திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும். இது தேவார வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது

பழமையான கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை அண்டி அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் இதுவாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்” என முன்னர் அழைக்கப்பட்டது.

இத்தலத்திற்கு திருச்சீரலைவாய் திருச்செந்தில் , திருச்செந்தியூர், ஜெயந்திபுரம், சிந்திபுரம் , திரிபுவனமாதேவி, சதுர்வேதிமங்கலம் எனப் பல பெயர்கள் இலக்கியங்களிலும் , கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது. 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர், தமது திருப்புகழ் பாடல்களில் திருச்செந்தூர் எனப் பாடிய பின்னரே, இத்தலம் திருச்செந்தூர் என அழைக்கப்படலாயிற்று. இராவணனை வதம் செய்த பின்னர் இராமர், சிவனை கடற்கரை ஸ்தலமான இராமேஸ்வரத்தில் வழிபடுவது போல , முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த பின்னர் , சிவனை வழிபடும் கடற்கரை ஸ்தலம் திருச்செந்தூர் ஆகும்.

தல வரலாறு

தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளை , கங்கை ஏற்று சரவணப் பொய்கையில் இட அவை ஆறு குழந்தைகளாக மாறின. ஆறு குழந்தைகளையும் , பார்வதி தேவி ஒன்றாக அணைக்க , அதிலிருந்து ஆறுமுகங்களும் , பன்னிருக்கரங்களும் கொண்ட முருகப்பெருமான் தோன்றினார். சிவபெருமான் தனது ஞான சக்தியை வேலாயுதமாக்கி வழங்க, முருகனும் அவ்வேலாயுதத்துடன் இலச்சத்தொன்பது படை வீரர்களுடன் தென்திசை நோக்கி பயணித்து , திருச்செந்தூர் வந்து தங்கினார். சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப் பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், “செயந்திநாதர்’ என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே “செந்தில்நாதர்’ என மருவியது. தலமும் “திருஜெயந்திபுரம்’ (ஜெயந்தி – வெற்றி) என அழைக்கப்பெற்று, “திருச்செந்தூர்’ என மருவியது.

போரில் சூரபத்மனின் தம்பி மற்றும் பிள்ளைகள் இறந்து பட , முருகனுக்கும் , சூரபத்மனுக்கும் கடைசியாக நடந்த போரில் சூரபத்மன் மாமரமாக மாறி நிற்க , முருகனின் வேல் அம்மரத்தை இரெண்டாகப் பிளந்தது. ஒரு பாகம் சேவலாகவும் , மறு பாகம் மயிலாகவும் மாறின. சேவலைத் தனது வெற்றிக் கொடியாகவும், மயிலைத் தனது வாகனமாகவும் ஏற்றுக் கொண்டார். சூரசம்காரம் முடிந்ததும், முருகப் பெருமான் தனது தந்தையாகிய சிவனை பூஜை செய்ய விரும்பிய போது , தேவதச்சன் என்னும் மயன் என்பவரால் உருவாக்கப்பட்டதே இக்கோவில். மூலவர் பால சுப்பிரமணியர் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்யும் கோலத்திலேயே காட்சி தருகிறார்.

மூலவர் பால சுப்பிரமணியர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார். தலையில் ஜடாமுடியுடன் , வலக்கை மேற்கையில் சக்தி ஹஸ்தமும், கீழ்க்கையில் பூஜைக்குரிய மலருடனும் , இடக்கை மேற்கையில் ஜெப மாலையும் , கீழ்க்கையை இடுப்பில் வைத்தும் காட்சி தருகிறார். சூரனை வென்று வந்தவுடன் சிவனை வழிபடும் கோலத்தில் உள்ளார். தெய்வானையை மணப்பதற்கு முன்னுள்ள பிரம்மச்சரிய கோலமாகும்.இவர் கடலை நோக்கி ஆண்டி வேடத்தில் காட்சி தருவதால் இருபுறமும் வள்ளி, தெய்வானை கிடையாது. இவரது பாதத்தருகில் வலப்புறம் வெள்ளியால் ஆன ஸ்ரீபெலியும் , இடப்புறம் தங்கத்தாலான ஸ்ரீபெலியும் உள்ளன. கருங்கல்லிலாலான இவருடைய அற்புதக் காட்சியை வேறு எங்கும் காண இயலாது. இச்சிலை மன்னர் திருமலை நாயக்கரின் பிரதிநிதி வடமலையப்பிள்ளை என்பவரால் திருநெல்வேலி குறுக்குத் துறையிலிருந்து கல் எடுத்துச் செய்யப்பட்டதாகும். மூலவருக்கு நேர் எதிரில் ஜெகந்நாதரின் வாகனம் நந்தியும், முருகனின் வாகனமாக சூரபத்மனும், இந்திரனும் இருமயில்களாகவும் உள்ளனர்.

பஞ்சலிங்க தரிசனம்

இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் “பஞ்சலிங்க’ சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன. வெளியிலிருந்தபடி முருகரை தரிசனம் செய்யும்போதே பஞ்சலிங்க தரிசனம் செய்ய இயலாது. மூலவர் முருகரின் இடதுபுறம் உள்ள சிறு வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலது புறம் வந்து பாதாள பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் இயலும். இவர்களைத் தரிசித்தாலே பாவங்கள் அனைத்தும் அகலும் என்பர். இவர்களுக்கு சற்று முன் பக்கம் மேற்கூரையில் ஒரு சிறு துவாரம் உள்ளது. அதன் வழியாக தேவர்கள் பூஜை செய்வதற்கு வந்து செல்வதாக கூறுவர்.

ஸ்ரீ ஜெயந்திநாதர்

மூலவர் மற்றும் பஞ்சலிங்கங்களைத் தரிசித்து விட்டு, இடது பக்கமாக வந்தால் முதலில் ஜெயந்தி நாதரைத் தரிசிக்கிறோம். இவரே மூலவர் பாலசுப்ரமணியரின் உற்சவ மூர்த்தியாவார். இருபக்கமும் வள்ளி தெய்வானை உள்ளனர். வீதி உலா வருதல் , யாக சாலைக்கு எழுந்தருளல் , சூரபத்மனை வதம் செய்வது , தங்கத் தேரில் பவனி வருவது அனைத்தும் இவரே ஆவார். மூலவர் தவக்கோலத்தில் உள்ளதால் , உற்சவரான இவரைத் திரிசுதந்திரர்கள் எனப்படும் முக்காணிப் பிராமணர்கள் மட்டுமே இவரது பாதம் சுமக்க இயலும். இவரது சந்நிதியில் இடது பக்கத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது. அது சந்திரலிங்கம் எனப்படும்.

சண்முகர்(ஆறுமுகப் பெருமான்)

இவர் ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளில் பத்து கைகளில் பத்துவிதமான ஆயுதங்களுடனும், வலக்கைகளில் ஒன்று ஆசிர்வதித்து , இடக்கைகளில் ஒன்று தன்னுடைய பாதத்தைக் காட்டியும் அருள்புரிகிறார். இவருடைய இடது பக்கமுள்ள தெய்வானை குமுத மலரையும் , வலது பக்கமுள்ள வள்ளி தாமரை மலரையும் கைகளில் ஏந்தியுள்ளார். இவரது முகத்தில் அம்மைத் தழும்புகள் போன்று புள்ளிகள் உள்ளன. டச்சு நாட்டைச் சேர்ந்த கொள்ளைக்காரர்கள் இவரைக் கவர்ந்து சென்று தப்பி ஓடிய காலத்தில் கடலில் இவரை வீசியதால் , மீன்களால் கொத்தப்பட்ட புள்ளிகள் என்பர் ஒரு சிலர். இவரது வலது புறமுள்ள மாடக்குழியில் ஒரு லிங்கம் உள்ளது. அது ஆத்ம லிங்கம் எனப்படும்.

பஞ்சபூதங்கள் போன்று விளங்கும் பஞ்சலிங்கங்களுடன் சேர்த்து சூரியன் போன்று விளங்கும் ஜெகந்நாதலிங்கம், சந்திரன் போன்று விளங்கும் சந்திரலிங்கம் மற்றும் ஆத்மா போன்று விளங்கும் ஆத்மலிங்கம் ஆக மொத்தம் 8 வகை பொருளாய் இறைவன் விளங்குகிறார் என்பதை இவை நமக்குப் பறை சாற்றுகின்றன.

ஆலய அமைப்பு

இக்கோவிலின் இராஜ கோபுரம் கோவிலின் மேற்கு வாசலில் கட்டப்பட்டுள்ளது. கிழக்கு வாசல் அருகில் கடல் நீர் ஆரவாரித்துக் கொண்டிருப்பதாலும் , கோபுரத்திற்குரிய அஸ்திவாரம் கடல் மண்ணில் தொண்ட இயலாது என்பதாலும் , கடல் அரிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதாலும் , மேற்கு வாசலில் இராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இக்கோபுரம் சுமார் 300 ஆண்டுகளுக்குள் தான் கட்டப்பட்டுள்ளது. இதைக்கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி ஸ்வாமிகள் ஆவார். திருச்செந்தூர் முருகன் இவர் கனவில் தோன்றி அறிவுறுத்தியவாறு , கூலியாட்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாத நிலையிலும் , இப்பணியைச் செய்து முடித்துள்ளார். கூலியாட்களுக்கு அன்றாடம் சம்பளத்திற்குப் பதில் வீபூதி பொட்டலமே அளித்துள்ளார். அவர்களும் அதை பெற்றுக் கொண்டு தூண்டுகை விநாயகர் முன்னிலையில் அவற்றை பிரித்த போது, அவரவர்களுக்கு உரிய சம்பளமாக மாறியிருப்பதைக் கண்டனர். மேலும் முருகப் பெருமான் காயல் பட்டினத்தைச் சேர்ந்த ஒரு முகம்மதியர் கனவில் தோன்றி, ஸ்வாமிகளுக்கு ஒரு மூடை உப்பு கொடுக்கப் பணித்துள்ளார். மறுநாள் காலை அம்மூடை முழுவதும் தங்கக்காசுகளாக நிரம்பியிருந்தது என்றும் , இதுவே கோபுரம் கட்டி முடிக்கப் போதுமானதாக இருந்தது என்றும் கூறுவர். இக்கோபுரம் 9 நிலைகளுடன் 137 அடி உயரத்தில் 9 செப்பு கலசங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

வழிபடும் முறை

இக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் நாழிக்கிணறு சென்று நீராட வேண்டும். கோவில்லிருந்து சுமார் 200 அடி தூரத்தில் இக்கிணறு அமைந்துள்ளது. தரை மட்டத்திலிருந்து 24 அடி ஆழமுள்ள இக்கிணற்றுக்குள் படிகள் மூலம் இறங்கினால் ஒரு சதுர அடி பரப்பளவில் நாழிக்கிணறு அமைந்துள்ளது. இக்கிணற்றிலிருந்து நீரை அள்ள அள்ள குறையாமல் ஊறிக் கொண்டேயிருக்கிறது. இக்கிணற்றின் ஆழம் 7 அடியாகும். தன் படை வீரர்களின் தாகம் தணிக்க முருகப்பெருமான் தனது வேலாயுததால் இங்கு குத்தியதால், இக்கிணறு தோன்றியதாகக் கூறுவர். இத்தலத்தில் 24 தீர்த்தக்கட்டங்கள் இருப்பினும் மிகவும் கீர்த்தி பெற்றது நாழிக்கிணறு ஆகும்.

நாழிக்கிணற்றில் நீராடிய பின்னர் , பக்தர்கள் ஈரத்துணியுடனேயே கடலில் சென்று குளிக்க வேண்டும். பின்னர் தூண்டுகை விநாயகரை முதலில் தரிசிக்க வேண்டும் . தன் தம்பி கோவில் கொண்டுள்ள இடத்தைக் காண பக்தர்களைத் தூண்டிக் கொண்டேயிருப்பதால், இப்பெயர் என்பர். இவர் முன்பு சிதறு தேங்காயை உடைத்து , தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிட வழிபட்ட பின்னரே , முருகனின் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். பிறகு கிரி வீதி வழியாக வளம் வர வேண்டும். இவ்வீதியில் தான் தங்கரத உலா நடைபெறுகிறது. இவ்வீதியின் மேற்குப் பகுதியில் தேவஸ்தான அலுவலகமும் , வடக்குப் புறத்தில் வசந்த மண்டபம், வேலவன் விடுதி தங்கும் குடில்கள் , வள்ளி ஒளிந்த குகை முதலியன உள்ளன. கிழக்கில் கடலும், தெற்குப் பகுதியில் அழகான நீராடுவதற்குத் தகுந்த கடற்கரையும் அமைந்துள்ளது.

சண்முக கவசம்

கிரிவீதி வலம் வந்த பின்னர் , சண்முக விலாசம் என்னும் மண்டபம் வழியாக கோவிலுக்குள் செல்ல வேண்டும் . இம்மண்டபத்தில் தான், மாசி மற்றும் ஆவணி திருவிழாக்களின் போது சண்முகர் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இம்மண்டபத்திலிருந்து கோவிலுக்குள் செல்லும் முன் , ஆண் பக்தர்கள் தங்கள் மேலாடைகளைக் கழற்றி விட்டுத் தான் படிக்கட்டுகள் வழியாகக் கீழிறிங்கி சீபலி மண்டபம் எனப்படும் வெளிப் பிரகாரத்தை சுற்றி வலம் வர வேண்டும்.

சீபலிமண்டபம் முதற்பிரகாரம்

தெற்கு வாயிலைக் கடந்து சீபலி மண்டபத்தில் படிக்கட்டுகள் மூலம் இறங்கியவுடன் , மேற்குத் திசை நோக்கினால் , முதலில் நமக்கு காட்சி தருவது சித்தி விநாயகர் ஆவார். இம்மண்டபத்தின் தெற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தி, மேற்குப் பகுதியில் 108 லிங்க மகாதேவர், உள்ளனர். அவருக்கு அடுத்து சுவரில் சூரசம்கார லீலை செதுக்கப்பட்டுள்ளது. அடுத்து மேற்குப் பகுதியில் பல லிங்கங்களையும் அருணகிரிநாதரையும் தரிசிக்கிறோம். அடுத்து கோபுர வாசல் படிகள் உள்ளன. எதிரில் முக்குறுணி விநாயகர் உள்ளார். இவரே கோபுரம் கட்டிய போது சாரம் சரியாமல் காத்த விநாயகர் என்பர்.

இந்த முதல் பிரகாரத்தின் வடபகுதியில் வெங்கடேசப் பெருமாள் சந்நிதி உள்ளது. இவர் அருகில் கஜலட்சுமியையும் , பள்ளி கொண்ட ரெங்கநாதரையும் தரிசிக்கலாம். ஸ்ரீதேவி , பூதேவி, நீலா தேவி மற்றும் பன்னிரண்டு ஆழ்வார்களையும் தரிசிக்கலாம். முருகனுக்கு சக்ராயுதம் வழங்க பெருமாள் வந்ததாகச் சிலர் கூறுவர். வேறு சிலர் தாரகா சூரனிடமிருந்து சக்ராயுதத்தை மீட்டு, திருமாலிடம் முருகன் கொடுத்ததாகவும் கூறுவர். முதல் பிரகாரத்தின் கிழக்குப் பகுதியில் செப்புக் கொடிமரம் உள்ளது. ஆவணிப் பெருந்திருவிழா , மாசி பெருந்திருவிழா தொடக்கத்தின் போது இங்கு தான் கொடியேற்றப்படுகிறது. கொடி மரத்திற்கு எதிரில் உள்ள சுவற்றில் உள்ள ஒரு துவாரத்தின் மூலம் ஆழ்கடலையும் , அலைகளையும் காணலாம். இத்துவாரத்தில் காதினை வைத்துக் கேட்டால் ‘ஓம்’ என்னும் பிரணவ ஒளி கேட்கும். அடுத்து கம்பத்தடி விநாயகரை வணங்கி இரண்டாம் பிரகாரம் செல்கிறோம்.

இரண்டாம் பிரகாரம்

இரண்டாவது பிரகாரத்தில் நாம் நுழைந்ததும் இடப்பக்கத்தில் நாம் முதலில் தரிசிப்பது குமரவிடங்கப் பெருமான் என்னும் முருகனையே. இவர் வள்ளி தேவசேனாவுடன் காட்சி தருகிறார். இவர் ஆறுமுக நயினாருக்கு பிரதி பிம்பம் ஆவார். அதாவது ஆறுமுகர் ஆண்டிற்கு 4 நாட்கள் மட்டுமே ஊருக்குள் எழுந்தருளி அருள்புரிகிறார். மற்ற விசேட நாட்களில் ஆறுமுகருக்கு உற்சவ மூர்த்தி போன்று குமரவிடங்கரே எழுந்தருளுவார். இவரை வழிபட்ட பின் மேற்கு நோக்கித் தொடர்ந்து சென்றால் , 63 நாயன்மார்களையும் 9 தொகை அடியார்களையும் , எதிரில் தட்சிணாமூர்த்தியையும் தரிசிக்கிறோம். அடுத்து வள்ளியம்மையையும் தரிசிக்கிறோம். வள்ளியம்மை கோவிலில் மட்டுமே பள்ளியறை உண்டு. இவர் கோவில் சலவைக்கற்கள் பதிக்கப்பட்டு அழகுற விளங்குகிறது.இக்கோவிலுக்குப் பின்புறம் சங்கர நாராயணர் , சிவன், நந்தி, காசி விஸ்வநாதர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து தெய்வானை சந்நிதி உள்ளது. இவர் தெய்வப் பெண் என்பதால் , இங்கு பள்ளியறை கிடையாது.

இரண்டாம் பிரகாரம் மேற்குப் பக்கத்தில் வள்ளி திருக்கோவில் தெய்வானை திருக்கோவில் இரண்டுக்குமிடையில் யாகசாலை கூடம் அமைந்துள்ளது. இங்கு தான் கந்த சஷ்டி திருவிழா 6 நாட்களும் யாகங்கள் சிறப்பாக நடைபெறும். இரண்டாம் பிரகாரம் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் சண்டிகேஸ்வரர் , நடராஜர், சனீஸ்வரர் , பைரவர் சந்நிதிகள் உள்ளன. இப்பிரகாரத்தின் கிழக்குப் பகுதியில் தங்கக் கொடிமரம் உள்ளது. அருகில் உள்ள மகாபலி பீடத்தில் நமது பாவங்களை இங்கு பலியிட்டு விட்டு மூலவரைத் தரிசிக்க மகா மண்டபத்திற்குள் நுழைகிறோம்.

மகா மாண்டபம்

மகா மண்டபத்திற்குள் நுழைந்தவுடன் இடது பக்கம் பார்வதி அம்மனையும் கரிய மாணிக்க விநாயகரையும் தரிசிக்கிறோம். இவர்களுக்குப் பின்னால் உள்ள அறையில் தான் பஞ்சலிங்கங்கள் உள்ளன. அடுத்து மூலவர் சந்நிதி முன் வருகிறோம் . மூலவர் சந்நிதியின் இருபக்கமும் வீரபாகுதேவரும் , மகேந்திர தேவரும் உள்ளனர். இவர்களுடைய அனுமதி பெற்றுத்தான் மூலவரைத் தரிசிக்கிறோம். அடுத்து பஞ்சலிங்க தரிசனம் முடித்து ஜெயந்தி நாதர் சண்முக தரிசனம் முடித்து தங்கக் கொடிமரம் முன்பாக வெளியில் வருகிறோம்.

தினசரி வழிபட்டு நேரம்

தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும். மார்கழி மாத நாட்களில் காலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கந்த சஷ்டி 6 நாட்கள் , ஜனவரி 1 ஆம் தேதி , தைப் பொங்கல் , வைகாசி விசாக நாட்களில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

திருவிழாக்கள்

ஒவ்வொரு விசாக நட்சத்திரம் , சஷ்டி, கார்த்திகை நாட்களிலும் , மாதப் பிறப்பு நாள், கடைசி வெள்ளி, சித்திரை முதல் நாள் , புரட்டாசி மாதம் நவராத்திரி நாட்களிலும் , சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாத முதல் நாளில் அன்னாபிஷேகமும், பங்குனி உத்திரத்தன்று வள்ளி திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

வைகாசி விசாகத் திருவிழா

வைகாசி மாதம் பௌர்ணமியும் , விசாகமும் கூடிய நன்னாள் முருகனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும். அன்று வசந்த மண்டபத்தில் ஸ்ரீ ஜெயந்தி நாதர் எழுந்தருளியிருக்க காவடிகளும் பால்குடங்களும் எடுத்து பக்தர்கள் ஆடிப்பாடி வருவதைக் காண கூட்டம் அலைமோதும்.

ஆவணி மாதம் மற்றும் மாசி மாதத் திருவிழாக்கள்

இம்மாதங்களில் 12 நாட்கள் திருவிழா நடைபெறும். முதல் 9 நாட்கள் ஸ்ரீ ஜெயந்தி நாதர் காலையும் , மாலையும் வீதிவுலா வருவார். குமரவிடங்கப் பெருமான் ஊருக்குள் இருக்கும் சிவக் கொழுந்தீஸ்வரர் ஆலயத்திலிருந்து 9 நாட்களும் வீதிவுலா வருவார். 7 ம் திருநாள் காலையில் வெட்டிவேர் சப்பரத்திலும் , மாலையில் சிவப்பு பட்டாடை, சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சண்முகர் வீதிவுலா வருவார். இதற்கு சிகப்பு சாத்தி என்று பெயர். அப்போது முன்புறம் முருகப் பெருமானாகவும் , பின்புறம் நடராஜர் கோலத்திலும் காட்சி தருவார். 8 ம் திருநாள் அதிகாலையில் அனைத்தும் வெள்ளை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு சண்முகர் எழுந்தருளுவார். இதற்கு வெள்ளை சாத்தி என்று பெயர். பிரம்மாவும் நானே என உணர்த்தும் வகையில் இது அமைந்திருக்கும். 8 ம் நாள் மாலையில் சண்முகர் பச்சைப் பட்டுகளாலும் , பச்சை மரிக்கொழுந்து மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு பச்சை கடைசல் சப்பரத்தில் , பச்சை வண்ணன் ஆன திருமாலும் நானே எனக் குறிக்கும் வகையில் எழுந்தருளுவார். 10 ம் நாள் அன்று தேரோட்டம் நடைபெறும்.

ஐப்பசி மாதம் , கந்த சஷ்டி திருவிழா

முதல் 5 நாட்கள் யாகசாலையில் ஜெயந்தி நாதர் எழுந்தருளுவார். மாலையில் தங்கரதம் கிரிவீதி விழா நடைபெறும். 6 ஆம் நாள் அதிகாலை 1.30 க்கு விஸ்வரூப தரிசனம் . அடுத்து யாக சாலை பூஜை முடிந்து கந்த சஷ்டி மண்டபத்திற்கு ஜெயந்தி நாதர் எழுந்தருள்வார். மாலை 4 மணிக்கு கடற்கரைக்கு எழுந்தருளி சூரசம்கார லீலை நடைபெறும். சூரபத்மனை சேவலாகவும் , மயிலாகவும் ஆட்கொண்ட பிறகு சந்தோஷ மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்குவார். மறுநாள் திருக்கல்யாணமும் நடைபெறும் , சுமார் 5 லட்சம் பக்தர்கள் 6 நாட்களும் விரதமிருந்து , சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டுகளிப்பர்.

முருகனின் அருள்பெற்றவர்கள்

முருகனின் அருள் பெற்றவர்களில் முக்கியமானவர் குமரகுருபரர் ஆவார். 5 வயது வரை ஊமையாக இருந்த இவரின் பெற்றோர்கள் இக்கோவிலில் 48 நாட்கள் விரதமிருந்து பயனில்லாததால் உயிரை மாய்க்க இருந்த போது அருகில் குழந்தையாக இருந்த இவர் , “பூமேவு செங்கமலம் ” எனப் பாடத் தொடங்கினார். நக்கீரரை சிறையிலிருந்து விடுவித்தவர் செந்திலாதிபனே என்பது அவர் பாடியுள்ள திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலிருந்து தெரிகிறது. இங்கு மூலவர் சந்நிதியில் வழங்கப்படும் இலை விபூதியை உண்டு ஆதிசங்கரர் காச நோயிலிருந்து விடுதலை பெற்றார் என்பர். அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் நடராஜர் கோலத்தைக் காட்டியதால் மாசி 7, 8 திருவிழாக்களில் சண்முகருக்குப் பின்பக்கம் நடராஜர் அலங்காரம் செய்யப்படுகிறது என்பர். பிறவியிலேயே இருக்கண் பார்வையும் இல்லாத கந்தசாமிப் புலவர் என்பவருக்கு இருக்கண் பார்வையும் கொடுத்தவர் செந்திலாண்டவர் என்பர்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *