மதுரை நாயக்கர்கள்

11ஆம் நுாற்றாண்டில் விஜயநகரப் பேரரசு உருவானபோது விஜயநகரப் பேரரசர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு தளபதிகளை அரசப் பிரதிநிதிகளாய் அமர்த்தி ஆட்சி செய்தனர். தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கியிருந்தன விஜயநகரப் பேரரசு பலமிழந்தபோது, இந்த அரசப் பிரதிநிதிகள் தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு விஜயநகரப் பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். விஜயநகரப் பேரரசிலிருந்து சுயாட்சி பெற்று செஞ்சி, காளஹஸ்தி, தஞ்சாவூர், மதுரை ஆகிய நகரங்களை தலைநகராக் கொண்டு நாயக்க மன்னர்களின் ஆட்சி ஏற்பட்டது.

மதுரை நாயக்கர்கள்

மதுரை நாயக்கர்கள், மதுரையையும், அதைச் சார்ந்த பகுதிகளையும் கி.பி.1529ம் ஆண்டு முதல் கி.பி.1736ம் ஆண்டு வரை ஆண்டார்கள். நாயக்க மனர்களிலேயே மதுரை நாயக்கர்களே நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள். கி.பி.1529-ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1736-ஆம் ஆண்டு வரை மதுரையில் மட்டும் 207 ஆண்டுகள் தொடர்ந்து இவர்கள் ஆட்சி நிலவியது.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் 12ஆம் நுாற்றாண்டில் விஜயநகரப் பேரரசசு உருவானபோது அரசப் பிரதிநிதிகளாக இருந்தனர். விஜயநகரப் பேரரசு பலமிழந்தபோது, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். நிர்வாக முறைகளில் புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் மதுரை நாயக்கர்கள் மக்களோடு தங்கள் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டனர். இவற்றுள் தங்கள் நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்து நிர்வாகம் மேற்கொண்டது முக்கியமானது.

மதுரை நாயக்கர் தோற்றம்

விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் நாகம நாயக்கர். இவருடைய மகன் விசுவநாத நாயக்கர். கிருஷ்ண தேவராயரிடம் பணிக்குச் சேர்ந்த விசுவநாத நாயக்கர், பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். அக்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின. அதனை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கர் படையுடன் அனுப்பிவைக்கப்பட்டார் . எடுத்த பொறுப்பைச் செவ்வனே முடித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக அமர்த்தப்பட்டார். இவருடைய பரம்பரையினரே மதுரை நாயக்கர்கள் என அழைக்கப்பட்டவர்கள்.

மதுரை நாயக்கர் வம்சம்

முதல் ஐந்து மதுரை நாயக்கர்களும் விஜயநகரப்பேரரசுக்கு விசுவாசமாக அதற்கு அடங்கியே இருந்தார்கள். ஆறாவதாக கி.பி.1609ம் ஆண்டு முதல் கி.பி.1623ம் ஆண்டு வரை மதுரையை ஆண்ட நாயக்கரான முத்துவீரப்ப நாயக்கர், அக்காலத்தில் வலுவிழந்திருந்த விஜயநகரத்துக்குத் திறை கொடுப்பதை நிறுத்திக்கொண்டார். இவரருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர் காலம் மதுரை நாயக்கர்களின் பொற்காலம் எனலாம். திருமலை நாயக்கருக்குப் பின்னர் இவ்வம்சத்தைச் சேர்ந்த மேலும் அறுவர் ஆட்சி செய்தனர். இவர்களுள் இராணி மங்கம்மாள் குறிப்பிடத்தக்கவர். இறுதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் இராணி மீனாட்சி. 1732 இல் நாயக்க மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. எனினும் அரசுரிமைப் போட்டியில் அவருக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான சாந்தா சாகிப் அவரை சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டார். இதன் மூலம் மதுரை நாயக்கர் வம்சம் முடிவுக்கு வந்தது.

விசுவநாத நாயக்கர்

விசுவநாத நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் முதலாமவர் ஆவார். இவர் கி.பி. 1529ம் ஆண்டு முதல் கி.பி.1564ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தார். இவரது ஆட்சியில் கேரளத்தின் முப்பது பகுதிகள் உட்பட மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய பகுதிகள் அடங்கியிருந்தன. இவர் 72 பாளையங்களை உருவாக்கினார் . அவை கி.பி.1800 ஆம் ஆண்டுவரை நீடித்திருந்தன.

முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர்

முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவர் கி.பி. 1564ம் ஆண்டு முதல் கி.பி.1572ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தார். விசுவநாத நாயக்கரின் மகன் பரமக்குடிப் பாளையக்காரனை அடக்கியவர்.

வீரப்ப நாயக்கர்

வீரப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவர் கி.பி. 1572ம் ஆண்டு முதல் கி.பி.1595ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தார். இவர் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கனின் மகன். இவரது ஆட்சிகாலத்தில் அமைதி நிலவியது. இவர் சிதம்பரம் கோயிலின் வடக்கு கோபுரத்தையும் ஆயிரங்கால் மண்டபத்தையும் கட்டுவித்தார்.

இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்

இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவர் கி.பி. 1595ம் ஆண்டு முதல் கி.பி.1601ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தார். இவர் விஜயநகர மன்னன் முதலாம் வேங்கடவனுகுக் கப்பம் கட்டுவதை நிறுத்தியதாக ஹீராஸ் என்ற பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.

முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர்

முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவர் கி.பி. 1601ம் ஆண்டு முதல் கி.பி.1609ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தார். இவர் ஆட்சிக் காலத்தில் சேதுபதிக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இவரின் மகன்கள் முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் மற்றும் திருமலை நாயக்கர் ஆவர்.

முதலாம் முத்துவீரப்ப நாயக்கர்

முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவர் கி.பி. 1609ம் ஆண்டு முதல் கி.பி.1623ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தார். இவர் ஆட்சிக் காலத்தில் மதுரை, தஞ்சை நாயக்கர்களிடையே போர் மூண்டதால் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார்

திருமலை நாயக்கர்

திருமலை நாயக்கர், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் கி.பி 1623ம் ஆண்டு முதல் கி.பி.1659ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும் முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பிரிச்சனைகள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை இவர் சிதையாமல் காப்பாற்றினார். இவரது ஆட்சிப்பகுதிக்குள் பண்டைய பாண்டிநாட்டின் பெரும் பகுதி அடங்கியிருந்தது. இவர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மகனாக கி.பி 1584 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு என்பதாகும். முதலாம் முத்துவீரப்பர் சந்ததியின்றி இறந்தமையால் இவரது தம்பி திருமலை நாயக்கர் மதுரை நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.

ஆட்சிப் பகுதிகள்

திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியிலிருந்து தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார். திருநெல்வேலி , திருவிதாங்கூர் ஆட்சிபகுதியின் ஒரு பகுதி இத்துடன் தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மணப்பாறை, கோயம்புத்தூர், சேலம் மற்றும் திருச்சி போன்ற பகுதிகள் நாயக்க மன்னரால் ஆளப்பட்டன. இந்த பகுதிகள் திருமலை நாயக்கரின் ஆளுகையில் இருந்தாலும் இவற்றை நேரடியாக ஆட்சி செய்தவர்கள் அந்த பகுதிகளில் நாயக்கர்கள் சார்பில் நியமிக்கப்பட்ட பாளிகார் என்றழைக்கப்படும் பாளையக்காரர்கள்.

திருமலை நாயக்கர், கட்டிடக்கலை உள்ளிட்ட கலைகள் மீது ஆர்வம் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்தார். பழைய கோயில்களைத் திருத்தி அமைத்தார். திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. புதுமண்டபம் கட்டி முடித்த பின்னர், இவரால் துவக்கப்பட்ட இராய கோபுரம் கட்டிடப் பணி முற்றுப் பெறாமலேயே உள்ளது.

மணிமண்டபம்

திருமலை நாயக்கர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் தீவிரமான பக்தன். தினந்தோரும் ஆண்டாள் கோவில் உச்சிகால பூசை முடித்த பின் மதிய உணவு உட்கொள்வது வழக்கம். மன்னர் மதுரையில் இருக்கும்போது ஆண்டாள் கோவில் பூசை மணிஓசையை அறிந்துகொள்ள வழிநெடுக பல மணிமண்டபங்களை அமைத்தார்.

இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர்

இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவரது ஆட்சிக் காலம் 1659 ஆம் ஆண்டில் நான்கு மாதங்கள் மட்டுமேயாகும். இவர் காலத்தில் லிங்கம நாயக்கர் தலைமையில் திருச்சிக் கோட்டை வலுவாக்கப்பட்டது.

சொக்கநாத நாயக்கர்

சொக்கநாத நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1659 முதல் 1682 வரை ஆகும். இவர் தலைநகரைத் திருச்சிக்கு மாற்றினார், இராணி மங்கம்மாள் இவருடைய மனைவி ஆவார், அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இவருடைய மகன் ஆவார் . மதுரை நாயக்கர் மன்னர்களால் கி.பி.17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட சொக்கநாத நாயக்கர் அரண்மனை தற்போது இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் என்றழைக்கப்படுகிறது. இது திருச்சிராப்பள்ளியில் புகழ்பெற்ற மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. தற்போது இங்கு, திருச்சி அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. அழகிரி நாயக்கரை தஞ்சையில் ஆட்சியில் அமர்த்தினார். அழகிரி நாயக்கர் 1674 இல் தன்னை மதுரை நாயக்கர் ஆட்சியிலிருந்து விடுவித்துக் கொண்டார்

அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர்

அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் அல்லது மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1682 முதல் 1689 வரை ஆகும். இவர் சொக்கநாத நாயக்கரின் மகன். இவன் பட்டத்திற்கு வரும்போது 15 வயதினனாக இருந்ததால் இவரது தாய் மங்கம்மாளே ஆட்சிப் பொறுப்பேற்று நடத்தினார்

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *