முதலாம் சோமேசுவரன்

இரண்டாம் ஜெயசிம்மனுக்குப் பின்னர் முதலாம் சோமேசுவரன் மேலை சாளுக்கிய மன்னனாகப் பதவியேற்றான்.முதலாம் சோமேசுவரன் கி.பி.1042ம் ஆண்டு முதல் கி.பி.1068ம் ஆண்டு வரையில் சாளுக்கிய மன்னனாக ஆட்சி புரிந்தான். முதலாம் சோமேசுவரனின் வேறு பெயர்கள் ஆகவமல்லன், திரிலோகமல்லன் ஆகும்

முதலாம் சோமேசுவரன் பிற்கால சாளுக்கியரில் குறிப்பிடத்தக்க மன்னனாவான். இவர்கள் கல்யாணி சாளுக்கியர் என்றும் அழைக்கப்பட்டனர். சோழர்களுடனான போர்களில் பல தோல்விகள் அடைந்த போதிலும், பல சந்தர்ப்பங்களில் வேங்கியின் அரியணையில் யார் அமர்வது என்பதைத் தீர்மானித்தான். மத்திய இந்தியாவில் முதலாம் சோமேசுவரனின் ஆட்சியின் போது, சாளுக்கிய பேரரசின் வடக்கு எல்லை குஜராத்வரை பரவியிருந்தது. ஹொய்சளர்கள் சாளுக்கியர்களுக்கு அடங்கி ஆண்டுவந்தனர். ஹொய்சள வினையாதித்தனின் மகள் அல்லது தங்கையான ஹோய்சலா தேவி என்பவள் சோமேசுவரனின் அரசிகளில் ஒருத்தியாவாள். மேற்கே முதலாம் சோமேசுவரன் கொங்கண் மண்டலத்தை மீண்டும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தான். கிழக்கில் அனந்தபூர், கர்னூல்வரை இவனது கட்டுப்பாட்டில் இருந்தது. முதலாம் சோமேசுவரன் தனது தலைநகரை மான்யக்டாவில் இருந்து கல்யாணிக்கு மாற்றினான் இந்த இடம் தற்போது பிகார் மாவட்டத்தில் பசவகல்யாணா என்று அழைக்கப்படுகிறது.

முதலாம் சோமேசுவரன் வேங்கி விவகாரங்களில் தலையிட்டு, அப்பகுதியின் மீது படையெடுத்தான். ஆனால் சோழருக்கு எதிரான இப்போரில் இராஜாதிராஜ சோழனிடம் அமராவதியில் தோல்வியடைந்தான்.இராஜாதிராஜ சோழன் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள தன்னடா (“தான்யகட்டா”) போரில் முதலாம் சோமேசுவரனைத் தோற்கடித்தான். மேலைச் சாளுக்கிய படைகள் கிருஷ்ணா நதியைத் தாண்டி பின்வாங்கின. மேலும் கொல்லிப்பாக்கிக் கோட்டை (குல்பார்க்) தரைமட்டமாக்கப்பட்டது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து கம்பிலி மற்றும் புந்தர் ஆகியவை சோழர்களால் வெற்றிகொள்ளப்பட்டன.
சோழர்கள் வெற்றிகொண்ட விவரங்கள் மணிமங்கலம் சாசனங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. சோழர்கள் தங்களது வெற்றித்தூணை யட்டகிரியில் தற்போது யாத்கிர் மாவட்டத்தில் உள்ள யத்திகர் இடத்தில் நிறுவினர். சோழர்கள் கி.பி.1045 இல் சாளுக்கிய தலைநகரான கல்யாணியைச் சூறையாடினர். தலைநகர் கல்யாணியில் இராஜாதிராஜ சோழன் வீராபிசேகம் செய்துகொண்டான். மேலும் விஜயராஜேந்திரன் என்ற பட்டமும் சூட்டிக்கொண்டான்.

சில காலம் சோழர்களின் கவனம் வேங்கி, கலிங்கம் ஆகியவற்றின் மீது சற்று குறைந்திருந்தது. இழந்த புகழை மீட்க முதலாம் சோமேசுவரன் கி.பி.1050ம் ஆண்டு வக்கீல் மீண்டும் தனது ஆதிக்கத்தை கீழை சாலிகிய நாட்டின் மீது நிலைநாட்டினன்.முதலாம் சோமேசுவரனின் எல்லைகள் கலிங்கம்வரை தற்போதைய ஒரிசா வரை இருந்தது. மேலும் முதலாம் சோமேசுவரன் காஞ்சிபுரத்தில் சோழர்கள்மீது எதிர் தாக்குதல் தொடுத்தான்.

கி.பி. 1054ல் துங்கபத்திரை ஆற்றுக்கு அருகில் நடந்த ஒரு போரில் மேலைச்சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரனுடன் நடைபெற்ற போரில் கொப்பம் எனும் இடத்தில் இராஜாதிராஜ சோழன் இறந்தார். இப்போரில் முதலாம் சோமேசுவரன் தனது சகோதரன் ஜெயசிம்மனை இழக்க வேண்டியிருந்தது.

இராஜாதிராஜ சோழன் இறந்ததைத் தொடர்ந்து இரண்டாம் இராஜேந்திர சோழன் போரைத் தொடர்ந்து நடத்தி மேலைச்சாளுக்கியர்களைத் தோற்கடித்து சோழர்களுக்கு வெற்றி தேடித்தார். இரண்டாம் இராஜேந்திர சோழன் முதலாம் இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகன் ஆவார். போரில் இராஜாதிராஜ சோழன் இறந்ததைத் தொடர்ந்து போர்க் களத்திலேயே சோழப் பேரரசின் மன்னனாக முடி சூட்டிக்கொண்டார்.

இரண்டாம் இராஜேந்திர சோழன் தனது வெற்றியின் சின்னமாக ஒரு வெற்றித் தூணை கொல்லாபுராவில் (தற்போதைய கோலாப்பூர் ) நிறுவி தனது தலைநகரான கங்கை கொண்ட சோழபுரம் திரும்பினான். மேலை சாளுக்கிய ராணிகள் சத்யாவதி, சங்கப்பாய் ஆகியோர் உட்பட மேலை சாளுக்கியரிடம் கைப்பற்றிய மிகுதியான செல்வங்களையும் கொண்டு வந்தான்.

கி.பி.1059லும் இரண்டாம் இராஜேந்திர சோழனுக்கும் முதலாம் சோமேசுவரனுக்கும் போர்கள் நடந்தன. இரண்டாம் ராஜேந்திர சோழனால் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் துங்கபத்ரா நதிக்கரையில் சோழர்கள் படை தோற்கடிக்கப்பட்டது.
முதலாம் சோமேசுவன் இந்த வெற்றியைக் கொண்டாட அண்ணிகேரி (தற்போதைய தார்வாட் மாவட்டம்) என்ற இடத்தில் ஒரு கோயில் கட்டினான். ஆயினும் கி.பி.1059ம் ஆண்டு துங்கபத்ரை நதிக்கரையில் முடக்காறு இடத்தில் இரண்டாம் இராஜேந்திர சோழனுடன் நடந்த மற்றொரு போரில், முதலாம் சோமேசுவரன் மிகப்பெரிய தோவியைச் சந்தித்தான்.

வேங்கியில் கி.பி.1061இல் கீழைச் சாளுக்கிய மன்னன் இராஜராஜ நரேந்திரன் இறந்ததையடுத்து மீண்டும் அரியணை போட்டி வெடித்தது. முதலாம் சோமேசுவரன் இப்போது இரண்டாம் விஜயாதித்தனின் மகன் சக்கதிவர்மனை சிம்மாசனத்தில் அமர்த்த முயன்றான். சோழர்கள் இறந்துபோன அரசன் ராஜராஜ நரேந்திரன் மகன் இளவரசன் இராஜேந்திரனை மன்னனாக்க விரும்பினர். இதனால் சோழர்களுக்கும் மேலை சாளுக்கியர்களுக்கும் முந்தும் போர் மூண்டது.

கி.பி.1062இல் கூடல்சங்கமதில் ஒரு பெரிய போர் நடைபெற்றது. இந்த இடம் தற்போய சிமோகா மாவட்டத்தின் கூடலி என்ற சிற்றூராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இப்போரில் முதலாம் சோமேசுவரனை சோழர்கள் தோற்கடித்தனர். முதலாம் சோமேசுவரன் இரண்டு படைகளைத் தனது மகன்கள் இளவரசர் ஆறாம் விக்ரமாதித்தன், ஜெயசிம்மன் ஆகியோர்கீழ் சோழர் ஆட்சியில் இருந்த கங்கப்பாடி மீதும் (மைசூரின் தெற்குப் பகுதி) தனது தளபதி சாமுண்டராயாவின் கீழ் மற்றொரு படையையும் அனுப்பினான். எனினும், இரண்டாம் இராஜேந்திரன் இந்த இரு படைகளையும் தோற்கடித்தான்.

முதலாம் சோமேசுவரன் இராணுவரீதியாவும், இராஜதந்திரரீதியாகவும் தன் ராஜ்ஜியத்தை வலுவூட்டும் வேலையில் ஈடுபட்டான். கிழக்கில் நாகவம்சி ஆட்சியாளர் தரவர்சன் மற்றும் கீழைக் கங்கர் மரபின் கலிங்க மன்னர் இரண்டாம் வஜ்ரஹஸ்தன் ஆகியோரைத் தனது கூட்டணியில் சேர்த்துக்கொண்டான். மேலும் முதலாம் சோமேசுவரனுக்கு விஜயவாடாவில் தங்கியிருந்த பரமரா வம்சத்தைச் சேர்ந்த இளவரசர் ஜன்னன்நாதன் ஆகியோர் உதவினர்.

சோழர்களிடம் போரில் தோற்ற அவமானத்தைத் துடைக்கவும் கீழை சாளுக்கிய நாடான வேங்கியைக் கைப்பற்றவும் கருதி மேலை சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரன் மீண்டும் ஒரு போருக்கு அழைப்பு விடுத்தான். முன்னர் தோல்வியடைந்த அதே கூடல் சங்கமம் என்னும் இடத்தைப் போருக்கான இடமாகவும் குறித்திருந்தான். போருக்கான அழைப்பை ஏற்ற வீரராஜேந்திர சோழன் படைகளுடன் குறிப்பிட்ட இடத்திற்கு அருகே முகாமிட்டுக் காத்திருந்தார். போருக்காகக் குறிக்கப்பட்ட தினமான 10 செப்டெம்பர் 1067 அன்று மேலை சாளுக்கியப் படைகள் போருக்கு வரவில்லை. மேலும் ஒரு மாத கால காலம் சோழர்படைகள் அங்கு போருக்காகக் காத்திருந்தது. பொறுமை இழந்த வீரராஜேந்திரசோழன் அனைத்து முனைகளிலும் படையெடுத்து வேங்கி, விஜயவாடா, கலிங்கம், நாகவம்சி,சித்ரதுர்கா ஆகிய இடங்களில் வெற்றி பெற்று, ஒரு வெற்றித் தூணை துங்கபத்ரா நதிக்கரையில் அமைத்தான். இந்நிலையில் முதலாம் சோமேசுவரன் குருவட்டி (தற்போதைய பெல்லாரி மாவட்டம்) என்ற இடத்தில் மார்ச்29, 1068 அன்று துங்கபத்ரை ஆற்றில் தற்கொலை செய்து கொண்டான்.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *