மேலை சாளுக்கியப் பரம்பரையை துவக்கியவனும் அடங முதல் மன்னனுமான இரண்டாம் தைலப்பன் இறந்த பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சத்தியாசிரயன் கி.பி.997ம் ஆண்டு முதல் கி.பி.1008ம் ஆண்டு வரையில் சாளுக்கிய மன்னனாக ஆட்சி புரிந்தான்.
சத்திகா, இரிவபெட்டங்கா என்பவை இவனது வேறு பெயர்கள். சத்தியாசிரயன் அவன் ஆட்சிகே காலத்தில் பல போர்கள் புரிந்துள்ளான். சோழப் பேரரசு, செடி அரசு, குஜராத் சாளுக்கிய மன்னர்கள் ஆகியோரிடம் பல போர்களைப் புரிந்துள்ளான்.
இவன் தந்தை இரண்டாம் தைலப்பன் போலவே இவனும் ஒரு பெரிய வீரனாகத் திகழ்ந்தான். சத்தியாசிரயன் பல பொறிகளில் வெற்றிகண்டாலும் சில போர்களில் தோல்வியும் கண்டுள்ளான்.
சத்தியாசிரயன் கன்னடப் புலவரான் ரண்ண என்பவரை ஆதரித்தான். இப்புலவர் சத்தியாசிரயனை வலிமையில் பாண்டவ இளவரசன் பீமனுடன் தனது காவியமான சாகசபீமவிஜய-வில் ஒப்பிட்டுள்ளார். சத்தியாசிரயன் அகலவர்சா, அகலன்கச்சாரிதா,சாகசபீமா போன்ற பட்டங்களைக் கொண்டிருந்தான்
சத்தியாசிரயன் ஆட்சிக்காலத்தில் சோழப் பேரரசுடன் ஒரு பெரிய போர் ஏற்பட்டது, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராஜராஜ சோழன் சாளுக்கிய நாட்டின் மீது படை எடுத்து சென்றார் . சாளுக்கிய மன்னனான சத்தியாசிரயன் இராஜராஜ சோழனின் கடல் போன்ற பெரும்படையக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் தெரியவருகிறது. சத்தியாசிரயன் செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு இராஜராஜ சோழன் அளித்தான் என்று இராஜராஜ சோழன்ஆட்சியின் பிற்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டுகளில் காணப்படுகிறது. சோழர்களின் வடமேற்குப் படையெடுப்பின் மூலம் மைசூரில் கங்கர்களும் நுளம்பர்களும் ஆண்ட பகுதிகளோடு ஏறக்குறைய இப்போதையை பெல்லாரி மாவட்டம் முழுவதும் சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது.
1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இதிலிருந்து சக்திவர்மன் கி.பி 999ல் அரியணையில் அமர்ந்தான் என்று தெளிவாகிறது.
வீமனின் வீழ்ச்சியையும் வேங்கி நாடு இராஜராஜ சோழனின் அதிகாரத்திற்கு உட்பட்டதையும் மேலைச் சாளுக்கியர்களால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்குச் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது.