மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்

தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஆகும். இது இராஜசிம்மன் என்றழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது. இக்கோயிலில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமாஸ்கந்தர் மற்றும் பள்ளிக்கொண்ட நிலையில் ஜலசயன பெருமாள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றனர்.
மாமல்லபுரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் இது மாமல்லபுரம் கடற்கரை கோயில் என்று அழைக்கப்படுகிறது.

இது கி. பி. எட்டாம் நூற்றாண்டில் (700-728) முதல் கருங்கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாகும். அக்காலத்தில் இந்த இடம் ஒரு துறைமுகமாக இருந்தது. அப்போது இந்த இடத்தை இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் ஆண்டு கொண்டிருந்தான். இக்கடற்கரைக் கோயிலை 1984ல் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. இக்கடற்கரை கோயில், தென்னிந்தியாவின் கற்களால் கட்டுமானம் செய்யப்பட்ட கோயில்களில் மிகவும் தொன்மையானதாகும்.

மாமல்லபுரக் கடற்கரையில் அமைந்துள்ள, கடற்கரைக் கோயில்கள் என அறியப்படுகின்ற கோயில்கள் அனைத்தும் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டபப்பட்டவையே. ஒற்றைக்கல் யானை, அருச்சுனன் தபசு, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியன இவற்றில் குறிப்பிடத் தகுந்தவை.

மார்க்கோபோலோ மற்றும் அவருக்குப்பின் வந்த ஐரோப்பிய வணிகர்கள் இந்த இடத்தை ஏழு அடுக்கு ஸ்தூபிகள் என்று அழைத்தனர். அந்த ஏழு அடுக்கு ஸ்தூபிகளில் ஒன்று இந்த கடற்கரை கோயில் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலானது அவர்களது கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல செயல்பட்டிருக்கலாம்.

7 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து மன்னன் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் குகைக் கோயில்கள் மற்றும் ரதங்கள் உள்ளிட்ட பல கட்டடக் கலை படைப்புகளை ஆரம்பித்து வைத்தார். அந்த கட்டடக்கலை படைப்புகளின் உச்ச நிலையாக இந்த கட்டமைப்பு கோயில் வளாகம் கருதப்படுகிறது. குடைவரை கோயில் அமைப்புகளை செதுக்கும் கட்டடக்கலை படைப்பானது பின்வந்த காலங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதனை நாம் அதிரனசந்த குகை, பிடாரி இரதங்கள் மற்றும் புலிக்குகை ஆகியவற்றின் மூலம் அறியலாம். கடற்கரை கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் வளாகத்தின் நேர்த்தியான கட்டமைப்பை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு இரண்டாம் நரசிம்மவர்மனையே சாரும். கடலில் மூழ்கிப்போன கோயில் வளாகங்களில் மீதமிருக்கும் கடைசி கோயில் வளாகம் என்று இது இப்போது ஊகிக்கப்படுகிறது; 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கியபோது இந்த கோயில் வளாகத்துடன் தொடர்புடைய கடலில் மூழ்கிப்போன எஞ்சிய கோயில்களின் அமைப்பானது வெளியே தெரிந்தது. கடற்கரைக் கோயிலின் கட்டட அமைப்பானது பல்லவர்களை வெற்றிகொண்டு தமிழகத்தை ஆண்ட சோழர்களாலும் சோழர்கள் கட்டிய கோயில்களில் பின்பற்றப்பட்டது.

மண்டபங்கள்

பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே இந்த வகைக் கோயில்கள். இவற்றின் பின்புறச் சுவரில் கருவறைகளும் அதற்கு முன்பாக அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய முன்னறைகளும் இருக்கும். கட்டுமானத்தைத் தாங்கும் வகையில் தூண்கள் செதுக்கப்பட்டிருக்கும். இவ்வகைக் கோயில்களில் ஒரு கருவறை அல்லது மூன்று கருவறைகள் அல்லது ஐந்து கருவறைகள் கூட இருக்கலாம். எல்லாக் கோயில்களிலும் கருவறைக்கு முன் அர்த்தமண்டபம் இருக்கும். சிலவற்றில் மட்டுமே முகமண்டபம் என்ற அர்த்தமண்டபத்துக்கும் கருவறைக்கும் இடைப்பட்ட இடம் இருக்கும்.

கருவறைகள் சிவன், திருமால், பிரம்மன், துர்க்கை, சுப்ரமணியன் ஆகிய தெய்வங்களுக்கானவை. இந்தத் தெய்வங்கள் சில கருவறைகளில் சிலைகளாகப் பின் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லாக் கருவறைகளிலும் அப்படி இல்லை. மரத்தில் செதுக்கப்பட்டோ அல்லது துணியில் வரையப்பட்டு மரச்சட்டத்தில் பொருத்தப்பட்டோ உள்ளே வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அறிஞர்கள். சிவனுக்குரிய கருவறைகளில் லிங்கத்தை நட்டு வைப்பதற்கான குழி காணப்படுகிறது. சில கருவறைகளில் லிங்கமும் உள்ளது. ஒவ்வொரு கருவறைக்கும் வெளியே இரு துவாரபாலகர்கள் எனப்படும் வாயில்காப்பாளர்கள் சிற்பங்களைக் காணலாம். பெண் தெய்வம் (துர்க்கை) எனில், வாயில்காப்பாளர்களும் பெண்களாக இருப்பார்கள்.

மண்டபங்கள் – வராக மண்டபம், மகிடாசுரமர்த்தினி மண்டபம், இராமானுஜ மண்டபம், மும்மூர்த்திகள் மண்டபம், கோடிக்கல் மண்டபம், கோனேரி மண்டபம், அதிரணசண்ட மண்டபம்
ஆரம்பிக்கப்பட்டு, பாதியிலேயே கைவிடப்பட்ட சில மண்டபங்கள்

இரதங்கள்

இயற்கையான பாறையை மேலிருந்து கீழ்நோக்கிச் செதுக்கித் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில், தேர் போலக் காட்சியளிப்பதால் இரதம் என்று அழைக்கப்படுகிறது. இவைதான் பிற்காலக் கோயில்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்கின்றன. இவற்றின் மேல்பகுதி விமானம் என்று அழைக்கப்படும். மாமல்லபுரச் சிற்பிகள் பல்வேறு விதமான விமானங்களைச் சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு இரதக் கோயிலிலும் ஒரு கருவறை உண்டு. கருவறைக்கு இருபுறமும் வாயில்காப்போரும் உண்டு.

மாமல்லபுரத்தில் இருக்கும் இரதங்கள்

பஞ்சபாண்டவ இரதம் எனப்படும் ஐந்து இரதங்கள், வலையன்குட்டை இரதம், பிடாரி இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள், கணேச இரதம். ஐந்து இரதங்கள் – தர்மராஜ ரதம், பீம ரதம், அருச்சுன ரதம், திரௌபதை ரதம், நகுல சகாதேவ இரதம்

முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் (கி.பி. 630 – 668) அரிய படைப்பான பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்குச் சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காகச் சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.

இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர்கள் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல. மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்தை உடைய தர்மராஜா இரதம் மற்றும் அர்ஜூன இரதம், சாலை வடிவிலான சிகரத்தை உடைய பீம இரதம், சதுரமான குடிசை போன்ற சிகரத்தை உடைய திரௌபதி இரதம் மற்றும் கஜபிருஷ்டம் (யானையின் பின்பக்கம்) போன்ற சிகரத்தை உடைய சகாதேவ இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதை அவற்றின் ஸ்தூபிகள் பாறையிலிருந்து பிரிக்கப்பட்டு சிகரத்தின் மீது பொருத்தப்படாமல் இருப்பதிலிருந்து அறியலாம்.

தர்மராஜ இரதம்

மாமல்லபுரத்தின் ரதங்களிலேயே மிகவும் பெரியதும், மிகவும் அழகு வாய்ந்ததும் தர்மராஜ இரதம் ஆகும். இந்த ரதத்தில் மூன்று தளங்கள் உள்ளன. மேலே உள்ள இரண்டு தளங்களும் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளன. தரைத்தளம் முழுவதுமாகச் செதுக்கப்படவில்லை. மேல் இரு தளங்களிலும் ஒவ்வொரு கருவறை உள்ளது. அதனுள் சோமாஸ்கந்தர் சிற்பங்கள் உள்ளன. அவைதவிர இரு தளங்களின் சுற்றுகளிலும் மிக அற்புதமான சிற்பங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் மேலே உள்ள தளங்களுக்குச் செல்லப் படிகள் கிடையாது. பொதுமக்களுக்கு இந்த இடத்துக்குச் சென்று பார்க்கும் அனுமதியும் கிடையாது. இந்த இடத்தை நிர்வகிக்கும் தொல்லியல் துறையின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இங்கே சென்று பார்க்க முடியும். தரைத்தளத்தில் கருவறை குடையப்படவில்லை. ஆனால் அதன் எட்டு மூலைகளிலும் எட்டு அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன. அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரன், சுப்பிரமணியன், பைரவன் வடிவில் சிவன், மேலும் இரு வேறு சிவன், பிரமன் மற்றும் நரசிம்மவர்மப் பல்லவன்.

நரசிம்மவர்மனின் விருதுப் பெயர்கள் பல்லவ கிரந்த எழுத்துகளில் தரைத்தளம் முழுவதிலும் பொறிக்கப்பட்டுள்ளன. அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் பல்லவர் சிற்பக்கலைத்திறனுக்கு ஓர் ஒப்பற்ற சான்றாகும்.
முதல் தளத்தில் மொத்தம் 40 சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் 14 சிவன் வடிவங்கள். இதில் கங்காள மூர்த்தி, வீணை ஏந்திய வீணாதார சிவன், தண்டு முனிவருக்கு நடனம் கற்பிக்கும் சிவன், சண்டிகேசனுக்கு அருளும் சிவன், கங்காதரனாகக் கங்கையைச் சடைமுடியில் ஏந்தும் சிவன், காலாரிமுர்த்தியாகக் காலன் என்ற அசுரனை வதம் செய்யும் சிவன், ரிஷபாந்திகனாகக் காளை மாட்டின்மீது சாய்ந்திருக்கும் சிவன், அந்தகாசுரனை வதம் செய்யும் சிவன், நந்திக்கு அருள் வழங்கும் சிவன் போன்றவை அடங்கும். இவை தவிர, சூரியன், சந்திரன், திருமால், பிரமன், சுப்பிரமணியன் ஆகியோர் சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. பொதுவாக இதுபோன்ற சிற்பங்களே எல்லாக் கோயில்களிலும் காணக்கிடைக்கும் என்றாலும், மிக வித்தியாசமாக இந்தத் தளத்தில் சாதாரணக் கோயில் பணியாளர்களான கையில் ஓலைக்குடலையில் பூவுடன் ஓர் அர்ச்சகர், ஒரு பணியாளர், ஒரு சமையல்காரர், ஓர் ஓதுவார் ஆகியோரும் மிகத் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளனர். பூசைக்கு நீர் எடுத்துச் செல்லும் ஒரு பெண்ணின் அழகான சிற்பமும் இந்தத் தளத்தில் வடிக்கப்பட்டுள்ளது.இரண்டாம் தளத்தில் சூரியன், சந்திரன் ஆகியோரைத் தவிரக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய சிற்பம், தட்சிணாமூர்த்தி வடிவில் உள்ள சிவன். பல்லவ சிற்பக் கலையின் உன்னதத்துக்கு ஒரு சான்றாகத் தர்மராஜ இரதத்தைச் சொல்லலாம்.

கட்டுமானக் கோயில்கள்

ஒரு பெரும் பாறை அல்லது குன்றைக் குடைந்து அல்லது மேலிருந்து செதுக்கிச் செய்யாமல், பல்வேறு கற்களை வெட்டி எடுத்து, ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிச் செய்யப்பட்டவையே கட்டுமானக் கோயில்கள். பிற்காலத்தில் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட கோயில்களுக்கு மாதிரியாகவும் முன்னோடியாகவும் மாமல்லபுரத்தின் இந்தக் கோயில்களைக் கருதலாம். மாமல்லபுரத்தில் மொத்தம் மூன்று பல்லவர் காலக் கட்டுமானக் கோயில்கள் உள்ளன:

முகுந்தநாயனார் கோயில் (தரையில் கட்டப்பட்டது)
உழக்கெண்ணெய் ஈசுவரர் கோயில் (மலைமீது கட்டப்பட்டது)
கடற்கரைக் கோயில்கள் (கடலோரத்தில் கட்டப்பட்டவை)
கடற்கரைக் கோயில்கள்

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்

மாமல்லபுரத்தின் சின்னமாக விளங்கும் கடற்கரைக்கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. முதலில் இங்கு திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. அதற்கு இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியுமாக இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய கோயில் உயரமானதாக ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரத்தை உடையதாக உள்ளது. மேற்கு நோக்கிய கோயில் சிறியதாக, மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்தைக் கொண்டதாக உள்ளது. இரண்டு கோயில்களின் கருவறையின் பின்புறச் சுவரிலும் சோமாஸ்கந்தர் எனப்படும் சிவன், உமை, குழந்தை வடிவிலான குமரன் என்ற மூன்று தெய்வங்களும் சேர்ந்திருக்கும் சிற்பம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்சுற்று ஒன்றும் காணப்படுகிறது. சுவரின் பல இடங்களிலும் பல்வேறு தெய்வச் சிற்பங்களும் புராண பாத்திரங்களும் காணக் கிடைக்கின்றனர்.

அருச்சுனன் தபசு

சுமார் 30 மீட்டர் உயரம், சுமார் 60 மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அருச்சுனன் தபசு என்றழைக்கப்படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எனப் பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே கையில் ஓர் ஆயுதத்தை ஏந்தியபடி சிவன், பூதகணங்கள் சூழ நின்று, வரம் கொடுப்பதாகச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அருச்சுனன் பாசுபதாஸ்திரத்தை வேண்டிச் சிவனை நோக்கித் தவம் செய்யும் காட்சிதான் இங்கே செதுக்கப்பட்டுள்ளது என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். ஒருசிலர், பகீரதன் கங்கையை வரவைப்பதற்காகச் சிவனிடம் தவம் செய்யும் காட்சி இது என்று கூறுகிறார்கள். ஓர் அறிஞர், இந்தச் சிற்பமே ஒரு சிலேடை என்றும் இரு காட்சிகளையும் ஒரே சிற்பத்தில் காட்டும் முயற்சி என்றும் சொல்கிறார். சமீபத்தில் ஓர் அறிஞர், இங்கே தவம் செய்வது பாசுபதாஸ்திரத்தை வேண்டி நிற்கும் அருச்சுனன்தான் என்றும் ஆனால் இந்தச் சிற்பம், மகாபாரதத்தில் வனபர்வத்தின் இமய மலையைச் சித்திரிக்கும் காட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். மாமல்லபுரத்தின் அதிசயம் என்றே இந்தச் சிற்பத் தொகுதியைக் குறிப்பிடவேண்டும். இந்த ஒரு திறந்தவெளிப் பாறையில் சிற்பிகள் 150-க்கும் மேற்பட்ட சிற்பங்களைச் செதுக்கியுள்ளனர்.

கோவர்த்தன சிற்பத் தொகுதி

அருச்சுனன் தபசு பாறைச் சிற்பத்துக்கு அருகில் கிருஷ்ண மண்டபம் என்ற மண்டபம் உள்ளது. இதற்கு உள்ளாகத்தான் கோவர்த்தன சிற்பத் தொகுதி உள்ளது. பல்லவர் காலத்தில் செதுக்கப்படும்போது இந்தச் சிற்பமும் வெளிப்புறப் புடைப்புச் சிற்பமாகத்தான் இருந்தது. பிற்காலத்தில் விஜயநகர ஆட்சியின்போது இதன்மீது மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்திரனுக்கு விழா எடுப்பதை கண்ணன் தடுத்து நிறுத்தியதால் கோபம் கொண்ட இந்திரன் மழையை ஏவ, கோகுலமே மழை, புயல், வெள்ளத்தில் சிக்கிக்கொள்ள, ஆயர்களையும் மாடு கன்றுகளையும் காப்பாற்ற கோவர்த்தனக் குன்றைக் குடையாக எடுத்தான் கண்ணன் என்பது புராணம். இந்தக் கதை தமிழ்ப் பாடல்களில் மிகவும் புகழப்பட்ட ஒன்று. இதனை அப்படியே சிலையாக வடித்துள்ளனர் பல்லவ சிற்பிகள். சிற்பத்தின் நடுவே ஒரு கையால் மலையைத் தூக்கியபடி கண்ணன் நிற்க, அருகே பலராமன், பயந்து நடுங்கும் ஓர் ஆயனை அணைத்து ஆறுதல் தருகிறார். இனி பயமில்லை என்பதால், மாடுகள், கன்றுகள், ஆயர்கள், ஆய்ச்சியர் ஆகியோர் தத்தம் வேலையை மகிழ்ச்சியுடன் செய்கின்றனர். ஒருவர் புல்லாங்குழல் வாசிக்கிறான். இருவர் ஜோடியாக நடனம் ஆடுகின்றனர். ஒருவர் மாட்டிடமிருந்து பால் கறக்கிறார். மாடு வாஞ்சையுடன் தன் கன்றை நாவால் நக்குகிறது. ஒரு ஆய்ச்சி தலையில் சுருட்டிய பாய், ஒரு கையில் உறியில் கட்டி வைத்திருக்கும் பால், தயிர் சட்டிகளுடன் நிற்கிறாள். ஒருவர் தோளில் ஒரு சிறு குழந்தை உட்கார்ந்துள்ளது. சற்றே பெரிய குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர் கையில் பிடித்துள்ளனர். எங்கு திரும்பினாலும் மாடுகள் நம்மைப் பார்க்கின்றன. முல்லை நிலக் காட்சியை அப்படியே அற்புதமாகச் செதுக்கியுள்ளனர் சிற்பிகள்.

அனந்தசயனத்தில் திருமாலின் சிற்பம்

கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின்மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் சுவர்களில் இரண்டு அற்புதமான சிற்பங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான், திருமால் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, மது, கைடபன் என்று இரு அரக்கர்கள் அவரைத் தாக்க வரும் காட்சி.

மகிஷாசுரமர்த்தினி மண்டபத் சிற்பத் தொகுதிகள்

மகிஷாசுரமர்த்தினி, அரக்கன் மகிசாசூரனிடம் போரிடும் சிற்பம்
மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் இருக்கும் மிக அழகான சிற்பத்தொகுதி, ஆதிசக்தியின் ஒரு வடிவான துர்க்கை, சிங்க வாகனத்தில் ஏறி, மகிசாசூரன் என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்யும் காட்சி. மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படும் சக்தி, பத்து கைகளுடன் இருக்கிறாள். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாகக் காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மகிஷாசுரனுக்கு ஆதரவாகப் பல அரக்கர்களும், சக்திக்கு ஆதரவாகப் பல கணங்களும் காணப்படுகிறார்கள்.

வராக மண்டப குகை

வராக மண்டபத்தில் இருக்கும் நான்கு சிற்பத் தொகுதிகளில் ஒன்று திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமிதேவியைக் காப்பாற்றி மேலே எடுத்துவருவது. பூமியை இரணியாட்சன் எனும் அரக்கன் எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் ஒளித்துவைக்க, திருமால் வராக அவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று அரக்கனுடன் போரிட்டு, அவனைக் கொன்று, பூமிதேவியை மீட்டெடுத்து மேலே கொண்டுவரும் காட்சியே இங்கே காட்டப்பட்டுள்ளது. கீழிருந்து மேல்வரை வராகம் எடுத்திருக்கும் விசுவரூபம் சிற்பத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

திரிவிக்கிரம சிற்பத் தொகுதி

வராக மண்டபத்தில் காணப்படும் மற்றொரு சிற்பத் தொகுதி, திருமால் திரிவிக்கிரம அவதாரம் எடுப்பது ஆகும். மகாபலி ஒரு யாகம் செய்து அதன்மூலம் பெரும்பலம் பெறப் பார்க்கிறான். அதனால் பயந்த தேவர்கள் திருமாலை அணுக, அவர் வாமன அவதாரம் எடுத்துச் சிறு பையனாக வருகிறார். மகாபலியிடம் அவர் மூன்றடி மண் கேட்க அவன் கொடுப்பதாக வாக்களிக்கிறான். அந்தக் கணம் வாமனம் விசுவரூபம் எடுத்து மண்ணையும் வானையும் ஆக்கிரமிக்கிறார். அந்தக் கணத்தை அப்படியே பிடித்துச் சிற்பமாக்கியுள்ளனர் பல்லவ சிற்பிகள். திரிவிக்கிரமனின் ஒரு கால் வானை நோக்கிச் செல்கிறது. அந்தக் காலுக்குப் பூசை செய்கிறார் பிரமன். மறுபக்கம் சிவன் தெரிகிறார். தரையில் மகாபலியும் பிற அரக்கர்களும் திகைத்துப்போய் அமர்ந்திருக்கின்றனர். சூரியனும் சந்திரனும் இரு பக்கங்களிலும் காணப்படுகின்றனர்.

பல்லவர் காலத்துக்குப் பிறகு, விஜயநகர அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு திருமால் கோயிலும் (ஸ்தலசயனப் பெருமாள் கோயில்) மாமல்லபுரத்தில் உள்ளது. ஒரு மொட்டை கோபுரத்தையும் காணலாம். கோவர்த்தன சிற்பத் தொகுதியின்மீது அமைக்கப்பட்ட கிருஷ்ண மடபமும் இக்காலத்தில்தான் கட்டப்பட்டது.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *