதும் நடைபெற்றது. இவன் பின்னர் முதலாம் குலோத்துங்க சோழன் என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.
மேலை சாளுக்கிய நாட்டின் வடபகுதியை இரண்டாம் சோமேஸ்வரனும் மேலை சாளுக்கிய நாட்டின் தென் பகுதியை ஆறாம் விக்கிரமாதித்தனும் வேங்கியை அவன் தம்பி விஜயாதித்தனும் ஆண்டனர். பின்னாளில் ஆறாம் விக்ரமாதித்தன் மேலை சாளுக்கிய நாட்டின் வட பகுதியையும் அவனின் நேரடி ஆட்சிக்குகே கீழ் கொண்டுவந்தான்.