விஜயநகரப் பேரரசு வரலாறு

தென் இந்தியாவில் ஆண்ட பேரரசுகளில் விஜயநகரப் பேரரசு ஒரு முக்கியமானப் பேரரசு ஆகும். விஜயநகர மன்னர்கள் கி.பி.1336ம் ஆண்டு முதல் கி.பி.1646ம் ஆண்டு வரையில் தென் இந்தியாவின் தற்கால கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்டனர்.

தென்னிந்தியாவில் தில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவே வித்யாரண்யர் வழிகாட்டுதலின் படி, விஜயநகரப் பேரரசு கி.பி.1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப்பேரரசின் புகழ் பெற்றவர் கிருஷ்ணதேவராயர் ஆவார். இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந்நகரின் அழிபாடுகள் இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஹம்பியைச் சுற்றிலும் காணப்படுகின்றன. உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக ஹம்பி விளங்குகிறது.

மத்தியகால ஐரோப்பியப் பயணிகளான டொமிங்கோ பயஸ், பெர்னாவோ நுனிஸ் , நிக்கோலோ டா கொன்ட்டி ஆகியோரது குறிப்புக்கள் மற்றும் நூல்களின் வாயிலாகவும் , உள்ளூர் இலக்கிய மூலங்களில் இருந்தும் விஜயநகரப் பேரரசு வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும் விஜயநகரப் பேரரசின் வலிமை மற்றும் வளம் குறித்த பல தகவல்களைத் தருகின்றன.

விஜயநகரப் பேரரசு தொடர்பான நினைவுச் சின்னங்கள் பல தென்னிந்தியா முழுவதும் பரவலாக உள்ளன. இவற்றுள் ஹம்பியில் உள்ளவை பெரிதும் புகழ் பெற்றவை. விஜயநகரக் கட்டிடக்கலைப் பாணி தென்னிந்தியக் கட்டிடக்கலையின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். பல பல நம்பிக்கைகள் மற்றும் நாட்டார் மரபுகளின் தொடர்புகள், இந்துக் கோயில் கட்டுமானங்களில் புதுமைகளைப் புகுத்தியது. இது முதலில் தக்காணத்திலும் பின்னர் திராவிடக் கட்டிடக்கலையிலும் ஏற்பட்டது. சமயச் சார்பற்ற கட்டிடங்களில் வட தக்காணத்துச் சுல்தானகக் கட்டிடக்கலையின் தாக்கங்கள் காணப்படுகின்றன. இப்பேரரசு காலத்தில் தென்னிந்தியாவில் கலை, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி இலக்கியம், இந்துக் கோயில் கட்டிடக் கலை, இந்து சமயம், நீர் பாசன முறை, தொழில், வணிகம் சிறப்பு விளங்கியது. இப் பேரரசு கி.பி.1646ம் ஆண்டு வரையில் நீடித்ததாயினும், கி.பி.1565 ஆம் ஆண்டில் தக்காணத்துச் சுல்தான்களால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது.

விஜயநகரப் பேரரசு கர்நாடகா ராஜ்ஜியம் அல்லது கர்நாடகப் பேரரசு என்று சில சரித்திரக் குறிப்புகளிலும் மற்றும் கிருஷ்ணதேவராயர் சமஸ்கிருத மொழியில் இயற்றிய ஜாம்பவதி கல்யாணம் எனும் நூல் மற்றும் தெலுங்கு மொழியில் இயற்றிய வசு சரித்திரம் எனும் நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது

சங்கம மரபு

சங்கம மரபைச் சேர்ந்த முதலாம் ஹரிஹரர் மற்றும் அவரது சகோதரரான முதலாம் புக்கராயர் இணைந்து, வித்யாரண்ய தீர்த்தர் வழிகாட்டுதலின் படி, விஜயநகரம் என்ற ஹம்பியை தலைநகராகக் கொண்டு, கி.பி.1336ம் ஆண்டில் விஜயநகரப் பேரரசு நிறுவப்பட்டது. கி.பி.1336 ஆம் ஆண்டின் தாமிர பட்டயம் விஜயநகர சாம்ராஜ்யம் அமைந்ததில் வித்யாரண்ய தீர்த்தரின் முக்கிய பங்கைக் கூறுகின்றது. விஜயநகர மன்னர்கள் தெலுங்கு மக்கள் ஆவார். போசாளப் பேரரசின் வீழ்ச்சியின் போது, இவர்கள் முதலில் காக்கத்தியர்களுடன் இணைந்து, அதன் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றினர்.கி.பி.1294ம் ஆண்டு தென்னிந்தியாவில் தில்லி சுல்தான் படைகள் தோற்ற பிறகு, ஹொய்சாளப் பேரரசின் படைத்தலைவர் மூன்றாம் சிக்கய நாயக்கர் கி.பி.1280ம் ஆண்டு தன்னை சிற்றரசனாக அறிவித்துக் கொண்டு தேவகிரி யாதவப் பேரரசை கைப்பற்றினார்.

தற்கால குல்பர்காவிற்கு அருகில் துங்கபத்திரை ஆற்றின் அருகில் சிக்கய நாயக்கர் நிறுவிய காம்பிலி இராச்சியம் , தில்லி சுல்தான்களின் தொடர் படையெடுப்பால் குறுகிய காலத்தில் முடிவுற்றது. காம்பிலி இராச்சியம் அழிந்த 8 ஆண்டுகள் கழித்து கி.பி.1336ம் ஆண்டில் ஹம்பியில் விஜயநகரப் பேரரசு நிறுவப்பட்டது.விஜயநகரபி பேரரசு துவக்கப்பட்ட இருபதாண்டுகளுக்குள் முதலாம் ஹரிஹரர் துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள பெரும்பாலன பகுதிகளை கைப்பற்றி தன்னை கிழக்கு -மேற்கு கடல்களின் மன்னன் என அறிவித்துக் கொண்டார்.

கி.பி.1374ல் முதலாம் ஹரிஹரருக்குப் பின் பட்டமேறிய முதலாம் புக்கராயர் ஆற்காடு மற்றும் கொண்ட வீடு ரெட்டி இராச்சியத்திரையும், மதுரை சுல்தானகத்தையும் வென்று, மேற்கில் கோவா, கிழக்கில் துங்கபத்திரை ஆறு, வடக்கில் கிருஷ்ணா ஆற்றுச் சமவெளி வரை ஆட்சி செலுத்தினார். முதலாம் புக்கராயரின் மகன் இரண்டாம் ஹரிஹர ராயன் விஜயநகரப் பேரரசை கிருஷ்ணா ஆற்றிக்கு மேல் வரை விரிவு படுத்தி, தென்னிந்தியா முழுவதையும் விஜயநகரப் பேரரசின் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார். பின் ஆட்சி கட்டிலில் அமர்ந்த முதலாம் தேவ ராயன் தற்கால ஒடிசாவின் கஜபதி பேரரசை கைப்பற்றினார்.

கி.பி.1407ல் விஜயநகரப் பேரரசர் முதலாம் தேவராயர், பாமினி சுல்தானுடன் செய்து கொண்ட போர் அமைதி உடன்படிக்கைப் படி, கி.பி.1435 முடிய, ஆண்டிற்கு ஒரு இலட்சம் அணாக்களும், 5 மணங்கு முத்துக்களும், 50 யானைகளும் கப்பம் கட்டினார். கி.பி.1424ல் பட்டமேறிய இரண்டாம் தேவ ராயன் தற்கால கேரளாவின் கோழிக்கோடு, கொல்லம் பகுதிகளைக் கைப்பற்றி இலங்கை மற்றும் பர்மாவை கடல்வழியாகச் சென்று படையெடுத்தார். தொடர்ந்து நடந்து வந்த பாமினி சுல்தானகம் – விஜயநகரப் போர்களால், விஜயநகரப் பேரரசு தனது இராணுவத்தை விரிவாக்கியது. அதே நேரத்தில் விஜயநகரப் பேரரசின் படைத்தலைவர்களுக்கிடையே பிரச்சனைகளும் தோன்றின.

சாளுவ மரபு

கி.பி.1485ம் ஆண்டில் சங்கம மரபைச் சேர்ந்த இறுதி விஜயநகரப் பேரரசர் பிரௌத ராயன் இறப்பிற்குப் பின், சாளுவ மரபின் படைத்தலைவர் சாளுவ நரசிம்ம தேவ ராயன் (கி.பி. 1485 – 1491) இராணுவப் புரட்சி மூலம் விஜயநகரப் பேரரசின் அரியணை ஏறினார். இவருக்குப் பின் வந்த திம்ம பூபாலன் மற்றும் இரண்டாம் நரசிம்ம ராயன் ஆகியோர் 1491 முதல் 1505 முடிய விஜயநகரப் பேரரசை ஆண்டனர்.

துளுவ மரபு

கிபி 1505ம் ஆண்டில் விஜயநகரப் பேரரசின் துளுவ மரபின் பெரும் படைத்தலைவர் துளுவ நரச நாயக்கன் இராணுவப் புரட்சி செய்து சங்கம மரபினரிடமிருந்து விஜயநகரப் பேரரசை கைப்பற்றி அரியணை ஏறினார். கி.பி.1509ல் துளுவ நரச நாயக்கரின் மகன் கிருஷ்ணதேவராயரின் (ஆட்சிக் காலம்:1509 – 1529) ஆட்சி துவங்கியது. இவர் இந்து வீரர்களுடன், முஸ்லீம் படைவீரர்களையும் தனது படைதுறைகளில் சேர்த்து வளுவான படையணிகளை உருவாக்கினார். பத்தாண்டுகளில் தன் போர்த் திறமையால் வடக்கில் இருந்த தக்காணச் சுல்தான்களின் ஆக்கிரமிப்புகளை வென்றார்.

கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலத்தில் விஜயநகரப் பேரரசு நாற்புறங்களிலும் விரிவாக்கப்பட்டு, புகழின் உச்சத்தில் இருந்தது. தக்காண சுல்தான்களின் வடக்கு, கிழக்குப் பகுதிகளையும் மற்றும் கலிங்க நாட்டையும் கைப்பற்றி விஜயநகரப் பேரரசில் இணைத்தார். 1520ல் நடைபெற்ற ரெய்ச்சூர் போரில் கிருஷ்ணதேவராயர், பீஜாப்பூர் சுல்தானகத்தை வெற்றி கொண்டார். போரின் முடிவில் பிஜப்பூர் சுல்தான் கிருஷ்ண நதியின் அக்கரைக்கு விரட்டியடிக்கப்பட்டார்.

1529ல் கிருஷ்ணதேவராயரின் ஒன்று விட்ட தம்பி அச்சுத தேவ ராயன் (1529-1542) விஜயநகரப் பேரரசின் அரியணை ஏறினார். 1542ல் அச்சுத தேவராயர் இறக்கவே அவரது இளவயது மருமகனான சதாசிவ ராயன், கிருஷ்ணதேவராயரின் மருமகனும், அரவிடு மரபினனுமான அலிய ராமராயனை காப்பாளராகக் கொண்டு ஆட்சி செய்தார். 1543ல் அச்சுத தேவ ராயன் இறந்ததைத் தொடர்ந்து, சிறுவனாக இருந்த சதாசிவ ராயன் (1542-1570) முடிசூட்டப்பட்டான். இவனும் அலிய ராமராயனின் வலுவான ஆதரவினாலேயே ஆட்சி செய்ய முடிந்தது. சதாசிவ ராயனது ஆட்சிக் காலம் முழுவதும் அலிய ராம ராயனே அரசன் போல் செயல்பட்டு வந்தான்.

ஜனவரி, 1565ல் தக்காணச் சுல்தான்கள் ஒன்றிணைந்து, தலிகோட்டா சண்டையில், அலிய ராம ராயனின் விஜயநகரப் பேரரசின் படைகளை தோற்கடித்தனர். இப்போரில் விஜயநகரப் பேரரசின் படையில் இருந்த இரு முஸ்லிம் படைத்தலைவர்கள் தங்கள் படைகளுடன் தக்காணச் சுல்தான்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால், போரில் விஜயநகரப் பேரரசு தோற்றது என வரலாற்று அறிஞர்களான ஹெர்மன குல்கே மற்றும் டயட்மர் ரோதர்மண்ட் கூறுகிறார்கள். போரில் கைதியாக பிடிபட்ட இடத்திலேயே, சுல்தான்கள் அலிய ராம ராயனின் தலையை கொய்தனர். மேலும் சுல்தான்கள் ஹம்பி எனும் விஜயநகரத்தின் கோயில்களையும், கோட்டைகளையும் சிதைத்து அழித்தனர்.

அரவிடு மரபு

தலிகோட்டா சண்டையில் இறந்த அலிய ராம ராயனின் தம்பியும், அரவிடு மரபைத் துவக்கியவனுமான திருமலை தேவ ராயன், தற்கால ஆந்திரப் பிரதேசத்தின் பெனுகொண்டாவிற்கு விஜயநகரப் பேரரசின் தலைநகரை மாற்றினார். தலைக்கோட்டைப் போரின் முடிவில் விஜயநகரப் பேரரசு வலுவிழந்தபோது, பேரரசின் கீழிருந்த மதுரை நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள் மற்றும் செஞ்சி நாயக்கர்கள் சுயாட்சி பெற்று ஆளத்துவங்கினர். மற்றும் சிலர் திருமலை தேவ ராயனுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1572ல் திருமலை தேவ ராயனை அரியணை விட்டு விலகிய போது, மீதமிருந்த விஜயநகரப் பேரரசை தனது மூன்று மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். 1614ல் அரவிடு மரபினரின் விஜயநகரப் பேரரசு, பிஜப்பூர் சுல்தானகம் மற்றும் பிற சுல்தான்களின் தொடர் படையெடுப்புகளால் உருக்குலைந்து, இறுதியாக 1646ல் விஜயநகரப் பேரரசின் ஆட்சி முடிவிற்கு வந்தது விஜயநகர பேரரசின் வீழ்ச்சியின் போது தென்னிந்தியாவில் மைசூர் அரசு, கேளடி நாயக்கர்கள், மதுரை நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள், சித்திரதுர்க நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆட்சி செலுத்த துவங்கினர்

சங்கம மரபு

முதலாம் ஹரிஹர ராயன் (கி.பி. 1336-1356)
முதலாம் புக்கா ராயன் (கி.பி. 1356-1377)
இரண்டாம் ஹரிஹர ராயன் (கி.பி. 1377-1404)
விருபக்ஷ ராயன் (கி.பி. 1404-1405)
இரண்டாம் புக்கா ராயன் (கி.பி. 1405-1406)
முதலாம் தேவ ராயன் (கி.பி. 1406-1422)
ராமச்சந்திர ராயன் (கி.பி. 1422)
வீரவிஜய புக்கா ராயன் (கி.பி. 1422-1424)
இரண்டாம் தேவ ராயன் (கி.பி. 1424-1446)
மல்லிகார்ஜுன ராயன் (கி.பி. 1446-1465)
இரண்டாம் விருபக்ஷ ராயன் (கி.பி. 1465-1485)
பிரௌத ராயன் (கி.பி. 1485)

சாளுவ மரபு

சாளுவ நரசிம்ம தேவ ராயன் (கி.பி. 1485-1491)
திம்ம பூபாலன் (கி.பி. 1491)
இரண்டாம் நரசிம்ம ராயன் (கி.பி. 1491-1505)

துளுவ மரபு

துளுவ நரச நாயக்கன் (கி.பி. 1491-1503)
வீரநரசிம்ம ராயன் (கி.பி. 1503-1509)
கிருஷ்ண தேவ ராயன் (கி.பி. 1509-1529)
அச்சுத தேவ ராயன் (கி.பி. 1529-1542)
சதாசிவ ராயன் (கி.பி. 1542-1570)

அரவிடு மரபு

அலிய ராம ராயன் (கி.பி. 1542-1565)
திருமலை தேவ ராயன் (கி.பி. 1565-1572)
முதலாம் ஸ்ரீரங்கா (கி.பி. 1572-1586)
இரண்டாம் வெங்கடா (கி.பி. 1586-1614)
இரண்டாம் ஸ்ரீரங்கா (கி.பி. 1614-1614)
ராமதேவா (கி.பி. 1617-1632)
மூன்றாம் வெங்கடா (கி.பி. 1632-1642)
மூன்றாம் ஸ்ரீரங்கா (கி.பி. 1642-1646)

About the author

Leave a Reply

Your email address will not be published.