ஐந்தாம் விக்கிரமாதித்தன்
சாளுக்கிய மன்னன் சத்யாசிரனுக்குப்பின் ஐந்தாம் விக்கிரமாதித்தன் சாளுக்கிய மன்னனாகப் பதவியேற்றான். ஐந்தாம் விக்கிரமாதித்தன் சாளுக்கிய மன்னனாக ஆட்சியில் இருந்தது மிகவும் குறுகிய காலமே. ஐந்தாம் விக்கிரமாதித்தன் கி.பி.1008ம் ஆண்டு முதல் கி.பி.1015ம் ஆண்டு வரையில் சாளுக்கிய மன்னனாக ஆட்சி புரிந்தான். ஐந்தாம் விக்கிரமாதித்தன் சத்யாசிரயனின் மருமகனாவான். ஐந்தாம் விக்கிரமாதித்தனுக்குப் பின்னர் இவனது சகோதரன் இரண்டாம் ஜெயசிம்மன் கி.பி.1015 இல் ஆட்சிப் பொறுப்பேற்றான்.
இரண்டாம் ஜெயசிம்மன்
இரண்டாம் ஜெயசிம்மன் கி.பி.1015 ம் ஆண்டு முதல் கி.பி.1042 ம் ஆண்டு வரையில் சாளுக்கிய மன்னனாக ஆட்சி புரிந்தான். இவன் இரண்டாம் ஜெகதேகமல்லன், மல்லிகமோட என்றும் அழைக்கப்படுகிறான்.
சோழர்களுடன் போர்கள்
இரண்டாம் ஜெயசிம்மன் காலத்திலும் மேலை சாளுக்கிய நாட்டைக் காக்க பல போர்கள் நடைபெற்றது. தெற்கில் சோழப் பேரரசுடனும் வடக்கில் பரமரா வம்சத்தவர்களுடனும் பல முனைகளில் போராட வேண்டி இருந்தது. இரண்டாம் ஜெயசிம்மனின் ஆட்சிக் காலம் கன்னட இலக்கிய வளர்ச்சியில் ஒரு முக்கியமான காலகட்டமாகும். இரண்டாம் ஜெயசிம்மனின் அமைச்சர் கன்னட எழுத்தாளரான துர்கசிம்மா ஆவார். இவர் பஞ்சதந்திரத்தை கி.பி. 1031ம் ஆண்டு ல் எழுதியவர்.
சோப்ரா போன்ற வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி, இந்தக் காலத்தில் வேங்கி நாடு என்றழைக்கப்படும் கீழை சாளுக்கிய நாட்டை திருமண உறவுகளால் சோழர்கள் தங்கள் கைகளில் உறுதியாக பற்றியிருந்தனர். இது மேலைச்சாளுக்கியருக்கு ஏமாற்றத்தையும், எரிச்சலையும் தந்தது. இதுவே சோழர்களுக்கும் மேலை சாளுக்ய மன்னர்களுக்கும் பல போர்கள் ஏற்பட காரணமாய் அமைத்தது.
சோழப் பேரரசர் இராஜேந்திர சோழன் கீழைச் சாளுக்கிய நாட்டின் மீதான கட்டுப்பாட்டை நிலைநாட்டியது மட்டுமல்லாது தொடர்ந்து மேலைச் சாளுக்கிய பிரதேசத்தின் வடக்குப் பகுதிகளிலும் தங்கள் பேரரசை விரிவாக்க முயற்சி மேற்கொண்டான்.
இராஜேந்திர சோழன் ஈழத்திலும் பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களிலும் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த சமயத்தில், வடதிசையில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் ஜெயசிம்மன், சத்யாச்சிரயன் காலத்தில் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கினான். சாளுக்கிய மன்னன் இரண்டாம் ஜெயசிம்மன் இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.
இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும், தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் ஏழாம் விஜயாதித்தனை ஆதரித்தான்.
இராஜேந்திர சோழன் விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான். இராஜராஜ நரேந்திரன் இராஜேந்திர சோழனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளும் இராஜேந்திர சோழனின் தங்கை குந்தவைக்கும் பிறந்தவன் ஆவான்.
இதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன், இராஜேந்திர சோழன் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திர சோழன் வென்றார். ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரை ஆற்றின் கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திர சோழன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு கி.பி. 1022இல் திருமணம் செய்த்து வைத்தார். இரண்டாம் ஜெயசிம்மன் கி.பி. 1031இல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனைக் கீழைச் சாளுக்கிய மன்னனாக்கினான் இதன் காரணமாக மீண்டும் ஒரு முறை இராஜேந்திர சோழன் வேங்கி மீது படையெடுத்துக் கி.பி.1035இல் விஜயாதித்தனையும், அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரேந்திரனை வேங்கி மன்னனாக அறிவித்தார்.
மால்வா படையெடுப்பு
மால்வாவைச் சேர்ந்த பரமரா வம்சத்தின் மன்னன் போஜா என்பவன் அவனது முன்னோடியான மஞ்சா அடைந்த தோல்விக்குப் பழிவாங்க வேண்டுமென வடக்கில் இருந்து சாளுக்கிய அரசின் மீது படையெடுத்து வட கொங்கன் லதா (நவீன குஜராத்) பகுதிகளைக் கைப்பற்றி சிலகாலம் தங்கள் வசம் வைத்திருந்தனர். மூன்றாம் பில்லம்மன் என்னும் சியுனா (யாதவ) மரபின் சிற்றரசன் தேவகிரியை (நவீன தௌலதாபாத் ) ஆண்டுவந்தான் இவன் போஜா வுக்கு ஆதரவாளனாகி இரண்டாம் ஜெயசிம்மனுக்கு எதிராகப் போராடினான். வரலாற்றாசிரியர் சென் இந்த படையெடுப்பு போஜா, காளச்சூரியப் ஆட்சியாளர் கங்கேயாதவா மற்றும் இராஜேந்திர சோழன் ஆகியோரின் கூட்டமைப்பின் காரணமாக இருக்கலாம் எனக் கருதுகிறார். ஆனால் இரண்டாம் ஜெயசிம்மன் கி.பி.1024 இல் செய்த படையெடுப்புக்கள் மூலமாக அவன் இழந்த அனைத்து வடக்குப் பகுதிகளையும் வெற்றிகரமாக மீட்டான். மூன்றாம் பில்லம்மனுடன் சமாதானமாகப் போகும் விதமாக இரண்டாம் ஜெயசிம்மனின் ஒரு மகளை அவனுக்குத் திருமணம் செய்வித்தான்