தஞ்சை நாயக்கர்கள் வரலாறு

11ஆம் நுாற்றாண்டில் விஜயநகரப் பேரரசு உருவானபோது விஜயநகரப் பேரரசர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு தளபதிகளை அரசப் பிரதிநிதிகளாய் அமர்த்தி ஆட்சி செய்தனர். தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கியிருந்தன விஜயநகரப் பேரரசு பலமிழந்தபோது, இந்த அரசப் பிரதிநிதிகள் தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு விஜயநகரப் பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். விஜயநகரப் பேரரசிலிருந்து சுயாட்சி பெற்று செஞ்சி, காளஹஸ்தி, தஞ்சாவூர், மதுரை ஆகிய நகரங்களை தலைநகராக் கொண்டு நாயக்க மன்னர்களின் ஆட்சி ஏற்பட்டது.

தஞ்சை நாயக்கர்கள்

தஞ்சையில் கி.பி. 1532-இல் நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கியது. தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ மண்டலத்தை ஆண்டு வந்தனர். தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள். இவ்வம்சத்தின் முதல் மன்னன் சேவப்ப நாயக்கர் என்பவராவர். சேவப்ப நாயக்கர், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் அமர நாயக்கராகவும் இருந்த திம்மப்ப நாயக்கரின் மகன் ஆவார்.

கோவிந்த தீட்சிதர்

சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர் எனும் மூன்று தஞ்சை நாயக்க மன்னர்களுக்கும் அமைச்சராக, ஆசிரியராக, மற்றும் புலவராகத் திகழ்ந்தவர் கோவிந்த தீட்சிதர் ஆவார்

சேவப்ப நாயக்கர்

சேவப்ப நாயக்கர் கி.பி.1532ம் ஆண்டு முதல் கி.பி.1560ம் ஆண்டு வரையில் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த நாயக்கவம்சத்தின் முதல் மன்னன் ஆவார். சேவப்ப நாயக்கரின் தந்தை திம்மப்ப நாயக்கர் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் இராஜப்பிரதிநிதியாகவும் இருந்தவர். சேவப்ப நாயக்கரின் மகன் அச்சுதப்ப நாயக்கர் இளவரசு பட்டம் ஏற்று தந்தையுடன் சோழமண்டலத்தை 48 ஆண்டுகள் அமைதியுடன் சிறப்பாக ஆண்டுவந்தார்.பல அறப்பணிகளை செய்தார்

அச்சுதப்ப நாயக்கர்

அச்சுதப்ப நாயக்கர் கி.பி.1560ம் ஆண்டு முதல் கி.பி.1617ம் ஆண்டு வரையில் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த நாயக்கவம்சத்தின் இரண்டாவது மன்னன் ஆவர்.

இரகுநாத நாயக்கர்

இரகுநாத நாயக்கர் கி.பி.1617ம் ஆண்டு முதல் கி.பி.1633ம் ஆண்டு வரையில் சோழ மண்டலத்தை ஆட்சிசெய்தார். தஞ்சையை ஆண்ட நாயக்கர்களில் தனிச்சிறப்புடையவராக விளங்கியவர். இவர் தமது ஆட்சிக்காலத்தில் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி கண்டார். ஈழத்தில் வெற்றி பெற்ற பிறகு தஞ்சையை நோக்கித் திரும்பும் வழியில் தோப்பூர் என்னும் இடத்தில் ஜக்கராயன் என்பவனோடு போரிட்டார். ஜக்கராயன் விசயநகரப் பேரரசுக்கு உட்பட்ட கோலார் பகுதியை ஆண்டு வந்தவன் ஆவான். இவன் விசயநகரப் பேரரசைக் கவரச் சதி செய்தான். இதனை யாசம நாயக்கர் என்ற குறுநில அரசர் அறிந்தார். இவர் விசயநகரப் பேரரசின் விசுவாசி ஆவார். யாசம நாயக்கர் ஒரு பெரும்படை திரட்டிச் சென்று ஜக்கராயனோடு போரிட்டார். போர் கல்லணைக்கு அருகில் உள்ள தோப்பூர் என்னும் இடத்தில் நடைபெற்றது. தற்போது இந்த இடம் தோகூர் என்றழைக்கப்படுகிறது

இப்போரில் ஜக்கராயனுக்கு மதுரை, செஞ்சி நாயக்கர்கள் துணைநின்றனர். ஜக்கராயன் செஞ்சி, மதுரை நாயக்கர்களோடு சேர்ந்து கொண்டு தஞ்சைக்கு மேற்கே உள்ள கல்லணையை இடிக்க முற்பட்டான். இதனை அறிந்த இரகுநாத நாயக்கர் பெரும்படையுடன் சென்று தோப்பூர் என்னும் இடத்தில் ஜக்கராயன் படைகளோடு பெரும்போர் செய்தார். ஜக்கராயனுக்குத் துணைநின்ற மதுரை நாயக்கரும், செஞ்சி நாயக்கரும் தோல்வியுற்றுப் போர்க்களம் விட்டோடினர். ஜக்கராயன் போரில் கொல்லப்பட்டான். இரகுநாத நாயக்கர் மாபெரும் வெற்றி பெற்றார். தோப்பூர்ப் போர் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த போராகக் கருதப்படுகிறது. இரகுநாத நாயக்கர் தம் முன்னோர் போல, விசயநகரப் பேரரசிற்கு ஆதரவாளராகவே இருந்தார்.

இரகுநாத நாயக்கர் காலத்தில் டச்சு, டென்மார்க், இங்கிலாந்து, போர்த்துகீசு வாணிகர்கள் தஞ்சைக்கு வருகை புரிந்து வாணிபத்திற்காகப் போட்டியிட்டனர். டென்மார்க் நாட்டவர் தரங்கம்பாடி என்னும் சிறு துறைமுகப்பட்டினத்தில் தங்கி வாணிபம் செய்ய இரகுநாத நாயக்கர் அனுமதி வழங்கினார். இரகுநாத நாயக்கர் டென்மார்க் நாட்டவரோடு கொண்ட நட்புறவால் வாணிபம் நடைபெற்றது.

தஞ்சாவூர் வீணை

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் வீணை முதன்முதலாக இம்மன்னர் காலத்தில் முதன் முதலில் செய்யப்பட்டது. ஆகவேதான் தஞ்சாவூர் வீணை என்றும் இரகுநாத வீணை என்றும் பெயர் பெற்றது.

விஜயராகவ நாயக்கர்

விஜயராகவ நாயக்கர் கி.பி.1633ம் ஆண்டு முதல் கி.பி.1673ம் ஆண்டு வரையில் சோழ மண்டலத்தை ஆட்சிசெய்தார். இவர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த நாயக்கவம்சத்தின் நான்காவது மன்னன். இவர் தம் தந்தையாரின் ஆட்சிக் காலத்திலேயே கி.பி.1631இல் இளவரசுப் பட்டம் சூட்டப் பெற்று, அரசு பொறுப்புகளைத் தந்தையாருடன் இணைந்து கவனித்து வந்தார். இரகுநாத நாயக்கர் கி.பி. 1645இல் மறைந்ததும் அதே ஆண்டில் விசயராகவ நாயக்கர் முறைப்படி தஞ்சை நாயக்கர் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டார்.

மதுரைக்கும் தஞ்சைக்கும் இடையே இவர் காலத்திலும் மோதல் தொடர்ந்தது.மதுரையை ஆண்ட மன்னன் சொக்கநாத நாயக்கருக்கு விஜயராகவ நாயக்கர் தன் மகளைக் கொடுக்க மறுத்துத்ததால், சொக்கநாத நாயக்கர் இவர் மீது கி.பி.1673இல் போர் தொடுத்தார். சொக்கநாத நாயக்கரின் படை தஞ்சைப் பகுதியில் உள்ள வல்லம் என்னும் ஊரைக் கைப்பற்றியது. சொக்கநாத நாயக்கரின் தளவாய் கிருஷ்ணப்ப நாயக்கர், விசயராகவ நாயக்கரை அணுகி, இந்நிலையிலேனும் மகளைக் கொடுத்துச் சமாதானம் செய்து கொள்ளுமாறு அவரிடம் வேண்டினார். ஆனால் விஜயராகவ நாயக்கர் அந்தபுரத்தை வெடிவைத்து அழிக்குமாறு சொல்லி விட்டுப் போரைத் தொடர்ந்தார். இறுதிவரை பணியவில்லை. இறுதியில் அவர் தம் மகளுடன் உயிர் நீத்தார். விசயராகவ நாயக்கர் மறைவுக்குப் பின்னர்த் தஞ்சை நாயக்கர் ஆட்சி மறைந்தது. தஞ்சையைக் கைப்பற்றிய சொக்கநாத நாயக்கர் தன் சிற்றன்னையின் மகனும், தன் தம்பியுமாகிய அழகிரி நாயக்கரைத் தஞ்சையின் அரசபிரதிநிதியாக்கினார். விசயராகவ நாயக்கரோடு தஞ்சை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது

வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி

கணபதிப்பெருமானை வெள்ளை விநாயகராக ஆவாகித்து வழிபடுவது ஒரு மரபாகும். இதனைச் சுவேத விநாயகர் எனக் குறிப்பர். ‘சுவேத விநாயகர் கல்பம்‘ என்றொரு நூலும் உண்டு. தஞ்சாவூர்க் கோட்டையின் கிழக்கு வாசலுக்கு எதிரில், அகழியின் வெளிப்புறம் இரண்டு கோயில்கள் உள்ளன. வடபுறம் உள்ள கோயில் வெள்ளை விநாயகர் கோயிலாகும். மன்னர் விஜயராகவ நாயக்கர் காலத்தில் இந்த விநாயகப் பெருமானைப் போற்றும் வகையில் ‘வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி‘ என்ற சிறுநூல் ஒன்று எழுந்துள்ளது. இந்நூலின் இறுதிப்பாடலில் ‘விஜயராகவ நாயக்கர் வாழி, ‘தளவாய் வேங்டந்திரன் வாழி‘ என்ற வரிகள் உள்ளன.

இவர் 32க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை எழுதி, அவற்றில் பெரும்பாலான நாடகங்களை மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடிக்கவும் செய்துள்ளார். குறிப்பாக பாகவதமேளா என்ற நாட்டிய நாடக மரபில் பிரதான நாடகமாகப் போற்றப்பெறுகின்ற பிரகலாத நாடகம் ஒன்றை விஜயராகவனே எழுதி மன்னார்குடி கோயிலில் அரங்கேற்றியுள்ளார் என்பதை சுவடிகள் வாயிலாக அறியும்போது, குச்சுப்புடி நாட்டிய மரபின் பல அம்சங்கள் மன்னார்குடியில் இருந்துதான் சென்றுள்ளது என்பதை நம்ப முடிகிறது

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *