விஜயநகரப் பேரரசு – பகுதி 5

ஸ்ரீரங்க தேவ ராயன்

ஸ்ரீரங்க தேவ ராயன் அல்லது முதலாம் ஸ்ரீரங்கா என அழைக்கப்பட்டவன், விஜயநகரப் பேரரசை ஆண்ட அரசர்களில் ஒருவன். இவன் கி.பி.1572ம் ஆண்டு முதன் கி.பி.1586ம் ஆண்டு வரையில் மன்னனாக ஆட்சிபுரிந்தான். அரவிடு மரபைச் சேர்ந்த இவன், அம் மரபின் இரண்டாவது அரசனாவான். இவன் சிதைந்து போயிருந்த பேரரசைச் சீர்செய்ய முயன்றான் எனினும், இவனது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் படையெடுப்புக்கள் அடிக்கடி நிகழ்ந்ததுடன் நாட்டின் சில நிலப்பகுதிகளை அவர்களிடம் இழக்கவும்வேண்டி ஏற்பட்டது. 1576 ஆம் ஆண்டில், சுல்தான் அலி ஆதில் ஷா பெனுகொண்டாவில் இருந்த ஸ்ரீரங்காவின் கோட்டையை மூன்று மாதங்களாக முற்றுகை இட்டிருந்தான். இறுதியில் ஆதில் ஷாவின் இந்துத் தளபதிகளின் உதவியினால், ஸ்ரீரங்காவின் படைகள் சுல்தானின் படைகளை முறியடித்தன.

1579 ஆம் ஆண்டில், சுல்தானின் தளபதி முராரி ராவ் என்பவன் பெரிய முஸ்லிம் படையுடன் வந்து கிருஷ்ணா ஆற்றுக்குத் தெற்கிலுள்ள பகுதிகளைத் தாக்கி அழித்தான். 1579 இன் இறுதிப் பகுதியில், அவன், அஹோபிலம் கோயிலைத் தாக்கினான். அதனை அழித்தபின், அங்கிருந்த மணிகள் பதித்த திருமாலின் தங்கச் சிலையைப் பெயர்த்து சுல்தானுக்குப் பரிசாக அனுப்பினான். ஸ்ரீரங்கா முராரி ராவையும், அவனுடைய கோல்கொண்டா படைகளையும் தாக்கித் தோற்கடித்தான். அவன் அப்படைகளை வடக்கே துரத்திவிட்டு, அவர்களிடம் இழந்த பகுதிகளையும் மீட்டான்.

புதிய சுல்தான் இப்ராஹிம் குதுப் ஷா கொண்டவிடுவைத் தாக்கி, உதயகிரிக் கோட்டையைக் கைப்பற்றினான். பின்னர் பெருந்தாக்குதல் ஒன்றை நடத்திப் பல உள்ளூர் மக்களைக் கொன்றான். எனினும் ஸ்ரீரங்கா சளைக்காமல் போராடி சுல்தானை உதயகிரியிலிருந்து துரத்தினான். சுல்தான் வினுகொண்டாவைத் தாக்கி அக் கோட்டையைக் கைப்பற்றினான். ஸ்ரீரங்கா, சென்னப்பாவுடன் வினுகொண்டாவுக்குச் சென்று கடும் சண்டையின் பின்னர் சுல்தானைத் தோற்கடித்தான். எனினும் சென்னப்பா போரில் இறந்தான். வெளியிலிருந்து வந்த பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, இவனது சகோதரர்களும் இவனுடன் ஒத்துழைக்காது பிரச்சினை கொடுத்தனர். மதுரை மற்றும் செஞ்சி நாயக்கர்களும் திறை கொடுக்காது தட்டிக் கழித்தனர். ஸ்ரீரங்கா குறைவான வளங்களுடன் தொடர்ந்தும் எதிரிகளைச் சமாளித்து வந்தான். ஸ்ரீரங்கா 1586 ஆம் ஆண்டில் வாரிசு இல்லாமல் காலமானான். இவனைத் தொடர்ந்து இவனது தம்பியான வெங்கடபதி ராயன் ஆட்சிக்கு வந்தான்.

வெங்கடபதி ராயன்

இரண்டாம் வெங்கடன் அல்லது வெங்கடபதி ராயன் விஜயநகர அரசை ஆண்ட அரவிடு மரபின் மூன்றாவது அரசனாவான். இவன் கி.பி.1586ம் ஆண்டு முதன் கி.பி.1614ம் ஆண்டு வரையில் மன்னனாக ஆட்சிபுரிந்தான். ஸ்ரீரங்க தேவ ராயனுடைய கடைசித் தம்பியான இவன் ஆண்ட 30 ஆண்டுகளிலும், அரசின் வலு ஓரளவுக்கு மீட்கப்பட்டது. பீஜப்பூர், கோல்கொண்டா ஆகியவற்றின் சுல்தான்களை வெற்றிகரமாகச் சமாளித்து வந்தான். உள்நாட்டுக் குழப்பங்களையும் அடக்கிப் பொருளாதார மீட்சியையும் ஓரளவுக்கு ஏற்படுத்தினான். கிளர்ச்சி செய்த தமிழ் நாடு மற்றும் ஆந்திரத்தின் சில பகுதிகளைச் சேர்ந்த நாயக்கர்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்

இரண்டாம் ஸ்ரீரங்கா

இரண்டாம் ஸ்ரீரங்கா, விஜயநகரத்து மன்னன் இரண்டாம் வெங்கடனால் 1614 இல் தனது வாரிசாக நியமிக்கப்பட்டான். இவனை, வெங்கடனின் நம்பிக்கைகுரிய அமைச்சனும் தளபதியுமாகிய யச்சம நாயுடு என்பவன் தலைமை தாங்கிய குழுவினர் ஆதரித்தனர். அதேவேளை கொப்புரி ஜக்க ராயன் என்பவனும் வேறு சிலரும் இவனை எதிர்த்தனர். முன்னைய அரசன் இரண்டாம் வெங்கடனின் மகன் என்று கருதப்பட்ட ஒருவன் இருந்தது நிலைமையை இன்னும் சிக்கலாக்கியது. ஜக்க ராயனும் அவனது ஆதரவாளர் இருவரும், இரண்டாம் ஸ்ரீரங்காவையும், அவனது குடும்பத்தினரையும் பிடித்து வேலூர் கோட்டையில் சிறை வைத்துவிட்டு, முன்னைய அரசனின் மகன் என்று சொல்லப்பட்டவனை அரசனாக்கினர்.

இதனை எதிர்த்த யச்சம நாயுடு, ஒரு சலவைத் தொழிலாளியின் உதவியுடன், ஸ்ரீரங்காவின் 12 வயதேயான இரண்டாவது மகனான ராம தேவனைச் சிறையிலிருந்து வெளியே கடத்திவந்தான். எனினும், ஸ்ரீரங்காவையும் அவனது குடும்பத்தினரையும் ஒரு சுரங்கப் பாதை வழியாகக் கடத்திவர யச்சம நாயுடு எடுத்த முயற்சி கண்டுபிடிக்கப்பட்டு, ஸ்ரீரங்காவுக்கான காவல் மேலும் பலப்படுத்தப்பட்டது. இறுதியாக, வேலூர்க் கோட்டையின் காவலாளிகளைக் கொன்று ஸ்ரீரங்கனையும் குடும்பத்தினரையும் தப்புவிக்க எடுத்த முயற்சியும் தோல்வி அடையவே, இரண்டாம் ஸ்ரீரங்காவும் அவனது குடும்பத்தினரும் ஜக்க ராயனால் கொல்லப்பட்டனர். அரச குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ஜக்க ராயனின் குழுவினருக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் ஜக்க ராயனை ஆதரித்த பலர் அவனை விட்டு விலகி யச்சம நாயுடுவின் குழுவைச் சார்ந்தனர். அரியணை ஏறியதன் பின் நான்கு மாதங்கள் மட்டுமே இரண்டாம் ஸ்ரீரங்கா உயிருடன் இருந்தான். இதன் பின்னர் இவ்விரு பிரிவினரிடையே 1617 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தோப்பூர்ப் போர் என அழைக்கப்பட்ட பெரிய வாரிசுச் சண்டை ஒன்றின் பின்னர் ஸ்ரீரங்காவின் சிறியிலிருந்து தப்பிய மகனான ராம தேவன் அரசனாக்கப் பட்டான்.

ராம தேவ ராயன்

வீர ராம தேவ ராயன் என்றும் அழைக்கப்பட்ட ராம தேவ ராயன் கி.பி.1617 ஆம் ஆண்டில் தோப்பூர்ப் போர் என்றழைக்கப்படும் ஒரு கடும் போருக்குப் பின்னர் விஜய நகரத்தின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். ஜக்க ராயன், விஜய நகரப் பேரரசிலிருந்து துண்டித்துக் கொள்ள ஆவலாயிருந்த செஞ்சி மற்றும் மதுரை நாயக்கர்களின் உதவியுடன் மீண்டும் தாக்கினான். யச்சம நாயுடு, இன்னும் விஜய நகரத்துக்கு விசுவாசமாக இருந்த தஞ்சை நாயக்கர்களின் உதவியை நாடினான். ஜக்க ராயனும், அவனது கூட்டாளிகளும், சேர அரசனையும், சில போர்துகீசியர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு திருச்சிராப்பள்ளியில் பெரும் படையொன்றைத் திரட்டினர். யச்சம நாயுடு தனது படைகளை வேலூரிலிருந்து நடத்திச் சென்றான். நடுவில், தஞ்சை ரகுநாத நாயக்கனின் படைகளும் அவனுடன் சேர்ந்துகொண்டன. இப் படைகளுக்கு, கர்நாடகத் தலைவர்களினதும், ஒல்லாந்தரினதும், யாழ்ப்பாண அரசினதும் படை உதவிகள் கிடைத்தன.
இரண்டு படைகளும் காவிரியின் வட கரையில், திருச்சிராப்பள்ளிக்கும், பெரிய அணைக்கட்டுக்கும் இடையே, தோப்பூரில் சந்தித்து மோதிக்கொண்டன. 1616 ஆம் ஆண்டுக் கடைசியில் இடம்பெற்ற இப் போரில், இரண்டு பக்கத்திலும் சேர்த்து பத்து இலட்சம் வீரர்கள் வரை கலந்து கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. இது தென்னிந்தியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய போர்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இப்போரில் ஜக்க ராயன் கொல்லப்பட்டான். அவனது படைகள் பின் வாங்கின. செஞ்சி நாயக்கன், செஞ்சிக் கோட்டை தவிர்ந்த அனைத்துக் கோட்டைகளையும் இழந்தான். அரசுரிமை கோரிய இரண்டாம் வேங்கட ராயனின் மகன் எனப்பட்டவனும் பிடிபட்டான். வெற்றி பெற்ற தஞ்சைப் படைகளும், யச்சம நாயுடுவும், வெற்றித் தூண்கள் அமைத்து வெற்றியைக் கொண்டாடினர். 1617 இன் தொடக்கத்தில் ராம தேவ ராயன் அவனது 15 ஆம் வயதில் முடிசூட்டப்பட்டான்.

தோப்பூர்ப் போரில் தோற்றபின் ஜக்க ராயனின் தம்பியான யேத்தி ராயன் செஞ்சி நாயக்கனுடன் சேர்ந்து தஞ்சையைத் தாக்கினான். எனினும் இவர்கள் தோல்வியைத் தழுவியதுடன், செஞ்சி நாயக்கனும் கைது செய்யப்பட்டான். தொடர்ந்தும் எதிர்ப்புக் காட்டி வந்த யேத்தி ராயன் இறுதியில் ராம தேவ ராயனுக்குத் தனது மகளை மணம் செய்வித்து அவனுடன் சமரசம் செய்துகொண்டான். 1619 இல், அரசுக்கு உரிமை கோரிவந்த இரண்டாம் வேங்கட ராயனின் மகன் இறந்ததோடு ராம தேவனின் பிரச்சினைகள் சிறிது தணிந்தன.
விஜய நகரத்தில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைச் சாதகமாக்கிக் கொண்ட பீஜப்பூர் சுல்தான் 1620 ஆம் ஆண்டில் கர்நூலைத் தாக்கினான். எனினும் வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் 1624 இல் மீண்டும் அதனைத் தாக்கி அப்பகுதி முழுவதையும் கைப்பற்றினான்.

பேடா வேங்கட ராயன்

மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பேடா வேங்கட ராயன் கி.பி. 1632ம் ஆண்டு முதல் கி.பி.1642ம் ஆண்டு வரையில் விஜய நகரப் பேரரசை ஆண்டவன். இவன் அலிய ராமராயனின் பேரனாவான். மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பேடா வேங்கட ராயரின் சகோதரிகளை தமர்லா வெங்கடப்ப நாயக்கர் திருமணம் செய்தனர்.

வேங்கட ராயனுக்குச் சிறிய தந்தையும், இரண்டாம் ஸ்ரீரங்காவின் சகோதரனுமான திம்ம ராயன் என்பவன் தனக்கே அரசுரிமை உண்டு கருதி வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் பேடா வேங்கட ராயன், தனது சொந்த இடமான ஆனகொண்டாவிலாயே இருக்க வேண்டியதாயிற்று. செஞ்சி, தஞ்சை, மதுரை நாயக்கர்கள் வேங்கட ராயனுக்கே தமது ஆதரவைத் தெரிவித்தனர். எவரிடமிருந்தும் ஆதரவு கிடைக்காத போதிலும், திம்ம ராயன் குழப்பங்களை ஏற்படுத்தினான். இது அவன் 1635 ஆம் ஆண்டில் இறக்கும்வரை தொடர்ந்தது. தொடக்கத்தில் திம்மராயனின் கை ஓங்கியிருப்பதாகவே தெரிந்தது. அரசன் பேடா வேங்கட ராயனின் மருமகனான மூன்றாம் ஸ்ரீரங்கா களத்தில் குதித்தபோது நிலைமை மாறியது. இவன், புலிக்கட்டில் இருந்த ஒல்லாந்தரின் துணையுடன் திம்ம ராயனைத் தோற்கடித்து, அவனை வேங்கட ராயனின் ஆட்சியை ஏற்க வைத்தான். திம்மராயனின் கட்டுப்பாட்டின்கீழ் சில நிலப்பகுதிகள் விடப்பட்டன. எனினும் மீண்டும் திம்ம ராயன் குழப்பம் விளைவித்தபோது, 1635 ஆம் ஆண்டில் செஞ்சி நாயக்கனால் அவன் கொல்லப்பட்டான். இதன் பின் அமைதி நிலை நாட்டப்பட்டு பேடா வேங்கட ராயன் வேலூருக்குச் சென்று ஆட்சியைப் பொறுப்பேற்றான்.

அரசனின் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்த அவனது மருமகனான ஸ்ரீரங்கா ஏதோ காரணத்தால் அரசனுக்கு எதிராகத் திரும்பினான். 1638 ஆம் ஆண்டின் பீஜப்பூரில் இருந்து படையெடுப்பு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தான். பீஜப்பூர்-மூன்றாம் ஸ்ரீரங்கா கூட்டுப் படைகள் முதலில் பெங்களூரைத் தாக்கின. அப்போது அரசன் பெருமளவு விட்டுக்கொடுப்புக்களுடன் சமாதானம் செய்துகொண்டான். எனினும் அதே கூட்டணி மீண்டும் தாக்குதலைத் தொடங்கி வேலூர்க் கோட்டைக்கு 12 மைல் தூரம் வரை வந்துவிட்டன. எனினும், அரசன் நாயக்கர்களின் துணையுடன் கூட்டுப் படையின் முகாம்களைத் தாக்கினான்.

கி.பி.1641ம் ஆண்டு கோல்கொண்டா சுல்தான் விஜயநகரத்தின் குழப்பநிலையைச் சாதகமாக்கிக் கொண்டு கிழக்குக் கரை வழியாகப் பெரும் படையை அனுப்பினான். கோல்கொண்டாப் படைகள் மதராசுக்கு அருகே, மூன்றாம் வேங்கடனின் படைகள், செஞ்சி நாயக்கன், மதராஸ், பூனமலைத் தலைவனான தர்மால வேங்கடபதி ஆகியோரின் துணையுடன் நடத்திய தாக்குதல்களை முறியடித்து வேலூர்க் கோட்டையை நோக்கி முன்னேறின. எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய மூன்றாம் வேங்கடன் சித்தூர்க் காட்டுப் பகுதிக்குப் பின்வாங்கினான். அங்கே 1642 ஆம் ஆண்டு அக்டோபரில் காலமானான். மூன்றாம் வேங்கடனுக்கு மகன்கள் இல்லை. இதனால், பீஜப்பூர் முகாமை விட்டுவிட்டு வேலூருக்கு வந்த மூன்றாம் ஸ்ரீரங்கா அரசனானான்.

மூன்றாம் ஸ்ரீரங்கா

மூன்றாம் ஸ்ரீரங்கா விஜயநகரப் பேரரசின் கடைசி மன்னனாவான். இவன் கி.பி.1642ம் ஆண்டு முதல் கி.பி.1652ம் ஆண்டு வரையில் ஆட்சி புரிந்தான். இவன், மூன்றாம் வேங்கடனின் மறைவுக்குப் பின் அரசனானவர். இவர் அலிய ராம ராயனின் கொள்ளுப் பேரன் ஆவான்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *