புதுக்கோட்டை அரசு
ரகுநாதராய தொண்டைமான்
புதுக்கோட்டையை ஆண்ட மன்னர்கள் வம்சமான தொண்டைமான் வம்சத்தை துவங்கி வைத்தவர் ரகுநாதராய தொண்டைமான் ஆவார். ரகுநாதராய தொண்டைமான் கி.பி.1686ம் ஆண்டு முதல் கி.பி.1730ம் ஆண்டுவரை புதுக்கோட்டையை மன்னராக ஆட்சி செய்தார். துவக்கத்தில் ரகுநாதராய தொண்டைமான் இராமநாதபுரம் சேதுபதி மன்னரிடம் படைத்தலைவராக பணிபுரிந்தார். ரகுநாதராய தொண்டைமான் சேதுபதி மன்னருக்கு ஆற்றிய பணிகளுக்காக கி.பி.1686 ஆம் ஆண்டு, இவரை புதுக்கோட்டையின் மன்னனாக ராமநாதபுரம் சேதுபதி மன்னனர் அங்கீகரித்தார்.
துவக்கம்
விஜயநகரப் பேரரசின் மன்னரான மூன்றாம் ஸ்ரீரங்கரிடம் படைத் தளபதியாகவும், கள்ளர் இனத் தலைவராகவும் இருந்த ஆவடைய ரகுநாத தொண்டைமானின் மகனாக கி.பி. 1641ம் ஆண்டில் ரகுநாதராய தொண்டைமான் பிறந்தார். ஆவடையரகுநாத தொண்டைமானின் வீரத்தையும் அவரது ராணுவப் பணிகளையும் பாராட்டி ஸ்ரீரங்கர் அவருக்கு கி.பி.1639 ஆம் ஆண்டு ராயராகுத்த ராயவஜ்ரீடு ராயமன்னீடு ராய என்ற பட்டத்தையும் ஏராளமான நிலங்களையும், பரிசுகளையும் அளித்தார்.
இளமைப் பருவம்
இளமையில் ரகுநாதராய தொண்டைமான் தனி ஆசிரியரிடம் பயிற்றுவிக்கப்பட்டார். போர்க்கலைகள் அனைத்தும் திறம்பட பயிற்றுவிக்கப் பட்டார். கி.பி.1661 ஆண்டில் இவரது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் ராமநாதபுரம் அரசின் படைத்தலைவனாகப் பதவியேற்றார். இராமநாதபுரம் சேதுபதி அரசருக்காக ரகுநாதராய தொண்டைமான் பல போர்களில் ஈடுபட்டார்.
புதுக்கோட்டை
தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அன்று அறந்தாங்கிப் பகுதி நீங்கலாகக் கள்ளர் சீமை என வழங்கப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்த குடிமக்கள் மிகப் பெரும்பாலானோர் கள்ளர் என்ற இனத்தவர். இவர்களது தலைவராகக் குளத்துர் ரகுநாதராய தொண்டைமான் இருந்து வந்தார். பேராற்றல் மிக்க இந்த வீரரையும் இவரது சகோதரர் நமனத் தொண்டைமானையும் இராமநாதபுரத்திற்குச் சேது மன்னர் வரவழைத்து அவர்களுக்கு மிக உயர்ந்த இராணுவப் பதவிகளை வழங்கி இருந்தார். இந்த இரு சகோதரர்களது தங்கையான நாச்சியார் என்பவரும் சிறந்த வீராங்கனையாக விளங்கியதால் ராமநாதபுரம் அரசர் அவரை மன்னர் தமது பட்ட மகிஷியாக ஏற்றுக்கொண்டார். மன்னரைப் போன்று இந்தப் பெண்மணியும் ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை காட்டி வந்தார்.
ரகுநாதராய தொண்டைமான் சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த விடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை யென்று பெயர் கொடுத்தார். இரு நாழிகை வழி நீளமுள்ள மதிலும், கோட்டையும் கட்டினார்.
ரகுநாதராய தொண்டைமானின் சேவையையும் நன்றியுணர்வையும் பாராட்டும் விதமாக ராமநாதபுரம் அரசர் கி.பி.1625 ஆம் ஆண்டில் திருமயம் கோட்டை மற்றும் நிலங்களையும் அளித்து, “புதுக்கோட்டை அரசர்” என்ற பட்டத்தையும் பயன்படுத்த அனுமதித்தார்
ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு ரகுநாதராய தொண்டைமான் ஆற்றிய சீரிய பணிகளுக்காக சேதுபதி மன்னர் கி.பி.1675 ம் ஆண்டு புதுக்கோட்டையை தனி நாடாகவும் ரகுநாதராய தொண்டைமானை மன்னனாகவும் அங்கீகரித்தார்.
புதுக்கோட்டை அரசு
ரகுநாதராய தொண்டைமான் 1686 ஆண்டு முதல் கி.பி.1730 வரை தன் நாட்டை வலிமையாக்கி ஆண்டார். மேலும் இவர் இராமநாதபுர மன்னனுடன் நட்போடு இருந்தார். கி.பி.1720 ஆம் ஆண்டில் இராமநாதபுர மன்னர் இறந்தார். இதைத் தொடர்ந்து ராமநாதபுர அரசின் அடுத்த மன்னன் யார் என்ற போட்டி பவானி சங்கருக்கும், தாண்ட தேவருக்கும் இடையில் ஏற்பட்டது.
ராமநாதபுரம் அரசு
தாண்ட தேவரை ரகுநாதராய தொண்டைமான் ஆதரித்தார். பவானி சங்கரை முதலாம் சரபோஜி ஆதரித்தார். இதைத் தொடர்ந்து நடந்த போரில் சரபோஜியின் ஆதரவோடு தாண்ட தேவரைத் தோற்கடித்து, பவானி சங்கர் ராமநாதபுரத்தின் அரியணையைக் கைப்பற்றினார்.
ஆனால் பவானி சங்கருக்கு தான் கொடுத்த ஆதரவை மாற்றிக் கொண்ட சரபோஜி கி.பி.1723ம் ஆண்டு இராமநாதபுரத்தின்மீது படையெடுத்தார். இந்தப் போரிலும் ரகுநாதராய தொண்டைமான் தாண்ட தேவரையே ஆதரித்து அவரை வெற்றிபெற வைத்தார்.
இறப்பு
ரகுநாதராய தொண்டைமானுக்கு ஆறு மனைவியர் இருந்தனர். இவர் காலத்திலேயே இவருடைய பிள்ளைகளெல்லாம் இறந்துவிட்டதால் இவர் தம் பேரன்களில் மூத்தவராகிய விஜயரகுநாதனுக்கு முடி சூடனார். கி.பி.1730ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரகுநாதராய தொண்டைமான் இறந்தார். அதன்பிறகு அவரது பேரனான விஜயரகுநாதராய தொண்டைமான் அரியணை ஏறினார்.
விஜயரகுநாதராய தொண்டைமான்
பதவியேற்பு
விஜயரகுநாதராய தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இரண்டாவது மன்னர் இவர் கி.பி.1730ம் ஆண்டு ஏப்ரல் முதல் 1769ம் ஆண்டு டிசம்பர் 28ம் நாள் வரை ஆண்டார். இவரது ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூர் மராத்திய சாம்ராஜ்யம் மற்றும் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, சந்தா சாகிப் ஆகியோருடன் இடைவிடாத போர்களில் ஈடுபாட்டார்.
ஆரம்பகால வாழ்கை
விஜயரகுநாதராய தொண்டைமான் சாகிப் கி.பி.1713ம் ஆண்டு அன்று புதுக்கோட்டை இளவரசரான திருமலைராய தொண்டைமான் சாகிப்புக்கும் அவரது மனைவியான நல்லை ஆய் சாகிப்புக்கும் மகனாகப் பிறந்தார். பட்டத்து இளவரர் திருமலைராய தொண்டைமான் 1729ம் ஆண்டிலே இறந்துவிட்டார். இதனால் இவரது தாத்தா ரகுநாதராய தொண்டைமானுக்குப் பிறகு 1730ம் ஆண்டு இவர் புதுக்கோட்டை மன்னராக முடிசூட்டப்பட்டார்.
விஜயரகுநாதராய தொண்டைமானுக்கு சிவஞானபுரத்துறைத் தொண்டைமான் என்றும் பெயருண்டு. விஜயரகுநாதராய தொண்டைமான் மன்னராகப் பதவியேற்றதும் தன் சகோதரர்கள் ராஜகோபால தொண்டைமான், திருமலைத்தொண்டைமான் என்னும் இருவருக்கும் இரண்டு பாளையப்பட்டுகளை அளித்துத் தமக்கு உதவியாக வைத்தக் கொண்டார்.
அக்காலத்தில் மொகலாயர் (சந்தாசாகிப்) படையெடுப்பினால் நாயக்கர் அரசாட்சி ஒழிந்தது. புதுக்கோட்டையிலுள்ள அரண்மனையும் பகைவருடைய பீரங்கிக் குண்டுகளால் அழிந்து விட்டது. ஆதலினால் விஜயரகுநாதராய தொண்டைமான் புதுக்கோட்டைக்குத் தென்கிழக்கே சிவஞானபுரம் என்னும் ஓர் புதிய அரண்மனையைக் கட்டிக்கொண்டு அங்கிருந்து ஆட்சி செய்து வந்தார். சதாசிவப்பிரமம் என்று கூறப்படும் பெரியார் ஆசிரியராக வந்து அருள் புரியும் பேற்றினையும் இவர் பெற்றார்.
போர்கள்
தஞ்சை போர்
கி.பி.1733-ல் தஞ்சை மன்னரின் படைத்தலைவன் ஆன ஆனந்தராவ் என்பவன் ஒரு மிகப்பெரிய படையுடன் புதுக்கோட்டை மேல் படையெடுத்து பெரும் பகுதியைப் கைபற்றிக்கொண்டார். மேலும் திருமயம் கோட்டையை சற்றேறக்குறைய ஒரு வருடகாலம் முற்றுகையிட்டார். ஆயினும் இந்த முயற்சியில் படைத்தலைவன் ஆனந்தராவால் வெற்றி பெற இயலவில்லை. ஆதலால் இறுதியில் படைத்தலைவன் ஆனந்தராவ் புதுக்கோட்டையை கைவிட்டுச் சென்றார்.
ஹைதராபாத் நிஜாம் போர்
ஹைதராபாத் நிஜாம் எண்பதினாயிரம் குதிரைப் படையும், இரண்டு லட்சம் காலாட் படையும் கொண்டு தென்னிந்தியாவின் மேல் படையெடுத்து வந்தார். நிஜாம் திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டபொழுது புதுக்கோட்டை மீதும் படையெடுக்க உத்தேசித்திருந்தான். இதை அறிந்த கூனப்பட்டி , துழாய்குடி மற்றும் சில ஊர்களின் தலைவர்கள் நிஜாமின் குதிரை முதலியவற்றைக் கொள்ளையடித்தனர்.
கர்நாடக ராஜ்ஜியப் போர்
மொகமது அலிக்கும், சந்தாசாகிப்புக்கும் கர்நாடக ராஜ்யதிற்காக நடந்த போரில் விஜயரகுநாதராய தொண்டைமான் ஆங்கிலேயருடன் மொகமது அலிக்குத் துணையாய் நின்று சந்தா சாகிப்பையும் பிரெஞ்சுக் காரரையும் எதிர்த்தார். நவாப்புக்கு திரை கொடுப்பதில்லை எனவும் உடன்படிக்கை செய்து கொண்டார்.
ஆங்கிலேயர் நட்பு
பிரெஞ்சுக் காரருக்கும் ஆங்கிலேயருக்கும் தென்னாட்டில் இடைவிடாது நடந்த போராட்டங்களிலெல்லாம் விஜயரகுநாதராய தொண்டைமான் ஆங்கிலேயருக்கே உதவி செய்து வந்தார். ஆங்கில சேனாதிபதியான கர்னல் லாரன்சு ஐரோப்பாவிற்கு புறப்பட்டு போகும் போது இம்மன்னருக்கு ஓர் கடிதம் விடுத்துச் சென்றார்.
அது “எங்கள் வெற்றிக்கு காரணமான தங்கள் உதவியை நான் ஆங்கில அரசர் திருமுன்பு தெரிவிப்பேன். என்னிடம் தாங்கள் காட்டிய உண்மையான நட்புக் குணத்தை யான் என்றும் மறவேன். நான் தூரதேயத்திற்கு சென்ற விட்டாலும் எனக்கு தாங்கள் புறிந்த நன்மைமைகளும், உதவிகளும் என் மனதில் நின்றுகொண்டே இருக்கும்” என்பது.
இறப்பு
விஜயரகுநாதராய தொண்டைமான் கி.பி. 1769ம் ஆண்டு இறந்தார். இவருடைய மனைவியர் ஆறு பேரில் மூன்றாவது மனைவியாகிய ரெங்கம்மா ஆய் என்பவருக்குப் பிறந்த ராயரகுநாத தொண்டைமான் என்பவர் புதுக்கோட்டையின் அடுத்த மன்னராகப் பதவியேற்றார்.
Comments