புதுக்கோட்டை சமஸ்தானம் – II

முதலாம் ராயரகுநாத தொண்டைமான்

முதலாம் ராயரகுநாத தொண்டைமான் 1738ம் ஆண்டு மே மாதம் அன்று விஜய ரகுநாத ராயா தொண்டைமானுக்கும் அவரது மனைவி அரசி நல்லக்கட்டி ஆய் சாகிப் ஆகியோருக்கும் மகனாகப் பிறந்தார். இவர் ஒருவர்தான் இவர்கள் இருவருக்கும் ஒரே மகன்.

முதலாம் ராயரகுநாத தொண்டைமான் தனது முப்பத்தோரவது ஆண்டில் புதுக்கோட்டை அரசிற்கு மன்னராகப் பதவியேற்றார். தம் முன்னோரைப் போன்றே இவரும் ஆங்கிலேயரிடத்தில் நட்பு கொண்டிருந்தார். கி.பி. 1780ம் ஆண்டு ஹைதர்அலி கர்நாடகாவின் மீது பெரும் படையுடன் போருக்கு வந்தார். தென்இந்தியாவின் மற்ற மன்னர்கள் அனைவரும் ஹைதர்அலி உடன் இணைத்தனர். ஆங்கிலேயருக்கும், நவாப்புக்கும் புதுக்கோட்டை மன்னர் முதலாம் ராயரகுநாத தொண்டைமான் ஒருவரே துணை நின்றார்.

ஹைதர்அலி படை ஆதனக் கோட்டைக்கு அருகில் புதுக்கோட்டை நாட்டில் புகுந்தபோது மன்னர் முதலாம் ராயரகுநாத தொண்டைமானின் படை சோத்துப்பாளை என்றவிடத்தில் அதனை சந்தித்து முறியடித்து ஓட்டிவிட்டது. மன்னர் முதலாம் ராயரகுநாத தொண்டைமாநின் இந்த வெற்றியை கேள்வியுற்ற ஆங்கிலப் படைத்தலைவர் சர் அயர் கூட் என்பார் இம்மன்னருக்குக் கீழ்க்கண்ட கடிதம் எழுதினர்: “நாடு எங்கணும் போர்புரிந்து வந்த என் கட்சியார் எல்லாரிடமும் இருந்து கிடைத்த செய்திகளில் ஒன்று தான் எனக்கு வெற்றியைத் தெரிவித்தது. அதாவது, தாங்கள் மிக்க ஆண்மையுடன் உங்கள் நாட்டை அழிக்க வந்த பகைவரைத் தண்டித்து நூற்றுக்கணக்கான குதிரைப் படை வீரரைச் சிறைகொண்டதேயாம். தாங்கள் இன்னும் சிறந்த வீரச்செயல்களைச் செய்வீர்களென்று எனக்கு மிகுந்த உறுதியுண்டு. இந்த வெற்றியினால் புதுக்கோட்டை மன்னர் தென்னிந்திய நாட்டிற்குச் செய்த பேருதவி யாரும் எளிதில் மறக்கக்கூடியதன்று”.

ஹைதர்அலியின் மகனாகிய திப்பு சுல்தானிற்கு எதிராகவும் முதலாம் ராயரகுநாத தொண்டைமான் ஆங்கிலேயருக்கு உதவிபுரிந்தார். நவாப்புக்கு இவர் செய்த உதவியின் பயனாகப் பட்டுக்கோட்டடைத் தாலுகாவின் ஒரு பகுதி இவருடைய ஆட்சிக்குள்ளாயிற்று. இவர் ஒன்பது மணம் செய்து கொண்டனர். இவருக்கு ஆண் பிள்ளை இல்லை, ஒரே மகள் தான் உண்டு. கி.பி.1789 ம் ஆண்டு டிசம்பர் 30ம் நாள் முதலாம் ராயரகுநாத தொண்டைமான் இறந்தார்.

இரண்டாம் விஜய ரகுநாதராய தொண்டைமான்

ஆரம்பகால வாழ்கை

புதுக்கோட்டை அரசர் முதலாம் விஜயரகுநாத தொண்டைமானுக்கும் அவரது இரண்டாவது மனைவியான ஆயி அம்மாள் ஆயி சாகிப் ஆகியோருக்கு மகனாக 1797ம் ஆண்டு இரண்டாம் விஜய ரகுநாதராய தொண்டைமான் புதுக்கோட்டையில் பிறந்தார். முதலாம் விஜயரகுநாத தொண்டைமானின் மகன்களில் உயிரோடு இருந்த இரு மகன்களில் இவர் முத்தவர் ஆவார்.

ஆட்சி

புதுக்கோட்டை அரசர் முதலாம் விஜய ரகுநாத தொண்டமானின் மரணத்திற்குப் பிறகு இவர் கி.பி.1807ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் அரியணை ஏறினார். இவர் அரியணை ஏறும்போது பத்துவயது சிறுவனாக இருந்தார். இவர் தக்கவயது அடையும்வரை, ஆட்சி நிர்வாகமானது ஒரு அவையினால் நடத்தப்பட்டது. அந்த அவையானது தஞ்சாவூரின் ரெசிடெண்டாக இருந்த மேஜர் வில்லியம் பிளாக்பர்ன் என்பவரின் கண்காணிப்பில் இருந்தது.

வில்லியம் பிளாக்பர்னால் நகரம் முழுவதும் அகன்ற சாலைகள், ஓடுபாவப்பட்ட வீடுகள், பொதுக் கட்டிடங்கள் ஆகியவற்றைக் கட்டினார். கி.பி.1825ம் ஆண்டு அரசருக்கு ஒரு புதிய அரண்மனை கட்டப்பட்டது. பிளாக்பர்ன் மராத்தியத்திய மொழியை நிர்வாக மொழியாக அறிமுகப் படுத்தினார். அது புதுக்கோட்டை அரசின் அதிகாரப்பூர்வ மொழியாக எழுபத்தைந்து ஆண்டுகள் இருந்தது.

மறைவு

இரண்டாம் விஜய ரகுநாதராய தொண்டைமான் கி.பி.1825 ஜூன் 4ம் நாள் அன்று என்ன என்று அறியப்படாத நோயினால் இறந்தார். இரண்டாம் விஜய ரகுநாதராய தொண்டைமானின் மகன் இவருக்கு முன்னரே இறந்து விட்டதால் இவருக்குப்பின் இவரது தம்பி இரண்டாம் ரகுநாத தொண்டைமான் அரியணை ஏறினார்.

குடும்பம்

விஜய ரகுநாதராய தொண்டைமான் 1812 ஆம் ஆண்டு ஸ்ரீ சிங்கப்புலி ஆயியாரை மணந்தார். மேலும் இவர் திருமலை பன்றிகொண்டானின் மகளை இரண்டாவதாக மணந்தார். விஜய ரகுநாதராய தொண்டைமானுக்கு விஜய ரகுநாதராய தொண்டைமான் என்ற ஒரு மகனும், இராஜகுமாரி இராஜம்மணி பாய் சாகிப் என்ற மகளும் இருந்தனர்.

ரகுநாத தொண்டைமான் பகதூர்

ரகுநாத தொண்டைமான் பகதூர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசராக கி.பி.1825ம் ஆண்டு ஜூன் 4ம் நாள் முதல் கி.பி. 1839ம் ஆண்டு ஜூலை 13ம் நாள் வரை இருந்தார்.

புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாத தொண்டைமானுக்கும் அவரது இரண்டாவது மனைவியான ஆயி அம்மாள் ஆய் சாகிப் ஆகியோருக்கு மகனாக கி.பி.1798ம் ஆண்டு ரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டையில் பிறந்தார்.விஜயரகுநாத தொண்டைமானினுக்கு எஞ்சி இருந்த மகன்களில் இவர் இரண்டாவது மகனாவார். கி.பி.1825ம் ஆண்டு ஜூன் மாதம் இவரது அண்ணன் இரண்டாம் விஜய ரகுநாதராய தொண்டைமான் இறந்ததையடுத்து இவர் அரியணை ஏறினார்.

ஆட்சி

கி.பி. 1825ம் ஆண்டு ஜூலை 20ம் நாள் அரியணை ஏறிய இரகுநாத தொண்டமான் 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்கப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. காவிரி ஆற்று நீரை புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குக் கொண்டு வருவதற்கான ஒரு திட்டத்தை ரகுநாத தொண்டமான் கி.பி. 1837 ஆம் ஆண்டு பரிந்துரைத்தார், ஆனால் நிதி வசதி இல்லாததால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இவருக்கு ஆங்கில அரசாங்கத்தால் கி.பி.1830ம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் நாள் ஹிஸ் எக்சலென்சி என்ற பட்டமும், 17 குண்டு மரியாதையும் அளிக்கப்பட்டது.

குடும்பம்

ரகுநாத தொண்டைமான் இரண்டு திருமணங்களை செய்து கொண்டார். முதல் திருமணம் கி.பி. 1812ம் ஆண்டு கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சூரியமூர்த்தி பன்றிகொண்டானின் மகளாவார். அடுத்து இராணி கமலம்பாய் ஆய் சாகிப் என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். இவர் கி.பி. 1839ம் ஆண்டு ஜூலை 13ம் நாள் இறந்தார்.

ராமச்சந்திர தொண்டைமான்

ராஜா ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசராக கி.பி. 1839ம் ஆண்டு ஜூலை 13 முதல் கி.பி. 1886 ம் ஆண்டு ஏப்ரல் 15 வரை இருந்தவர் ஆவார்.

ஆரம்பகால வாழ்கை

புதுக்கோட்டை அரசர் ரகுநாத தொண்டைமானுக்கும் அவரது இரண்டாவது மனைவியான இராணி கமலம்பாள் ஆய் சாகிப்புக்கும் மகனாக இரமச்சந்திர தொண்டைமான் கி.பி. 1829ம் ஆண்டு அக்டோபர் 20 அன்று பிறந்தார்.இவரின் தந்தை இறந்ததையடுத்து இவர் தன் ஒன்பதாவது வயதில் அரசராக முடிசூட்டப்பட்டார். இவர் உரிய வயதை அடையும்வரை ஆங்கிலேய அரசியல் முகவர் இவரது அரசப் பிரதிநிதியாக இருந்து ஆட்சிப் பொறுப்பை கவனித்து வந்தார்.

ஆட்சி

ராமச்சந்திர தொண்டைமானின் ஆட்சியின் துவக்க ஆண்டுகளில் புதுக்கோட்டையானது அரசப் பிரதிநிதியால் நிர்வகிக்கப்பட்டது. ராமச்சந்திர தொண்டைமான் பொறுப்பை ஏற்றபிறகு, விரைவில் இவருக்கு ஆங்கிலேய அரசாங்கத்தால் ஹிஸ் எக்சலன்சி என்ற விருது வழங்கப்பட்டது. கி.பி. 1844ம் ஆண்டில் இருந்து இவர் தாமே அரசாண்டு வந்தார்.

ராமச்சந்திர தொண்டைமானின் நிர்வாகமானது ஆடம்பரமானதாகவும், தவறான நிதிநிர்வாகம் கொண்டதாகவும் இருந்தது. இதனால் ஆங்கிலேய அரசானது இவரை தண்டிக்கும் விதமாக இவருக்கு அளிக்கப்பட்ட ஹிஸ் எக்சலன்சி என்ற பட்டத்தை கி.பி. 1859ம் ஆண்டு மற்றும் கி.பி. 1873ம் ஆண்டு ஆகிய இருமுறை திரும்பப் பெற்றது. கி.பி. 1878 ஆம் ஆண்டில் சர் டி. மாதவ ராவின் ஆலோசனைப்படி, சென்னை அரசாங்கமானது புதுக்கோட்டை திவானாக திருவிதாங்கூர் முன்னாள் திவானான ஏ. சேசைய்ய சாஸ்திரியை நியமித்தது. சாஸ்திரி ஆட்சி நிர்வாகத்தை சீர்திருத்தம் செய்து தலைநகரான புதுக்கோட்டை நகரை நவீனமயமாக்கினார். நகரத்தில் இருந்த புதுக்குளம் மற்றும் பல்லவன் குளம் ஆகிய குளங்கள் புனரமைக்கப்பட்டன. கி.பி. 1884ம் ஆண்டு அஞ்சல் மற்றும் தந்தி அலுவலகம் திறக்கப்பட்டது. சாஸ்திரியின் ஆலோசனையின்படி, ராமச்சந்திர தொண்டைமான் சமஸ்தானத்தில் இருந்த பல இந்து கோயில்களைப் புதுப்பித்தார். கி.பி. 1881 ஆம் ஆண்டு, சாஸ்திரியின் உடன்பாட்டுடன் ராமச்சந்திர தொண்டைமான் அதிகாரப்பூர்வமாக “பிரகதம்பாதாஸ்” என்ற பரம்பரை பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

கி.பி. 1884ம் ஆண்டு மே 16 அன்று ஆங்கிலேய அரசியான விக்டோரியா மகாராணி ராமச்சந்திர தொண்டைமானுக்கும் இவரது சந்ததியினருக்கும் ஹிஸ் ஹைனெஸ் என்ற பட்டத்தையும் 11 துப்பாக்கி வேட்டு மரியாதை போடும் நிரந்தர உரிமையை அளித்தார். மேலும் இவர் கி.பி. 1875 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் விருதையும், கி.பி. 1877 ஆம் ஆண்டு இந்தியப் பேரரசி தங்க பதக்கத்தையும் பெற்றார்.

குடும்பம்

ராமச்சந்திர தொண்டைமான் கி.பி.1845 ஜூன் 13 அன்று இராணி பிரகதம்பாள் ராஜம்மணி பாயி சாகிப் அவர்களை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். நெடுவாசல் ஜமீந்தாரின் மூத்த மகளான ஜானகி சுப்பம்மாளை இரண்டாவதாக ராமச்சந்திர தொண்டைமான் கி.பி.1848ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் பிறந்தனர்.

ராமச்சந்திர தொண்டைமானின் ஒரே மகனான சிவராம ரகுநாத தொண்டைமான் தன் தந்தைக்கு முன்பே இறந்து விட்டதால். ராமச்சந்திர தொண்டைமான் தன் மூத்த மகளான பிரகதாம்பாயியின் மகனை மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் என்ற பெயரில் தத்தெடுத்துக் கொண்டு. தன் வாரீசாக ஆக்கினார்.

இசை

ராமச்சந்திர தொண்டமான் அவரது அரண்மனையில் கர்நாடக இசைக் கச்சேரிகளை ஆதரித்து வளர்த்தார். ராமச்சந்திர தொண்டமானும், தன்னைப் பொறுத்தவரையில் ஒரு சிறந்த இசையமைப்பாளர் ஆவார். மேலும் இவர் குறவஞ்சி நாடகத்துக்கு இசையமைத்து அதை விராலிமலை முருகன் கோயிலில் அரங்கேற்றினார்.

ஸ்ரீபிரகதாம்பாதாள் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர்

இவர் பதினொரு வயதுடையவராயிருக்கும் பொழுது. கி.பி. 1886ம் ஆண்டில் திருக்கோகரணத்தில் இவருக்கு முடி சூட்டு விழா நடந்தது. சிறு வயதிலேயே இம்மன்னர் தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளில் மிக்க தேர்ச்சி பெற்றார். 19-வது வயதிலிருந்து நாட்டைத் தாமே ஆட்சிபுரிந்தார். குதிரையேற்றம் முதலியவற்றில் அளவு கடந்த திறமையுடையவர். உப்புக் காய்ச்சுவதால் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கும், ஆங்கிலேய அரசாங்கத்தார்க்கும் ஏற்பட்ட வழக்கு இம் மன்னர் காலத்தில் முடிவுற்றது. இம் முடிவுப்படியே ஆங்கில அரசாங்கத்தார் ஆண்டு தோறும் முப்பத்தெட்டாயிரம் ரூபாய் இம்மன்னருக்கு கொடுக்கம்படி நேரிட்டது. புதுக்கோட்டை அரசாங்கத்தில் மூன்று லட்சம் ஏக்கர் நிலம் வரையிலும் இனாமாக விட்பபட்டிருந்தது. இந்த இனாம் நிலங்கள் பகுதி நிலங்களைவிட மிகுதியாயிருந்தன. ஆதலால் ஆங்கில அரசாங்கத்தாரின் யோசனை மேல் இனாம் நிலங்களையெல்லாம் அளந்து சிறிது வரிவித்தனர். அதனால் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு தோறும் அரசாங்கத்திற்கு மிகுவதாயிற்று. பயிர் செய்யாத தரிசு நிலங்களெல்லாம் பயிர் செய்யப்பட்டு நிலக்காரரெல்லாம் பணக்காரராயினர். இவர் காலத்தில் புதுக்கோட்டை நகரம் சீர்திருத்தப்பட்டது. கல்லூரி, மருத்துவ நிலையம், அலுவலகம் இவற்றின் கட்டிடங்கள் திருத்தி அமைக்கப்பெற்றன. நீதி இலாகாவும் மீண்டும் திருத்தி அமைக்கப்பட்டது. இதன் படி மூன்று நீதிபதிகள் அடங்கிய உயர்நீதி மன்றமாக கி.பி.1887ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

கி.பி.1898ம் ஆண்டு இவர் ஐரோப்பா கண்டத்திற்குப் போக வேண்டியிருந்தமையால் , திவான், தமையனாகிய விஜய ரகுநாத துரை ராஜா இவர்களிடத்தில் அரசாட்சியை விட்டுச் சென்றனர், ஐரோப்பாவில் பல இடங்களுக்ச் சென்று பிறகு இங்கிலாந்துக்ச் சென்ற பொழுது இளவரசர் ஏழாவது எட்வர்ட் மன்னரால் தமது அரண்மனையில் மே மாதம் 23ந் தேதி வரவேற்று சிறப்பிக்கப்பட்டார், ஜுலை 14ல் மகாராணியார் தமது அரண்மனையில் வரவேற்று கெளரவப் படுத்தினார்கள். கி.பி.1898 நவம்பரில் இவ் வேந்தர் புதுக்கோட்டைக்கு திரும்பி பொழுது மக்கள் இவரைப் பேரார்வத்துடன் வரவேற்றனர். மகாராணியார் இம் மன்னரை வரவேற்று கெளரவப் படுத்தியதற்கு அறிகுறியாகப் புதுக்கோட்டையில் நகர மன்றம் (டவுன் ஹால்) கட்டப்பெற்றது.

கி.பி.1902ம் ஆண்டு 30 உறுப்பினர் அடங்கிய மக்கள் பிரதிநிதிச் சபை ஒன்று அமைக்கப் பட்டது. மக்களுடைய குறைகளை தீர்த்து வைப்பதற்கு இக்கழகம் பெரிதும் உதவியாய் இருந்தது.கி.பி.1907ல் இருந்து இதில் 18 உறுப்பினர் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப் பட்டனர். இவர் காலத்தில் நாடு பல வழியிலும் சீர்திருத்தி மேனிலைக்குக் கொண்டுவரப்பட்டது. கி.பி.1911 ம் ஆண்டு டிசம்பர் 12-ல் டில்லி மாநகரில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டு விழாவுக்கு இவர் அழைக்கப்பட்டிருந்தார்.

கி.பி.1913ம் ஆண்டில் இவர் பட்டத்திற்கு வந்த இருபத்தைந்தாதவது ஆண்டு விழா புதுக்கோட்டையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது இவருக்கு ஜி.சி.ஐ.இ. (கிராண்ட் கமாண்டர் ஆப் தி இண்டியன் எம்பையர்) என்னும் பட்டம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் அளிக்கப்பட்டது.

ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்

புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர். இம்மன்னரின் காலத்தில் தான் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் கி.பி. 1929ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கி.பி.1928 ம் ஆண்டு நகரில் முழுமையாக மின்சார வசதியும் செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. கி.பி.1929ம் ஆண்டு முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார்.

இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது கி.பி.1933 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர். 17 ஜனவரி கி.பி.1944ம் ஆண்டு ராஜகோபாலத் தொண்டைமான் தனது 22 ஆவது வயதில் சமஸ்தானத்தின் முழு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

கி.பி. 1948 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று கி.பி.1948ம் ஆண்டு மார்சு 3 ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் கட்டிடங்களையும், மன்னர் நிர்வாகத்தில் இருந்த மன்னர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். கி.பி.1972ம் ஆண்டு புதுக்கோட்டை தனி மாவட்டமாக உருவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார். ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இவர் கி.பி.1997ம் ஆண்டு மறைந்தார்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published.