சந்திரகுப்த மௌரியருக்குப் பின்னர் அவர் மகன் பிந்துசாரார் மௌரியப் பேரரசின் மன்னராகப் பதவியேற்றார். இவர் மௌரியப் பேரரசின் இரண்டாவது மன்னர் ஆவார். கி.மு 297ம் ஆண்டு முதல் கி.மு 273ம் ஆண்டு வரையில் இவர் மௌரியப் பேரரசின் மன்னராக ஆட்சிபுரிந்தார். மேலும் இவர் சரித்திரப் புகழ் பெற்ற மாமன்னன் அசோகரின் தந்தை ஆவார்.
இவர் தனது ஆட்சிக்காலத்தின் மௌரியப் பேரரசை விரிவுபடுத்தினார் என்றாலும் தந்தை சந்திரகுப்த மௌரியர் மற்றும் மகன் மாமன்னர் அசோகர் போல இவருடைய வாழ்க்கை ஆவணப்படுத்தப்படவில்லை. அவரைப் பற்றிய தகவல்களில் பெரும்பாலானவை அவரது மரணத்திற்குப் பின் பல நூறு ஆண்டுகளாக எழுதப்பட்ட பழம்பெரும் புராணக்கதைகளில் இருந்து பெறப்பட்டவையாகும்.
பிந்துசாரர் தனது தந்தை உருவாக்கிய பேரரசை ஒருங்கிணைத்தார். பிந்துசாரர் தனது நிர்வாகத்தை தென்னிந்தியாவில் பெற்ற பிராந்திய வெற்றிகளால் மேலும் விரிவுபடுத்தினார் என்று 16 ஆம் நூற்றாண்டில் திபெத்திய பௌத்த நூலாசிரியர் தாரானாதர் பாராட்டியுள்ளார்.ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் இந்த கூற்றின் வரலாற்று நம்பகத்தன்மையை சந்தேகிக்கின்றனர்.
பின்னணி
பண்டைய மற்றும் இடைக்கால ஆதார மூலங்கள் பிந்துசாரரின் வாழ்க்கை விவரங்களை தெளிவாக விவரிக்கவில்லை. ஆனால் சந்திரகுப்தரை மையமாகக் கொண்ட சமண சமயத்தினரின் புராணக்கதைகளும், அசோகரை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தினரின் புராணக்கதைகளும் பிந்துசாரர் பற்றிய தகவல்களை அளிக்கின்றன. ஏமச்சந்திரரின் பரிச்சிசுட்ட பர்வன் போன்ற சமண மதத்தினரின் புராணக் கதைகள் பிந்துசாரர் இறந்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட கதைகளாகும். அசோகரின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிக்கூறும் பல பௌத்த புராணங்களும் அசோகரின் மரணத்திற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர் வாழ்ந்த பௌத்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டவையாகும். இந்த எழுத்தாளர்கள் சிறிய வரலாற்று மதிப்பை மட்டுமே கொண்டிருந்தனர்.
பிந்துசாரரின் ஆட்சியைப் பற்றி பல குறிப்புகள் உருவாக்க இந்த புராணங்களைப் பயன்படுத்த முடியும் என்றாலும், அசோகருக்கும் புத்தமதத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பின் காரணமாக அவை நம்பத்தகுந்ததாக இல்லை. சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட பௌத்த தொன்மவியல் கதைகளைக் கொண்ட திவ்வியவதனம், இலங்கையின் மிகப்பழமையான வரலாற்றுத் தொகுப்பான பாலி மொழியில் எழுதப்பட்ட தீபவம்சம், மகாவம்சம், வம்சதபக்சினி, சமந்தபாசடிக்கா மற்றும் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாரனாதரின் எழுத்துக்கள் உள்ளிட்டவை பிந்துசாரர் தொடர்பான பௌத்த ஆதார மூலங்களாகும். 12 ஆம் நூற்றாண்டில் ஏமச்சந்திரர் எழுதிய பரிச்சிசுட்ட பர்வன் என்ற நூலும், 19 ஆம் நூற்றாண்டில் தேவசந்திரர் எழுதிய ராசவளி கதா என்ற நூலும் பிந்துசாரர் பற்றிய தகவல்களைக் கொடுக்கும் சமண சமய ஆதார மூலங்களாகும். பிந்துசாரர் மௌவுரிய ஆட்சியாளர்களின் மரபுவழியில் வந்தவர் என்று இந்து மத புராணங்கள் குறிப்பிடுகின்றன. கிரேக்க புராணங்கள் இவரை அமிட்ரோகேட்டு என்கின்றன
தொடக்கக்கால வாழ்க்கை
மௌரியப் பேரரசின் நிறுவனர் சந்திரகுப்தருக்கு மகனாக பிந்துசாரர் பிறந்தார். பல்வேறு புராணங்களும் மகாவம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களின் மூலம் இது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. மறுபுறத்தில் மன்னர் சுசுநாகனின் மகனே பிந்துசாரர் என தீபவம்சம் கூறுகிறது. பிந்துசாரர் தன நந்தனின் மகன் என்றும் அவர் பிம்பிசாராவின் 10 வது தலைமுறை வம்சாவளி என்றும் அசோககவதனனின் உரைநடை பதிப்பு கூறுகிறது. தீபவம்சத்தைப் போல சந்திரகுப்தரின் பெயரை முற்றிலுமாக இது தவிர்த்து விடுகிறது. அசோகோகதனவின் பரவலான பதிப்பு சில வேறுபாடுகளுடன் இதேபோன்ற மரபுவழி கொண்டிருக்கிறது. அசோகவதனனின் அளவீட்டுப் பதிப்புகளும் இதேகருத்தை சில வேறுபாடுகளுடன் குறிப்பிடுகின்றன.
சந்திரகுப்தர் செல்லூசிட்சுடன் ஒரு திருமண உறவு கொண்டிருந்தார், இதிலிருந்து பிந்துசாரரின் தாய் கிரேக்க அல்லது மாசிடோனியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற ஊகத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 12 ஆம் நூற்றாண்டில் சமண எழுத்தாளர் ஏமச்சந்திரரின் பரிச்சிசுட்ட பர்வம் நுலின் படி பிந்துசாரரின் தாயர் பெயர் தூர்தரா என்பதாகும்.
பெயர்
பிந்துசாரர் என்ற பெயரை தீபவம்சம், மகாவம்சம் உள்ளிட்ட புத்த சமய நூல்கள் சிறு மாற்றங்களுடன் பிந்துசாரோ என்ற பெயராக அங்கீகரிக்கின்றன. பரிசிசுட்ட பர்வன் போன்ற சமண சமய நூல்களும் இந்து சமய புராண நூல்களும் விந்துசாரர் என்கின்றன. சந்திரகுப்தாவின் வாரிசாக வேறு பெயர்களை மற்ற புராணங்கள் தருகின்றன.
போர்கள்
பிந்துசாரர் ஒருபெரும்படையைத் தென்இந்தியாவிற்கு அனுப்பினார். தென்இந்தியாவின் மேல் படையெடுத்துவந்த முதல் வடநாட்டு அரசரும் இவரே ஆவர். மௌரியப் படையும், கோசர் படையும் இணைந்து முதலில் தென்கன்னடம் என்னும் கொண்கனத்தின் கடற்கரைப் பகுதியான சிற்றரசான துளுநாட்டின் மீது போர் தொடுத்தது. போரில் தோல்வியடைந்த துளு நாட்டை ஆண்டுகொண்டிருந்த நன்னன் என்னும் தமிழ் மன்னன் நாட்டை விட்டு காட்டிற்குள் துரத்தப்பட்டார். கோசர்கள் துளு நாட்டின் தலைநகரான “பாழி” யை அரணாக்கி, வலிமைபடுத்தி அதனையே அவர்களது அடுத்த படையெடுப்பிற்க்குகான கோட்டையாக்கிக் கொண்டனர். இந்த விவரங்களை “அழியல் வாழி” எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் வாயிலாக நாம் அறியலாம்.
“அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
ஒன்று மொழிக் கோசர் போல”
(குறுந்.73)
பிறகு கோசர் படை சேர நாட்டையும் , தென்கிழக்காக வந்து பாண்டிய நாட்டு எல்லையில் ஆட்சி செய்து கொண்டிருந்த கொங்குநாட்டு அரசன் பழையன் மோகூரயும், சோழ நாட்டு எல்லையில் இருந்த அழுந்தூர்வேள் திதியனையும் படிப்படியாக தாக்கினர்.
கொங்குநாட்டு அரசன் பழையன் மோகூர், கோசர் படையை பாண்டிய நாட்டு எல்லையில் தோற்கடித்து கோசர் படையை பின்வாங்கச் செய்தார். அழுந்தூர்வேள் திதியன் கோசர் படையை தோற்கடித்ததுடன் புறமுதுகிட்டு ஓடவும் செய்தார். இதுவரையில் எல்லைப் படைகளே போரில் ஈடுபட்டிருந்தன. கோசர் படையின் பெரும் தோல்வியைத் தொடர்ந்து , கோசர் படைக்குத் துணையாக மௌரியப் பேரரசு ஒரு பெரும்படையை அனுப்பியது. அந்தப் படை, மைசூரிலிருந்து தமிழகம் வரும் வழியில், படையைச் சேர்ந்த தேர்களும் சரக்கு வண்டிகளும் வருவதற்குத் தடையாயிருந்த பாறைகளையெல்லாந் தகர்த்து, பாதையைச் உருவாக்கி வந்தது. இதை அகநானுற்றுப் பாடல் வாயிலாக நாம் அறியலாம்.
“துனைகா லன்ன புனைதேர்க் கோசர்
தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில்
இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியா மையிற் பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி யுருளிய குறைத்த
இலங்குவெள் ளருவி யறைவாய்”
(அகம்.251)
மௌரியப் படைகள் மற்றும் கோசர் படைகளுடன் வடுகர் படைகளும் இணைத்து துளுவத்தில் தங்கி சோழ சாம்ராஜ்யத்தின் எல்லையில் அமைத்த சிற்றசுகளுடன் தொடர்ந்து போரில் ஈடுபட்டனர். இதுவரை சோழர்களுக்கு உட்பட்ட சிற்றசுகளே போரில் ஈடுபட்டுவந்தன.
மௌரியப் படைகள் வந்ததைத் தொடர்ந்து சோழ மன்னர் இளஞ்சேட்சென்னியும் பெரும் படையைத் திரட்டினார். இப்போரில் சோழப் படைகளும், சிற்றரசுகளின் படைகளும் இணைந்து செயல்பட்டன. மௌரியர், கோசர் மற்றும் வடுகர் படைகள் போரில் பெரும் தோல்வியைத் தழுவின. போரில் தோற்ற படைகள் துளுவ நாட்டிற்குப் பின்வாங்கின. சோழ மன்னர் இளஞ்சேட்சென்னி, மௌரியப் படைகள் மற்றும் கோசர் படைகளை துளுவ நாட்டிற்குத் துரத்திச் சென்று, பாழிக் கோட்டையை முற்றுகையிட்டு, அந்த கோட்டையை முழுவதும் தரைமட்டமாக்கினார். சோழ மன்னர் இளஞ்சேட்சென்னி மௌரியரும், கோசரும் சேர்ந்த பெரும் படையைத் தோற்கடித்தவர் என்று அகநானூற்றுப் பாடல்களில் புகழப்படுகின்றார்.
“முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத்
தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த
அறையிறந்து”
(அகம்.281)
“எழாஅத் திணிதோட் சோழர் பெருமகன்
விளங்குபுகழ் நிறுத்த இளஞ்சேட் சென்னி
குடிக்கட னாகலிற் குறைவினை முடிமார்
செம்புறழ் புரிசைப் பாழி நூறி
வம்ப வடுகர் பைந்தலை சவட்டி
கொன்ற யானை”
(அகம்.375)
Comments