கடையெழு வள்ளல்கள்

சங்க கால இலக்கியமான பத்துப்பாட்டில் மூன்றாம் பாடல் சிறுபாணாற்றுப் படை ஆகும். இந்தச் சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் ஈகை செயல்கள் பற்றியும் பாடியுள்ளார். இவர்களின் கொடைமடம் செயல்களே அவ் வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பதும் உண்மையாகும். இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன. கொடைமடம் என்றால் சற்றும் யோசித்து பாராமல் பகுத்தறியாது மடமையோடு கொடை செய்வது ஆகும்.

பேகன்

இவர் பொதினி மலைக்குத் தலைவர். தற்போது இந்த இடம் பழனி மலை என்று அழைக்கப்படுகிறது. மழை வளம் மிக்க அந்த மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று பேகன் நினைத்தார். மயில் குளிரில் இருந்து காத்துக்கொள்ள தான் அணிந்திருந்த போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் போர்த்திக் கொள்ளுமா எனச் சிறிதும் யோசித்துப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே ‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.

பரணர் பாடியது.

அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும்,
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,
வரையா மரபின் மாரிபோல,
கடாஅ யானைக் கழல் கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது,
படைமடம் படான், பிறர் படை மயக்குறினே.
(புறம் 142)

மழையானது நீர் இல்லாத குளத்தில் பொழியும், அகன்ற வயலில் பொழியும், காயும் இடத்தில் பெய்யாமல் விளையாத களர் நிலத்திலும் பெய்யும், இது சரிதானா? இப்படி வரையறை இன்றி எங்கும் பொழியும் மழை போல யானை மேல் வரும் பேகன் வழங்குவான் இப்படிக் கொடை வழங்குவதில் மடத்தனமாக நடந்துகொள்வானே தவிர, படை வந்து தாக்கும்போது மடங்கமாட்டான் (வளைந்து கொடுக்க மாட்டான்)

பாரி

பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர். வேள்பாரி என்றும் வழங்கப்படுகிறார். இவர், தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த முல்லைக் கொடி, தேரை விரும்பியதாகக் கருதி, அது படர்வதற்குத் தனது பெரிய தேரையே அளித்தார். முல்லைக்குத் தேர் தந்த பாரி வள்ளலின் பெண்கள்தான் அங்கவை, சங்கவை. மாட மாளிகையில் வாழ்ந்த இவர்கள் தங்கள் தந்தையை இழந்து தவித்த போது அடைக்கலம் தந்து மணமுடித்து வைத்தவர் வள்ளல் பாரியின் நண்பரான புலவர் கபிலர் என்றும் கூறப்படுகிறது.

கபிலர் பாடியது,

பாரி பாரி’ என்று பல ஏத்தி,
ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்;
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே.
(புறம் 107)

ஒரு புலவர் பாரி பாரி என்று சொல்லி அவனை மட்டுமே புகழ்ந்துகொண்டிருக்கிறார். பாரி ஒருவன் மட்டுந்தானா கொடையாளி? மழையும் இருக்கிறதே. அதாவது மழைபோல் வேள் பாரி கொடை வழங்குபவன் என்பது பொருள்.

காரி

திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர் இவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே “மலாடு” ஆகும். இவர் மலையமான் திருமுடிக் காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார்.

கொடை கேட்டு வருபவர்களிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பு உடையவன். ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும், ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் அணிந்து ஆடுகின்ற குதிரையையும் மற்றும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் கொடை கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாது அல்ல வழங்கினான்.காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

ஆய்

பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். இவனை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் அழைத்தனர். ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் (நஞ்சுடைய கொடிய பாம்பு) ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் அளித்த ஒளிமிக்க ஆடையை இவன், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தானாம்.

வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப்
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென,
களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில்,
கான மஞ்ஞை கணனொடு சேப்ப,
ஈகை அரிய இழை அணி மகளிரொடு
சாயின்று’ என்ப, ஆஅய் கோயில்;
சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி,
உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே
(புறம் 127)

ஆய் யானைகளைப் பாணர்க்கு வழங்குவான். அதனால் அவன் அரண்மனை முற்றத்தில் யானை இல்லை.
யானை கட்டியிருந்த வெளில் என்னும் கட்டுத்தறியில் காட்டு மயில் கூட்டம் திரிகிறது. அவனது மனைவிமார் பிறருக்குத் தர முடியாத தாலியுடன் உள்ளனர். “ஈகை அரிய இழை அணி மகளிரொடு சாயின்று” இதுதான் ஆய் அரசன் அரண்மனை நிலைமை.

இவன் வாழும் அரண்மனை, முரசு முழங்கும் செல்வம் படைத்த செல்வர் வாழும் மாளிகை போல் இல்லை. சுவைக்கு இனிதாகத் தாளித்த உணவை, ஈவு இரக்கம் இல்லாமல் தன் வயிற்றுக்கு மட்டும் உண்ணும் செல்வர் வாழும் மாளிகை போல் இது இல்லை

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது

மன்றப் பலவின் மாச் சினை மந்தி
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின்
பாடு இன் தெண் கண், கனி செத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் 5
ஆடுமகள் குறுகின் அல்லது,
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே.
(புறம் 128)

ஆய் மன்னனைப் பாடிக்கொண்டு அவன் அரண்மனை செல்லும் இரவலர் (கொடை கேட்டு செல்பவர்) தம் முழவினை (முரசு) முழக்குவர். பின்னர் முழவினை பொதியமலையில் இருக்கும் பலா மரத்தின் கிளைகளில் தொங்க விடுவர் இரவலர் முழக்கும்போது பார்த்த பெண்குரங்கு அந்த முழவினைப் பலாப் பழத்தைத் தட்டிப் பார்ப்பது போலத் தட்டும். அந்த ஓசையைக் கேட்டு அங்குள்ள நீர்க்கரையில் அன்னச் சேவல் எழுந்து குதித்து ஆடும்.

மழை மேகம் தவழும் இந்தப் பொதியில் நாட்டு அரசன் ஆய். இந்த நாட்டில் ஆடிக் காட்டும் மகளிர் தடையின்றிச் செல்வர். பெருமை மிக்க மன்னராயினும் யாரும் போரிட நுழைய முடியாது.

அதியமான்

அதிகன், அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகைமான், அஞ்சி எனப் பல பெயர்களில் வழங்கப் படுகிறார். இவர் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர். இவர் ஒரு நாள் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனி ஒன்றைப் பெற்றார். அந்த அருநெல்லியை உண்டால், உண்டவரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழ வைக்கும் வலிமை உடையது. அக்கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து தம்மைக் காண வந்த நல்லிசைப் புலவர் ஒளவையார்க்கு தந்து அழியாத அறப்புகழ் பெற்றார். அதியமான் நெடுமான் அஞ்சியைப் போற்றிப் புகழ்ந்து ஒளவையார் பாடிய பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன.

நள்ளி

அதிக மலைகள் கொண்ட கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் அழைத்தனர். நள்ளி, கொடை கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாது அள்ளி வழங்கினார். மேலும் பின்னர் அவர் வேறு ஒருவரிடம் சென்று கொடை கேட்காத அளவிற்கு கொடை அளித்தார். நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.

ஓரி

சிறிய மலைகள் உடைய நல்ல நாட்டிற்குத் தலைவராவார். ஓரி விற்போரில் வல்லவர். அதனால் இவரை “வல்வில் ஓரி” என்றும் அழைப்பர். ஓரி, நெருங்கிய கிளைகளும், பூத்துக் குலுங்கியிருக்கின்ற நல்ல மலர்களையும் உடைய, இளமையும் முதிர்ச்சியும் கொண்ட சுரபுன்னை மரங்களும், சிறிய மலைகளும் அமைந்த நல்ல நாட்டைக் கூத்தாடுவோர்க்குப் பரிசிலாக் கொடுத்தவன். ஓரியிடம் பெருவளத்தைக் கொடையாகப் பெற்றதால், புலவர் வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம் தமக்குரிய பாடுதலும் ஆடுதலும் ஆகிய தொழில்களைச் செய்யாது சோம்பியிருந்து, அவற்றை மறந்து போயினராம் ஓரியின் சிறப்பைக் கூறும் வன்பரணரின் பாடல்களைப் புறநானூற்றில் காண்கிறோம்.

இந்த கடையெழு வள்ளல்களின் சிறப்பைப் புறநானூற்றுப் பாடல்களில் மட்டுமின்றி நற்றிணை, அகநானூறு போன்ற பிற சங்க கால இலக்கியங்களிலும் காணலாம்.

About the author

Leave a Reply

Your email address will not be published.