விஜயநகரப் பேரரசு – பகுதி 3

சாளுவ நரசிம்ம தேவ ராயன்

சாளுவ நரசிம்ம தேவ ராயன் கி.பி. 1485ம் ஆண்டு முதல் கி.பி.1491ம் ஆண்டு வரையில் விஜயநகரப் பேரரசை ஆட்சிபுரிந்தான். விஜயநகரப் பேரரசை ஆண்ட சாளுவ மரபின் தோற்றுவித்தவனும் இவையே ஆவான். இவனுடைய தந்தை சாளுவ குண்டா, சந்திரகிரியின் ஆளுநராக இருந்தவன்.

விஜயநகரப் பேரரசன் பிரௌத ராயன் அவன் தந்தை இரண்டாம் விருபக்ஷ ராயனைக் கொன்று விஜயநகரப் பேரரசின் மன்னனாகக் பதவியேற்றதால் மக்களால் மதிக்கப்படாத ஒரு அரசனாக இருந்தான். இந்நிலையில் பிரௌத ராயனை மன்னர் பதவியிலிருந்து அகற்றி விஜயநகரப் பேரரசின் மன்னனாக சாளுவ நரசிம்ம தேவ ராயன் பதவியேற்றான்.

இவன் காலத்தில் பேரரசு பெருங் குழப்பங்களுக்கு உள்ளானது. உள்நாட்டுச் சிக்கல்கள் மிகையாக இருந்தன. பாமினி சுல்தான்கள் ஒரு புறமும் போர்த்துகீசியர்கள் மறுபுறமும் விஜயநகரப் பேரரசிற்கு ஆபத்துக்களை ஏற்படுத்தினார்.

பேரரசனாக ஆட்சியைத் தொடங்கிய சாளுவ நரசிம்மன், பேரரசுக்கு ஏற்பட்ட ஆபத்துக்களைச் சமாளித்தது மட்டுமன்றி அதன் எல்லைகளை விரிவாக்குவதிலும் ஈடுபட்டான். எனினும், உள்நாட்டில் பல்வேறு பகுதித் தலைவர்களிடமிருந்து தொடர்ந்து குழப்பங்கள் ஏற்பட்டவண்ணம் இருந்தன. 1491 அளவில் இவன் உதயகிரியை கஜபதி பேரரசர் கபிலேந்திராவிடம் இழந்தான். மைசூர் பகுதியைச் சேர்ந்த உம்மாத்தூர் தலைவர்கள், ஹடவல்லியைச் சேர்ந்த சாளுவர்கள், கர்காலாவின் சந்தாராக்கள், ஸ்ரீரங்கப்பட்டினம், குடப்பாவின் பேரணிப்பாட்டைச் சேர்ந்த சம்பேதர்கள் என்பவர்களிடமிருந்தும் ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

1489 இல் உதயகிரி தொடர்பாக கஜபதியுடன் நிகழ்ந்த போர் சாளுவ நரசிம்மனுக்குப் பெரும் சீரழிவாக முடிந்தது. அப்போரில் இவன் பிடிபட்டு, உதயகிரிக் கோட்டையையும் அதைச் சுற்றிய இடங்களையும் விட்டுக்கொடுத்த பின்னர் விடுவிக்கப்பட்டான். எனினும், கர்நாடகத்தின் மங்களூர் நாட்டின் மேற்குத் துறைமுகங்களான, பாத்கல், ஹொன்னாவர், பாக்கனூர் ஆகிவற்றைக் கைப்பற்றுவதில் இவன் வெற்றி பெற்றான். இவ்வெற்றிகள், அராபிய வணிகர்களிடம் இருந்து படைகளுக்கு வேண்டிய குதிரைகளைப் பெறுவதில் பெரிதும் உதவியது. சாளுவ நரசிம்ம தேவ ராயன் 1491 ஆம் ஆண்டில் காலமானான்.

திம்ம பூபாலன்

சாளுவ நரசிம்ம தேவ ராயன் இறந்ததைத் தொடர்ந்து அவன் மகன் திம்ம பூபாலன் விஜயநகரப் பேரரசின் மன்னனாகப் பதவியேற்றான். பதவியேற்ற திம்ம பூபாலன் அவ்வாண்டிலேயே கொல்லப்பட்டான். சாளுவ நரசிம்ம தேவ ராயனின் இன்னொரு மகன் சிறுவனாக இருந்தான். அரச குடும்பத்துக்கு விசுவாசமானவனாக இருந்த துளுவ நரச நாயக்கன், அவனை நரசிம்ம ராயன் என்ற பெயரில் முடிசூட்டுவித்து, அவன் சார்பில் தானே நாட்டின் ஆட்சியைக் கவனித்து வந்தான்.

இரண்டாம் நரசிம்ம ராயன்

இரண்டாம் நரசிம்ம ராயன் விஜயநகரப் பேரரசின் மன்னனாக இளம் வயதிலேயே பதவியேற்றான். எனினும், இவனது தந்தையான சாளுவ நரசிம்ம ராயனின் கீழ் விசுவாசமான தளபதியாக இருந்த துளுவ நரச நாயக்கன் இவன் சார்பில் ஆட்சியை நடத்திவந்தான். இரண்டாம் நரசிம்ம ராயன் உண்மையில் காவலில் வைக்கப்பட்டு இருந்ததாகவே கருதப்படுகிறது. 1503 ஆம் ஆண்டில் துளுவ நரச நாயக்கன் தனது பொறுப்புக்களைத் தனது மகனான வீரநரசிம்ம ராயனிடம் ஒப்படைத்தான். இவனும் ஒரு பேரரசன் போலவே நிர்வாகத்தை நடத்திவந்தான். இரண்டாம் நரசிம்ம ராயன் 1505 ஆம் ஆண்டில் காவலில் வைக்கப்பட்டிருந்த பெனுகொண்டா என்னுமிடத்தில் கொல்லப்பட்டான். இதனைத் தொடர்ந்து வீரநரசிம்ம ராயன் தானே விஜயநகரப் பேரரசின் அரசனாக முடிசூடிக் கொண்டான்

துளுவ நரச நாயக்கன்

இரண்டாம் நரசிம்மராயன் சிறுவனாக இருந்ததால் அவன் சார்பில் துளுவ நரச நாயக்கனே விஜயநகரப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தினான். இக்காலம் விஜய நகரப் பேரரசின் சோதனைக் காலமாக விளங்கியது. உள்நாட்டிலும் குழப்பங்கள் மிகுந்திருந்தது. துளுவ நரச நாயக்கன் திறமையாகப் பேரரசை நிர்வகித்தான். பாமினி சுல்தான்களையும், கஜபதிகளையும் நாட்டை அணுகவொட்டாமல் வைத்திருந்தான். உள்ளூர்த் தலைவர்கள் பலரிடமிருந்து வந்த எதிர்ப்புக்களையும், பேரரசிலிருந்து விடுதலை பெற அவர்கள் எடுத்த முயற்சிகளையும் முறியடித்தான்.

1463 ஆம் ஆண்டளவில் சாளுவ நரசிம்மனின் ஆட்சிக்காலத்தில், காவிரிக்குத் தெற்கேயிருந்த பகுதிகள் விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிக் கொண்டன. 1496 ஆம் ஆண்டில் தெற்கு நோக்கிப் படையெடுத்த துளுவ நரச நாயக்கன், குழப்பம் விளைவித்த தலைவர்களை அடக்கினான். திருச்சி, தஞ்சை ஆகிய இடங்களின் ஆளுநர்களும் இவர்களுள் அடங்குவர். காவிரிக்குத் தெற்கே குமரி முனை வரையான பகுதிகள் அனைத்தையும் துளுவ நரச நாயக்கன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். சோழ, சேர நாடுகள், மதுரை, ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகியவற்றின் தலைவர்களும், விஜயநகரத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இவ் வெற்றிகள் அனைத்தும் 1497 இல் நிறைவு பெற்ற ஒரே படையெடுப்பிலேயே நிறைவேற்றினான்.
1496 இல், கஜபதி அரசன் பிரதாபருத்திரன் விஜயநகரத்தைத் தாக்கினான். எனினும், எவருக்கும் வெற்றி தோல்வியின்றி நகரத்தைப் பாதுகாப்பதில் துளுவ நரச நாயக்கன் வெற்றி பெற்றான்.

இக் காலத்தில் பாமினி சுல்தான் அரசு பல சிறு துண்டுகளாக உடைந்துவிட்டது. காசிம் பாரிட் என்னும் பாமினி அமைச்சன் பீஜாப்பூர் சுல்தானாகிய யூசுப் ஆதில் கான் என்பவனைத் தோற்கடிப்பதற்காக துளுவ நரச நாயக்கனிடம் உதவி கோரினான். இதற்காக, ராய்ச்சூர், முட்கல் கோட்டைகளைத் தருவதாகவும் ஒத்துக்கொண்டான். துளுவ நரச நாயக்கன் ராய்ச்சூர் ஆற்ரங்கரைப் பகுதிக்குப் படைகளை அனுப்பி அப்பகுதியை அழித்தான். யூசுப் ஆதில் இப்பகுதியை இழந்தான். திரும்பத் திரும்ப முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. போரில் துளுவ நரச நாயக்கனை வெல்ல முடியாது என்பதைக் கண்ட யூசுப் ஆதில் கான், அவனைச் சமாதானம் கோரி பீஜாப்பூருக்கு அழைத்தான். அங்கே துளுவ நரச நாயக்கனையும், எழுபது உயர்நிலை அதிகாரிகளையும் அவன் கொலை செய்தான்.

துளுவ நரச நாயக்கன் ஒரு சிறந்த நிர்வாக அமைப்பை உருவாக்கியதுடன், வலுவான படைகளையும் உருவாக்கினான். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்துவந்த எதிர்ப்புக்களை முறியடித்துத் தென்னிந்தியாவின் பெரும் நிலப்பரப்பைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தான். இது, பின்னாளில் கிருஷ்ண தேவ ராயனின் கீழ் விஜயநகரப் பேரரசு அதன் உச்ச நிலையை எட்டுவதற்கு அடிப்படையாக அமைந்தது.

வீரநரசிம்ம ராயன்

துளுவ நரச நாயக்கனுக்குப் பின்னர் அவன் மகன் வீரநரசிம்ம ராயன், இரண்டாம் நரசிம்ம ராயனின் சார்பில் விஜயநகரப் பேரரசை ஆண்டுவந்தான்.1505 ஆம் ஆண்டில் இரண்டாம் நரசிம்ம ராயன் காவலில் இருக்கும் போதே கொல்லப்பட்டான். இதனால், வீரநரசிம்ம ராயன் தானே விஜயநகரப் பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான். 1509 ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்த இவன் தன் ஆட்சிக் காலம் முழுவதையும், குழப்பம் விளைவித்துவந்த தலைவர்களுடன் போர்கள் புரிவதிலேயே செலவிட்டான்.

பீஜப்பூர் சுல்தான் யூசுப் ஆதில் கான் தெற்கு நோக்கித் தனது அரசை விரிவுபடுத்த முயன்றான். அரவிடு குடும்பத்தைச் சேர்ந்த ராமராஜன், அவனது மகன் திம்மா ஆகியோரின் துணையுடன், யூசுப் ஆதில் கான் தோற்கடிக்கப்பட்டான். அடோனி மற்றும் குர்நூல் பகுதிகள் விஜயநகரப் பேரரசின் பகுதிகளாயின. இக்காலத்தில் உம்மாத்தூர் தலைவன் மீண்டும் குழப்பம் விளைவித்தான். எனவே, வீரநரசிம்மன் அவனை அடக்குவதற்காகத் தெற்கு நோக்கிப் பயணமானான். அப்போது, தான் இல்லாதிருக்கும்போது ஆட்சியைக் கவனித்துக் கொள்வதற்காகத் தனது தம்பியான கிருஷ்ண தேவ ராயனைப் பதில் ஆட்சியாளனாக நியமித்தான். வீரநரசிம்மனின் இந்தத் தெற்கு நோக்கிய பயணம் வெற்றி தோல்விகளின் கலவையாகவே முடிந்தது. இப் படையெடுப்பின்போது போர்த்துகீசியர்கள் வீரநரசிம்மனுக்குக் குதிரைகள், பீரங்கிகள் முதலியவற்றைக் கொடுத்து உதவினர். இதற்காகப் பத்கல் துறைமுகத்தின் கட்டுப்பாட்டை அவர்கள் எதிர்பார்த்தனர்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *