மைசூர் அரசு

மைசூர் அரசு தென்னிந்தியாவில் 1399ம் ஆண்டு மைசூர் பகுதியில் உடையார் அரச குலத்தின் மன்னர் யதுராய உடையார் என்பவரால் அமைக்கப்பட்ட அரசாகும். மைசூர் அரசு, விஜயநகரப் பேரரசின் கீழ் சிற்றரசாக கி.பி.1565ம் ஆண்டு வரையில் விளங்கியது. தென்னிந்தியாவில் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பல சிற்றரசுகள் விடுதலை பெற்ற காலத்தில் மைசூர் அரசும் விடுதலை பெற்றது. நரசராச உடையார் மற்றும் சிக்க தேவராச உடையார் ஆகிய அரசர்களின் கீழ் தற்போதைய தெற்கு கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டது. கி.பி.1565ம் ஆண்டு முதல் கி.பி.1761ம் ஆண்டு வரையில் மைசூர் அரசு சுயாட்சியுடன் விளங்கியது.

மைசூர் அரசைக் கைப்பற்றிய ஹைதர் அலியும், அவரது மகன் திப்பு சுல்தானும் மைசூர் அரசை கி.பி.1761ம் ஆண்டு முதல் கி.பி.1799ம் ஆண்டு வரை ஆண்டனர். ஆங்கிலேயர்களின் உதவியுடன் மீண்டும் உடையார் வம்சத்தினர் மைசூர் அரசை கி.பி.1799 முதல் கி.பி.1881 முடிய தன்னாட்சியுடன் ஆண்டனர். 1881ஆம் ஆண்டு முதல் மைசூர் அரசு பிரித்தானிய இந்தியாவிற்கு கப்பம் கட்டும் சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாக விளங்கியது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் மைசூர் அரசு அரசியல் ஒருங்கிணைப்புத் திட்டப்படி, கி.பி.1950ஆம் ஆண்டில் இந்திய அரசில் இணைக்கப்பட்டது.

விசயநகர அரசுக்கு உட்பட்டவர்கள்

யதுராய உடையார் 1399-1423

ஆதி யதுராய உடையார் அல்லது ராஜா விஜய ராஜ் உடையார்,  மைசூரின் முதல் மன்னராக 1399 முதல் 1423 வரை இருந்தவர்.
ஆதி யதுராய உடையார் தளவாய் மாரா நாயக்க என்பவரால் ஆட்சி அதிகாரத்திற்காகக் கருகஹள்ளி என்ற இடத்தில் கொல்லப்பட்டார்.

முதலாம் சாமராச உடையார் 1423-1459

முதலாம் சாமராஜ உடையார் மைசூரின் மன்னராக 1423 முதல் 1459 வரை இருந்தவர். இவர் மைசூர் மன்னர் யதுராய உடையாரின் மூத்தமகனாவார். தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு பட்டத்திற்கு வந்தார். இவர் 1459 இல் இறந்தார்.

முதலாம் திம்மராச உடையார் 1459-1478

இராஜா அப்பண்ண திம்மராஜ உடையார் அல்லது முதலாம் திம்மராஜ உடையார் மைசூரின் மன்னராக 1459 முதல் 1478 வரை இருந்தவர். இவர் மைசூர் மன்னராக இருந்த முதலாம் சாமராஜ உடையாரின் மகனாவார். தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கு வந்தார். இவர் 1478 இல் இறந்தார்.

இரண்டாம் சாமராச உடையார் 1478-1513

இரண்டாம் சாமராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1478 முதல் 1513வரை இருந்தவர். இவர் மைசூர் மன்னரான முதலாம் திம்மராஜ உடையாரின் மகனாவார். தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு 1478 இல் பட்டத்திற்கு வந்தார். இவர் 1513 இல் இறந்தார்.

மூன்றாம் சாமராச உடையார் 1513-1553

மூன்றாம் சாமராச உடையார் மைசூரின் மன்னராக 1513 முதல் 1553வரை இருந்தவர். இவர் மைசூர் மன்னர் இரண்டம் சாமராச உடையாரின் மகனாவார் இவரின் தந்தையின் மரணத்திற்கு பிறகு 1513 இல் பட்டத்திற்கு வந்தார். இவர் 17 பிப்ரவரி 1553 இல் இறந்தார்.

தன்னாட்சி பெற்றவர்கள்

இரண்டாம் திம்மராச உடையார் 1553-1572

இரண்டாம் திம்மராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1553 முதல் 1572 வரை இருந்தவர். இவர் மைசூர் மன்னர் மூன்றாம் சாமராச உடையாரின் மூத்த மகனாவார். இவரின் தந்தையின் மரணத்திற்கு பின் பெப்ரவரி 1553 இல் பட்டத்திற்கு வந்தார். இவர் 1572 இல் இறந்தார்.

நான்காம் சாமராச உடையார் 1572-1576

நான்காம் சாமராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1572 முதல் 1576 வரை இருந்தவர். இவர் மைசூர் மன்னர் மூன்றாம் சாமராச உடையாரின் இளைய மகனாவார். இவர் தனது அண்ணனின் மரணத்திற்கு பிறகு பெப்ரவரி 1572 இல் பட்டத்திற்கு வந்தார். இவர் 1576 இல் இறந்தார்.

ஐந்தாம் சாமராச உடையார் 1576-1578

நான்காம் சாமராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1576 முதல் 1578 வரை இருந்தவர். இவர் மிகக்குறைந்த ஆண்டுகளாக, இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சிபுரிந்தார். இவர் 1578 இல் இறந்தார்.

முதலாம் இராச உடையார் 1578-1617

முதலாம் இராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1578 முதல் 1617 வரை இருந்தவர். இவர் மைசூர் மன்னர் நான்காம் சாமராச உடையாரின் மூத்த மகனாவார்.  இராச உடையார் துவக்கத்தில் 33 சிற்றூர்களுக்கும் 300 வீரர்களுக்கும் தலைவனாக இருந்தார். விசயநகர குறுநில மன்னரான இவர், பேரரசின் வலிவு குன்றியதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, படிப்படியாக புதிய பகுதிகளை வென்று தன் அரசை விரிவுபடுத்தினார். 1612 இல் மண்டலத் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணத்தை கைப்பற்றினார். இவ்வெற்றியினால் மைசூர் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது. ஸ்ரீரங்கப்பட்டணம் உடையார்களின் அரசியல் மையமானது. ஸ்ரீரங்கப்பட்டண வெற்றியைத் தொடர்ந்து, இராச உடையார் தன் நாட்டின் வட பகுதியில் இருந்த செகதேவிராயர்களின் ஆட்சிப் பகுதிகளையும், தென்பகுதியிலிருந்த பாளையக்களையகாரர்களின் தெற்கு, கிழக்கு பகுதிகளையும் வென்று தன் அரசோடு இணைத்துக்கொண்டான்

ஆறாம் சாமராச உடையார் 1617-1637

ஆறாம் சாமராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1617 முதல் 1637 வரை இருந்தவர்.இவர் முதலாம் இராச உடையாரின் பேரனானாவார். தாத்தாவின் மறைவுக்கு பிறகு ஆறாம் சாமராச உடையார் 1617 இல் பதவியேற்றார். இவர் சிறுவனாக இருந்தமையால் நிருவாக பொறுப்பை தளவாய் ஏற்றுக்கொண்டான். உரிய வயது அடைந்ததும் 1620 இல் ஆட்சி பொறுப்பேற்றார்.  விசயநகரப் பேரரசின் வலிவு குன்றியதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு தளவாயும், அரசனும் படிப்படியாக புதிய பகுதிகளை வென்று தான் அரசை விரிவுபடுத்தினா். செகதேவிராயர்களின் தலைநகரான சென்னபட்டணத்தையும் வென்று தன் அரசோடு இணைத்துக்கொண்டானர்.

இரண்டாம் இராச உடையார் 1637-1638

இரண்டாம் இராச என்பவர் மைசூரின் மன்னராக 1637 முதல் 1638 வரை இருந்தவர்.இவர் முதலாம் இராச உடையாரின் நான்காவது மகனாவார்

முதலாம் நரசராச உடையார் 1638-1659

முதலாம் நரசராச உடையார் அல்லது கண்டீரவ நரசராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1638 முதல் 1659 வரை இருந்தவர். இவர் தன் ஆட்சி துவக்கத்திலேயே பீசப்பூர் இரனதுல்லா கான் தலைமையிலான படையெடுப்பை எதிர்கொள்ள நேர்ந்தது. அவர்களை விரட்டி அடித்தார். தாணாய்கன் கோட்டை, சத்தியமங்கலம், ஓசூர், முதலிய பகுதிகளை கைப்பற்றினார். 1641இல் கெட்டி முதலியாரின் பகுதிகள், 1652இல் பீசப்பூர் ஆட்சியிலிருந்த மேற்கு பாராமகால், வீரபத்ர துர்க்கம், பென்னாகரம், தர்மபுரி, தேன்கனிக்கோட்டை பகுதிகள், கோயமுத்தூர் பகுதி போன்ற பகுதிகளை வென்று மைசூருடன் இணைத்தார். வெற்றிகளால் வந்த வருவாயைக் கொண்டு ஸ்ரீரங்கப்பட்டண கோட்டையைப் பலப்படுத்தினார். ஒரு தங்க சாலை அமைத்து தன் பெயரால் கண்டீராயி ஹண என்னும் தங்க நாணயங்களையும், ஆனெகாசு என்ற பெயரில் செப்பு காசுகளையும் வெளியிட்டார்

தொட்ட தேவராச உடையார் 1659-1673

தொட்ட தேவராச உடையார் அல்லது தொட்ட கெம்ப தேவராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1659 முதல் 1673. வரை இருந்தவர்.1673இல் இறந்தார். இவர் தன் ஆட்சி துவக்கத்திலேயே ஸ்ரீரங்கப்பட்டணம், இக்கேரியின் முதலாம் சிவப்ப நாயக்கனால் முற்றுகையிடப்பட்டது. கி.பி.1661 முதல் 1664 வரை இக்கேரிக்கும், மைசூருக்கும் பல போர்கள் நடைபெற்றன. 1668 இல் இவர் ஈரோடு, தாராபுரம், குணிக்கல் போன்ற பகுதிகளை வென்று மைசூருடன் இணைத்தார்

சிக்க தேவராச உடையார் 1673-1704

சிக்க தேவராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1673 முதல் 1704 வரை இருந்தவர். 1704இல் இறந்தார். சிக்க தேவராசன் சிறந்த அரசியல் மேதை. ஆட்சித்திறன் மிக்கவர். முகலாய பேரரசர் ஔரங்கசீப்புடன் நல்ல நட்புறவு ஏற்படுத்திக் கொண்டார்.
அருகிலுள்ள மற்ற நாடுகளை வென்று தனது ஆட்சிப் பரப்பை விரிவாக்கிக் கொண்டார். 1675-78க்கு இடையே தனது ஆட்சிப் பரப்பை பீசப்பூர் வரை நீட்டித்துக் கொண்டார். இருப்பினும் மராத்தியரின் ஆக்கிரமிப்புகளால் இவரது ஆட்சிப் பரவல் தடுக்கப்பட்டது. காசிம் கானிடம் மூன்று இலட்சம் ரூபாய் கொடுத்து பெங்களூரை வாங்கினார். 1704இல் அவர் இறப்பதற்கு முன் பழைய சேலம் மாவட்டம் முழுவதும் மைசூரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகிவிட்டன.

இரண்டாம் நரசராச உடையார் 1704-1714

இரண்டாம் கண்டீரவ நரசராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1704 முதல் 1714 வரை இருந்தவர். 1704இல் சிக்க தேவராச உடையார் இறந்தபிறகு, அவரது மகனான கண்டீரவ நரசராச உடையார் ஆட்சிக்கு வந்தார். இவர் செவிட்டூமையாக இருந்ததினால் அமைச்சர்களே அரசின் நிருவாக பொறுப்பேற்றனர்.

முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732

முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1714 முதல் 1732 வரை இருந்தவர். தொட்ட கிருட்டிணராச உடையார் 18 மார்ச் 1702இல் பிறந்தார். இரண்டாம் கண்டீரவ நரசராச உடையாரின் இரண்டாம் மனைவியாகிய செல்வஜா அம்மணி அவருவின் முதல் ஆண்பிளைளையாவார். கண்டீரவ நரசராச உடையார் இறந்ததால் இவரின் பத்தாவது வயதில் பெயருக்கு அரியணை ஏற்றிவிட்டு, அமைச்சர்களே ஆட்சி செலுத்தினர். தொட்ட கிருட்டிண ராச உடையார் ஒன்பது பேரை மணந்தார். இவரது முதல் மனைவிக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. ஆனால், ஆறுமாதங்களிலேயே அக்குழந்தை இறந்தது. நேரடி உடையார் மரபு இவருடன் முடிந்தது. இவர் 5 மார்ச் 1732இல் தன் 29ஆம் வயதில் இறந்தார்

ஏழாம் சாமராச உடையார் 1732-1734

மகாராசா சிறீ சாமராச உடையார்  அல்லதுஏழாம் சாமராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1732 முதல் 1734 வரை இருந்தவர்.மன்னர் தொட்ட கிருட்டிணராசன் இறந்தபோது தேவராசன் என்பவர் தளவாய் ஆகவும் நஞ்சராசன் என்பவர் முதலமைச்சராகவும் இருந்தனர். ஆட்சியில் இவர்கள் ஆதிக்கமே இருந்தது. இவர் அங்கனஹள்ளி என்ற ஊரைச் சேர்ந்த தேவராச அர்ஸ் என்பவரின் மகனாவார். இவர் சௌபாக்கியவதி மகாராணி சிறீ தேவசம்மா என்னும் தேவராச அம்மணிக்கும் மறைந்த மன்னர் தொட்ட கிருட்டிணராச உடையாருக்கும் வளர்ப்பு மகனாவார். 19 மார்ச் 1732இல் இவரை சாமராச உடையார் என்ற பெயருடன் அமைச்சர்கள் பட்டம் சூட்டினர். புதிய மன்னர் தன் அதிகாரத்தைக் காட்டவே மன்னரை சிறையில் அடைத்தனர். இவர் 1734 இல் சிறையிலேயே மாண்டார். அமைச்சர்கள் சேர்ந்து ஐந்து வயதான ஒரு சிறுவனுக்கு பட்டம் சூட்டினர்.

ஹைதர் அலி, திப்புசுல்தானுக்கு அடங்கிய உடையார்கள்

இரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766

சிறீ இம்மிடி சிக்க கிருட்டிணராச உடையார் அல்லது இரண்டாம் இம்மடி கிருட்டிணராச உடையார்என்பவர் மைசூரின் மன்னராக 1734 முதல் 1766 வரை இருந்தவர். இவர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தவர். இவர் 1731 இல் சௌபாக்கியவதி மகாராணி சிறீ தேவசம்மா என்னும் தேவராச அம்மணி அவரு (முதலாம் கிருட்டிணராச உடையாரின் மனைவி) அவர்களால் தத்து எடுக்கப்பட்டு, சிக்க கிருட்டிண தேவராச உடையார் என்ற பெயருடன் தளவாயால் பட்டம் சூட்டப்பட்டார். மன்னர் தளவாயின் கட்டுப்பாட்டிலும், ஹைதர் அலியின் கட்டுப்பாட்டிலும் இருந்தார். தன் அதிகாரத்தை பெருக்கிக்கொள்ள முதலமைச்சர் நஞ்சராசன் தன்மகளை மன்னருக்கு திருமணம் செய்துவித்தார்.

இம்மன்னர் காலத்தில் முதலமைச்சரான நஞ்சராசன் 1749ஆம் ஆண்டு தேவனிள்ளியை முற்றுகையிட்டான். அம்முற்றுகை ஒனபது மாதகாலம் நடைபெற்றது. அம்முற்றுகையின்போது ஹைதர் அலி என்ற இளைஞன் வெகு சாமார்த்தியமாகப் போர்புரிந்தான். அதைக்கண்ட நஞ்சராசன் அந்த இளைஞனுக்கு ஒரு பதவி கொடுத்து 200 காவலாட்களுக்கும், 50 குதிரைகளுக்கும் தலைவனாக்கினான். இவனே பிற்காலத்தில் படிப்படியாக உயர்ந்து மைசூர் இராஜ்ஜியத்துக்கே தலைமைவகிக்கும் நிலையை அடைந்தான். மன்னரையும் தன்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான்

நஞ்சராச உடையார் 1766-1772

மகாராசா சிறீ நஞ்சராச தளவாய் உடையார் பகதூர் அல்லது நஞ்சராச உடையார், என்பவர் மைசூரின் மன்னராக 1766 முதல் 1770 வரை இருந்தவர். இவர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தவர். இவர் மகாராசா இரண்டாம் கிருட்டிணராச உடையாரின் மூத்த மகனாவார். இவர் தந்தையின் மரணத்துக்குப் பிறகு 1766 இல் பட்டத்துக்கு வந்தார். இவர் ஹைதர் அலியால் அனுப்பப்பட்ட நஞ்சு கலந்த பாலை அருந்தி இறந்தார்

எட்டாம் சாமராச உடையார் 1772-1776

மகாராசா சிறீ பெட்டத சாமராச உடையார் பகதூர் என்பவர் மைசூரின் மன்னராக 1770 முதல் 1776 வரை. இருந்தவர். இவறும் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தவர். இவர் எட்டாவது சாமராச உடையார் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இரண்டாம் கிருட்டிணராச உடையாரின் இரண்டாவது மகனாவார். இவரின் அண்ணன் நஞ்சராச உடையாரின் இறப்பிற்கு பிறகு முடிசூட்டப்பட்டார். 16 செப்டம்பர் 1776, இவர் சிறீரங்கப்பட்டண அரண்மனையில், ஹைதர் அலியின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டார்.

ஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796

சிறீமத் ராசாதிராச ராச பரமிசிவர ராச மார்த்தாண்ட பரவ்த பிரதாபபட்டிமவிரா நரப்பட்டி மகிசுர சிம்மமானருடரகிருவா மகாராச சிறீ காச சாமராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1776 முதல் 1796வரை இருந்தவர். இவர் மூன்றாம் கிருட்டிணராச உடையாரின் தந்தையாவார். இவர் ஒன்பதாம் சாமராச உடையார் என்று அழைக்கப்படுகிறார். இவர் கருகியள்ளி குடும்பத்தைச் சேர்ந்த, சிக்க தேவராச அர்ஸ் என்பவரின் மகனாவார். எட்டாம் சாமராச உடையாரின் மறைவுக்குப் பிறகு, மகாராணிலெட்சுமி அம்மணி தேவியால் (மறைந்த மன்னர் இரண்டாம் கிருட்டிணராச உடையாரின் மனைவி) தத்து எடுக்கப்பட்டார். இவரும் சுயேச்சையாக செயல்பட முடியாதவராக இவருக்கு முன்னாள் இருந்த மன்னர்களான இரண்டாம் கிருட்டிணராச உடையார், நஞ்சராச உடையார், எட்டாம் சாமராச உடையார் ஆகியோர் போன்று ஹைதர் அலி, அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோருக்கு அடங்கியவராக இருந்தார். ஜனவரி 1786க்கு பிறகு, பெயருக்கு மன்னர் என்ற நிலையும் இல்லாமல் மன்னரின் அனைத்து உரிமைகளும் திப்பு சுல்தானால் பறிக்கப்பட்டு, தன்னையே பாதூஷா என்று அறிவித்துக்கொண்டு திப்பு சுல்தான் மன்னனானார். மன்னர் உரிமைகளை திப்பு சுல்தான் பறித்த பிறகு, இவர் சிறீரங்கப்பட்டிண அரண்மனையில் 17 ஏப்ரல் 1798இல் பெரியம்மை நோயாலோ அல்லது திப்புவாலோ கொல்லப்பட்டு இறந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். உடையார் மரபினர் பதவியில் இருந்து இறக்கப்பட்ட பின் திப்பு சுல்தான் மைசூர் சுல்தானகத்தின் ஒரே மன்னராக போரில் கொல்லப்பட்ட 1799ஆம் ஆண்டு வரை இருந்தார்.

ஆங்கிலேயர்களுக்கு அடங்கிய உடையார்கள்

மூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868

மூன்றாம் கிருட்டிணராச உடையார் என்பவர் மைசூர் சமத்தானத்தின் மன்னராக இருந்தவர். இவர் மும்மடி கிருட்டிணராச உடையார் என்றும் அழைக்கப்பட்டார். இவர் உடையார் மரபைச் சேர்ந்த மன்னராவார். இவர் ஏறக்குறைய எழுபது ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். இவர் காலத்தில் பல்வேறு கலைகளையும் இசையையும் ஆதரித்து வளர்த்தார்.

பத்தாம் சாமராச உடையார் 1881-1894

மகாராஜ ஸ்ரீ சேர் பத்தாம் சாமராச உடையார் அல்லது சாமராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1868 தொடக்கம் 1894 வரை திகழ்ந்தார். இவரின் முன் மூன்றாம் கிருட்டிணராச உடையார் ஆட்சியில் இருந்தார், இவரின் பின் நான்காம் கிருட்டிணராச உடையார் ஆட்சிக்கு வந்தார். 22 பெப்ரவரி 1863 அன்று இவர் பிறந்தார். 28 திசம்பர் 1894 திசம்பர் (அதாவது இவர் இறக்கும் வரை) இவர் ஆட்சியில் இருந்தார். இவரின் அம்மா லக்சுமிவிலாச சனித்தான ஸ்ரீ பிரதாப குமரி அம்மணி அவரு மூன்றாம் கிருட்டிணராச உடையாருடைய மகள் ஆவார். இவர் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.

நான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940

நான்காம் கிருட்டிணராச உடையார் மைசூரின் மன்னராக 1894 ஆம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறினார். தான் இறக்கும் வரை (அதாவது 1940 ஆம் ஆண்டு வரை) இவர் ஆட்சியில் இருந்தார். இவர் ஒரு மெய்யியலாளர் ஆவார். இவர் இறக்கும் போது உலகப் பணக்கார நபர்களுள் ஒருவராக திகழ்ந்தார். அப்போது இவருடைய சொத்து 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். 2010 ஆம் ஆண்டில் இதன் மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இவர் மைசூரை ஆண்ட உடையார் வம்சத்தின் இருபத்து நான்காம் மன்னர் ஆவார். இவர் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.

செயசாமராச உடையார் 1940-1950

ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் மைசூர் சமஸ்தானத்தின் 25 வது மற்றும் கடைசி அரசராக 1940 லிருந்து 1950 வரை இருந்தார். மதராஸ் மாநில ஆளுநராகப் பதவி வகித்தவர். 1964 தொடக்கம் 1966 வரை. இவர் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தவர். இவர் ஒரு மெய்யியலாளர், இசையியலாளர், அரசியல் சிந்தனையாளர் மற்றும் கொடையாளராக அறியப்படுகிறார்.[

கௌரவ அரச உடையார்கள்

செயசாமராச உடையார் 1950-1974

ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் மைசூர் சமஸ்தானத்தின் 25 வது மற்றும் கடைசி அரசராக 1940 லிருந்து 1950 வரை இருந்தார். மதராஸ் மாநில ஆளுநராகப் பதவி வகித்தவர்.

சிறீகண்ட உடையார் 1974-2013

ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் இவர் மைசூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தெடுக்கப்பட்டார்.இவர் மைசூர் சமஸ்தானத்தின் 26 வது மற்றும் கடைசி அரசரான ஜெயச்சாமராஜா உடையாரின் மகன் ஆவார். இவரது தந்தையை அடுத்து 1974 ஆம் ஆண்டு இவர் மைசூர் மன்னராக பொறுப்பேற்றார். எனினும் அந்தப் பதவி சம்பிரதாய பூர்வமானதாகவே இருந்தது. நவராத்திரி விழாவில் இவரது பங்கு முன்னிலைப் படுத்தப்பட்டது டிசம்பர் 10 2013 அன்று பெங்களூரு அரண்மனையில் மாரடைப்பால் காலமானார். டிசம்பர் 11 2013 அன்று அவரது உடல் தங்க அம்பாரியில் நஞ்சன்கூடு கொண்டு செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015

யதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார் அல்லது பன்னிரெண்டாம் சாமராச உடையார் என்று அழைக்கப்படுபவர், உடையார் மரபின் 27ஆவது மற்றும் தற்போதய மைசூர் மகாராஜா. இவருக்கு முன் மன்னராக இருந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் வாரிசு இல்லாமல் திசம்பர் 2013 ல் இறந்தார். இதனால் மறைந்த மன்னரின் சகோதரி மகள் காயத்ரி தேவியின் மகள் லீலாதேவி என்கிற திரிபுரசுந்தரியின் மகனான யதுவீரர் பிப்ரவரி 23, 2015 அன்று மகாராணி பிரமோதா தேவியால் யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் என்று பெயர் சூட்டி தத்தெடுத்து மைசூர் மகாராஜாவின் வாரிசாக ஆக்கப்பட்டார். யதுவீர் கோபால்ராஜ் என்ற இயற்பெயருடன் யாதவ குலத்தில் பிறந்த இவர் ஸ்வரூப் ஆனந்த் கோபால்ராஜ், இளவரசி திரிபுரசுந்தரி தேவி ஆகியோரின் ஒரே மகன். இவரின் தங்கை ஜெயத்மிகா லட்சுமி தற்போது இங்கிலாந்தில் படித்துவருகிறார். இவர் 10 ஆம் வகுப்பு வரை பெங்களூரில் வித்யா நிகேதன் பள்ளியில் படித்தார், பிறகு 12 ஆம் வகுப்பை பெங்களூர் கனடிய சர்வதேசப் பள்ளியில் நிறைவுசெய்தார். பின்னர் ஐக்கிய அமெரிக்கா சென்று மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பொருளியல் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலைப்பட்டம் பெற்றார்.

மன்னரின் ராஜகுரு, குடும்பத்தார் போன்றோரின் ஆலோசனை பெற்ற பின் மகாராணி பிரமோதா தேவி பிப்ரவரி 12, 2015 இல் மைசூர் அம்பா விலாஸ் மாளிகையில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், மரபின் புதிய மன்னரின் பெயரை அறிவித்தார். பெப்ரவரி 23, 2015 ஆம் நாள் அவரை தத்தெடுத்ததின் மூலமாக, அவர் முறையாக மைசூர் மன்னரின் வாரிசாக்கப்பட்டு யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டார். மே 28, 2015 இல் மைசூர் மன்னராக முடிசூட்டப்பட்டார்.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *