திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்கின்றது. மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ள இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

மதுரை மாநகரின் வடக்கில் வையை என்னும் ஆறு ஓடுகிறது. தெற்கில் திருப்பரங்குன்றம் என்று அழைக்கப்படும் திருப்பரங்கிரி அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் என்று அழைக்கப்படும் இவ்வூர் மதுரை மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்டது. மதுரை மத்திய பேருந்து நிலையம் மற்றும் மதுரை புகை வண்டி நிலையம் ஆகியவற்றிலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மதுரை புகை வண்டி நிலையத்திலிருந்து தெற்கில் செல்லும் இருப்புப்பாதையில் இவ்வூரில் ஒரு புகைவண்டி நிலையம் அமைந்துள்ளது . இப்புகைவண்டி நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.

இம்மலை கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 1050 அடி உயரமுடையது. இம்மலையின் வடபக்கத்தில் மலையடிவாரத்திலுள்ள பழனியாண்டவர் கோவிலுக்கருகில் படிக்கட்டுகள் உள்ளன. தற்போது மலையின் கிழக்குப் பக்கத்தில் புதிதாக படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. மலையுச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இதற்கு அருகில் ஒரு அழகிய சுனை உள்ளது. இதில் வருடம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும். சுப்ரமணிய ஸ்வாமியின் கையிலுள்ள வேலை வருடம் ஒரு முறை மலையின் உச்சிக்கு கொண்டு சென்று , அங்கு மேற்படி சுனையில் நீராட்டுவர். இத்தலத்திற்கு திருப்பரங்கிரி , சுமந்தவனம் , பராசலஸ்தலம் , கந்தமாதனம் , கந்தமலை , சத்தியகிரி , தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம் , ஸ்வாமிநாதபுரம் என பல பெயர்கள் உண்டு. மலையின் வடபகுதியில் இக்கோவில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியில் சந்நிதித் தெருவில் மயில் மண்டபமும் பதினாறு கால் மண்டபமும் அமைந்துள்ளது. அடுத்து சந்நிதித் தெருவில் கிழக்கு நோக்கி மீனாட்சியம்மை சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குச் சென்று வழிபட்ட பின்னரே முருகன் கோவிலில் வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இக்கோவிலின் முன்னர் தான் கந்தசஷ்டியின் போது சூரசம்கார லீலை நடத்திக் காட்டப்படும்.

திருப்பணிகள்

சுப்ரமணியசுவாமியின் கருவறை கி.பி.773இல் பராந்தக நெடுஞ்சடையன் (765-815) என்ற பாண்டிய மன்னர் காலத்தில் அவரது படைத்தலைவன், சாத்தன் கணபதி என்பவரால் சிவனுக்காக எழுப்பப்பட்ட குகைக்கோவில் என்று கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது. மதுரை நாயக்க மன்னர்களில் வீரப்பர் (1572-1595), திருமலை மன்னர் (1623-1659) ஆகியோர் திருப்பணிகளும், அரசி மங்கம்மாள் (1689-1706) திருப்பணிகளும் இக்கோயிலில் உள்ளன

திருக்கோவிலின் அமைப்பு

திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன.

சத்தியகிரீஸ்வரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்புகளும், இதர சிற்ப அம்சங்களும் உள்ளன. ஐந்து சந்நிதிகளைத் தவிர திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன.

அர்த்த மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரர் சந்நிதியை அடுத்துள்ள மலைப்பாறையிலும், பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதியை அடுத்துள்ள பாறையிலும் திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. கோவிலின் நுழைவாயிலிலுள்ள 10 பெரிய கற்றூண்கள் நாயக்கர் காலச் சிற்பக் கலைத்திறனைக் காட்டும் முருகன் தெய்வானை திருமணக்கோலம் போன்ற கற்றூண்கள் அமைந்துள்ளன.

ஆஸ்தான மண்டபம்

கோவிலின் நுழைவாயிலில் அழகிய கண்கவர் சிற்பங்களைக் காண்கிறோம். அடுத்து ஆஸ்தான மண்டபத்திற்குள் நுழைகிறோம். அங்கு கருபணசுவாமி , பத்ரகாளி, ஊர்த்துவதாண்டவர், நர்த்தன விநாயகர், துர்கை, வீரபாகுதேவர், நரசிம்ம மூர்த்திகள் ஆகியோரின் சிற்பங்கள் கொண்ட 48 தூண்களைப் பார்த்து கலை நுணுக்கத்தைப் போற்றி வியப்படைகிறோம். அங்கு முருகப் பெருமானின் தெய்வானைத் திருமணத் திருக்கோலம் மிகுந்த சிறப்புடையது. இம்மண்டபம் இராணி மங்கம்மாள் காலத்தில் கட்டப்பட்டதாகும். ஆஸ்தான மண்டபத்தைக் கடந்து கோபுர வாயிலை அடைகிறோம். இது 150 அடி உயரமுடைய ஏழு நிலை இராஜ கோபுரமாகும். இது நாயக்கர் மன்னர்களால் கி.பி 1505 ல் கட்டப்பட்டதாகும்.

கல்யாண மண்டபம்

கோபுர வாயிலைக் கடந்து மிகப் பெரிய கல்யாண மண்டபத்தை அடைகிறோம். இதற்கு திருவாட்சி மண்டபம் என்று பெயர். இம்மண்டபத்தில் தான் முருகப் பெருமானின் திருக் கல்யாணமும் , அனைத்து விழா நிகழ்ச்சிகளும் , சொற்பொழிவுகள் , இசை நிகழ்ச்சிகள் முதலியன நடைபெறும். இம்மண்டபத்தின் கிழக்குப் பகுதிக்கு படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றால் , சித்தி விநாயகர் சந்நிதி, இலக்குமி தீர்த்தம் , வசந்த மண்டபம், ஒடுக்க மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். இம்மண்டபத்தின் மேற்குப் புறத்தில் வல்லப கணபதி சந்நிதி உள்ளது. இதன் அருகில் மடப்பள்ளியும் , சந்யாச தீர்த்தமும் உள்ளது. இத்தீர்த்த நீரே அபிஷேகத்திற்குப் பயன்படுகிறது.

கம்பத்தடி மண்டபம்

திருவாட்சி மண்டபத்திலிருந்து படிக்கட்டுகள் வழியாக மேலேறிச் சென்றால் கம்பத்தடி மண்டபத்தை அடைகிறோம். இங்குள்ள கொடிமரத்திற்கு முன்னால் மிகப் பெரிய நந்தியும், நந்தியின் இருபக்கமும் மூஷிகம், மயில் உள்ளன. இவற்றிற்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தின் கீழ் இடது பக்கத்தில் அண்டராபணர் , வலம்புரி விநாயகர், பராசல முனிவர் உள்ளனர். இவற்றிற்கு வலது பக்கத்தில் வேதவியாசர், உக்கிர மூர்த்தி மற்றும் சந்தானக் குறவர்கள் நால்வர் உள்ளனர். அருகிலுள்ள மண்டபம் உற்சவர் மண்டபம் ஆகும். வாகனப் பெருமக்களின் நேர் எதிரில் உள்ள உயரமான மேடைக்கு ஏறிச் செல்ல இருபக்கமும் படிகள் உள்ளன. இப்படிகளில் ஏறிச் சென்றால் , கிழக்குப் பக்கத்தில் அதிகார நந்தீஸ்வரர் , காலகண்டி அம்மை ஆகியோரும் , மேற்குப் பக்கத்தில் இரட்டை விநாயகரும் உள்ளனர்.

மகா மண்டபம்

கம்பத்தடி மண்டபத்திலிருந்து படிகளில் ஏறி நாம் மகா மண்டபம் செல்கிறோம். இம்மண்டபத்தின் கிழக்குப் பக்கத்தில் வீரபாகு முதலான நவ வீரர்களும் தட்சிணா மூர்த்தியும், முருகன் வள்ளி, தெய்வானை , பைரவர், சூரியன், விநாயகர் முதலியோர் உள்ளனர். இம்மண்டபத்தின் மேற்குப் பக்கத்தில் சண்டிகேஸ்வரரும், நடராசர், சிவகாமி அம்மை ஆகியோரும் இவர்களின் உற்சவ மூர்த்திகளும், சிவன் சக்தி முருகன் ஆகியோரின் உற்சவ மூர்த்திகளும் உள்ளனர். இம் மகாமண்டபத்தின் மேற்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் கோவர்தனாம்பிகையின் தனிக் கோவில் உள்ளது. அம்பிகைக்கு மேற்கு பக்கம் உள்ள படிக்கட்டுகள் அருகில் அன்னபூரணி அம்பிகையின் கருவறை உள்ளது. அம்பிகையைச் சுற்றி தேவர்மக்களும் , ரிஷிகள் பெருமக்களும் கூட்டமாக தொழுது கொண்டு நிற்கின்றனர். இப்படிக்கட்டுகள் மூலமாகவும் , முருகன் சந்நிதானத்திற்குச் செல்லலாம். இம்மகாமண்டபத்தின் கிழக்கில் உள்ள தட்சிணா மூர்த்தி எதிரில் உள்ள படிக்கட்டு அருகில் கஜலெட்சுமியின் கருவறை உள்ளது. இப்படிக்கட்டுகள் மூலமாகவும் முருகன் சந்நிதானத்திற்குச் செல்லலாம். துர்கை எதிரில் உள்ள படிக்கட்டுகள் மூலமாகவும் முருகன் சந்நிதானம் உள்ள அர்த்த மண்டபத்திற்குச் செல்லலாம். இவ்வாறு அர்த்த மண்டபம் செல்வதற்கு மூன்று வாயில்கள் உள்ளன.

அர்த்த மண்டபம்

பரங்கிரிநாதர் சந்நிதி

இம்மண்டபத்தில் இறைவன் லிங்க உருவில் அமர்ந்துள்ளார். இக்கருவறையில் லிங்கத்திற்குப் பின்னால் சிவனும், சக்தியும் அமர்ந்துள்ளனர். இது போல் கோவில்களில் லிங்கத்திற்குப் பின்னால், அம்மையும், அப்பனும் அமர்ந்து காட்சி தருவது, மிகச் சொற்பமான கோவில்களில் மட்டுமே. கும்பகோணம் அருகிலுள்ள திருநல்லூர் , அதிகை, வீரட்டானம், வேதாரண்யம் , காஞ்சீபுரம், திருவீழிமிழலை ஆகியவை அவற்றில் சிலவாகும். இக்கோவிலில் அம்மை அப்பனுக்கு நடுவில் முருகன் சிறு உருவில் இருப்பது சோமாஸ்கந்த வடிவம் என்பர். இச்சிவனுக்கு சத்தியகிரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. மலையைக் குடைந்து இக்கோவில் அமைக்கப்பட்டு உள்ளதால் , இது ஒரு குடைவரைக் கோவிலாகும். இக்கோவில் சிவபெருமானுக்காக தோற்றுவிக்கப்பட்டது எனினும் , பிற்காலத்தில் இது முருகப்பெருமானின் சிறப்புத் தலமாக மாறிவிட்டது எனலாம். இது 2 ம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட பழமை உடையது.

கற்பக விநாயகர் சந்நிதி

சிவனின் கருவறைக்கு அடுத்து , விநாயகரின் சந்நிதி வடக்கு நோக்கி உள்ளது. இவர் கற்பக விநாயகர் எனப்படுகிறார். இவர் தாமரை மலரில் அமர்ந்துள்ளார். இவர் கைகளில் பாசமும் , அங்குசமும் இல்லை . மோதகமும் கரும்புமே உள்ளன. இவர் பாதத்தின் அருகில் அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வரும் கோலத்தில் உள்ளார். இச்சந்நிதியில் பூத கணங்கள் சூழ்ந்திருக்க தேவ தூதர்கள் வாத்தியங்கள் இசைக்க சூரிய சந்திரர்கள் மேலிருந்து வணங்க அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

துர்க்கையம்மன் சந்நிதி

கற்பக விநாயகருக்கு அருகில் துர்க்கையம்மன் சந்நிதி உள்ளது. இவர் மகிஷாசுரன் தலை மீது நின்ற கோலத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அர்த்த மண்டபத்தின் மையப் பகுதியில் , பிரதான வாயிலை நோக்கி துர்க்கையம்மன் சந்நிதி உள்ளதால். இக்கோவில் துர்க்கையம்மன் கோவிலாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முருகப்பெருமான் சந்நிதி

அடுத்து முருகப் பெருமானின் கல்யாண திருக் கோலத்தைச் சித்தரிக்கும் அற்புதமான சந்நிதி உள்ளது. முருகப் பெருமான் அமர்ந்த நிலையில் இடது கையை தொடையில் அமர்த்தி வலது கையால் அருள்பாலிக்கிறார். இவரது வலது பக்கத்தில் நாரத முனிவர் ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையில் முருகப் பெருமானை வணங்கிக் கொண்டு இருக்கிறார்.கருவறையில் முருகனின் இடப்பக்கம் தெய்வானை ஒரு கால் மடக்கி அமர்ந்த இடத்தில் கைகளில் மலருடன் காட்சி தருகிறார். இக்கருவறையின் மேலே , முருகனைச் சுற்றி சூரியன், சந்திரன், காயத்திரி, சாவித்ரி , வித்தியாதரர்கள் இந்திரன் முதலானோர் காட்சி தருகின்றனர் தெய்வானை அருகில் திருமனச் சடங்கினை நடத்தும் நான்முகன் கலைமகளுடன் சிறிய உருவில் உள்ளார். முருகன் பாதத்திற்குக் கீழ் மேடையில் யானை, மயில், ஆடு, சேவல் , ஆகியவற்றுடன் அண்டாபரணர் , உக்கிரமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.

பவளக் கனிவாய்ப் பெருமாள் சந்நிதி

முருகன் சந்நிதிக்கு அடுத்து கிழக்குப் பகுதியில் பவளக் கனிவாய்ப் பெருமாள் சந்நிதி உள்ளது. இவர் மேற்குத் திசை நோக்கி அமர்ந்துள்ளார். சிவபெருமானுக்கு நேர் எதிரில் நந்தி இருக்க வேண்டிய இடத்தில இப்பெருமான் உள்ளதால் இவருக்கு ” மால் விடை ” என்ற சிறப்புப் பெயர் உண்டு. இத்தகைய அமைப்பு வேறு தலங்களில் கிடையாது. இப்பெருமான் இருபக்கமும் சீதேவி, பூதேவி அமர்ந்திருக்க , அருகில் மதங்கமா முனிவர் உள்ளார்.

ஆறுமுகப் பெருமான் சந்நிதி

மகா மண்டபத்திலிருந்து கிழக்குப் பக்கமுள்ள படிக்கட்டுகள் வழியாக கீழிறங்கி வந்தால் ஆறுமுகப் பெருமானின் சந்நிதியை அடையலாம். இங்கு ஆறுமுகப் பெருமான் ஆறு முகங்களுடனும் , பத்து கைககளில் ஆயுதங்களுடனும் , இடது கீழ் கையால் “வா ” என்று அழைத்து வலது கையால் அருள்புரிகிறார். இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானைஉள்ளனர். இவருக்கு அருகில் அருணகிரிநாதரும் , நக்கீரரும் வணங்கியபடி உள்ளனர். இச்சந்நிதியிலிருந்து இடது புறமாக சென்றால் , ஒரு தூணில் ஆஞ்சநேயரும், அவருக்கு எதிரில் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது முருகனும், கருடாழ்வாரும் உள்ளனர். அடுத்து பஞ்ச பூதத்தலங்களின் ஸ்வாமியையும், அம்பாளையும் தரிசிக்கிறோம். அடுத்து திருச்செந்தூர் முருகன் , சனீஸ்வரன், சுரத்தேவர் ஆகியோரைத் தரிசிக்கிறோம். இங்கு நவகிரகங்கள் இல்லை. சனீஸ்வரர் மட்டும் தனி சந்நிதியில் உள்ளார். இம்மண்டபத்தின் எதிர்புறம் சக்தி விநாயகர், சமயக் குறவர் நால்வர், அறுபத்து மூவர் மற்றும் ஒன்பது தொகையடியார்கள் , வித்யா கணபதி, நஞ்சுண்டேஸ்வரர் ஆகியோரைத் தரிசித்து விட்டு , படிகளின் மூலம் கீழிறங்கி , கம்பத்தடி மண்டபம் வந்து, பராசர முனிவரையும், வியாஸரையும் வணங்குகிறோம். பராசர முனிவர் இங்கு வெகு நாட்கள் தவமியற்றியுள்ளதாலும் , அவ்வாறு தவம் செய்யும் போது, மீன்களுக்கு இடையூறு செய்த தன் பிள்ளைகளையே மீன்களாகப் பிறக்கும்படி சபித்ததாலும் இத்தலத்தை பராசரஸ்தலம் என்பர்.

முதற்படை வீடு

நக்கீரருக்கும் இத்தலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நக்கீரர் மதுரையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சங்கப்புலவர் ஆவார். இவரை மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பர். இவர் பாடிய திருமுருகாற்றுப்படையில் , முருகனின் முக்கிய ஸ்தலங்கள் ஆறினைப் பாடியுள்ளார். திருப்பரங்குன்றம் , திருச்செந்தூர், திருவாவினன் குடி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்சோலை ஆகியவற்றில் இத்தலத்தை முதலாவதாக வைத்துப் பாடியுள்ளதால் இது முதற்படை வீடாகும். சைவசமயக் குறவர்கள் பாடிய தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 14 ஸ்தலங்கள் பாண்டிய நாட்டில் உள்ளன. இவற்றில் திருப்பரங்குன்றம் ஒன்றாகும். எனவே இவ்விருவகையாலும் , சிறப்புப் பெற்று இத்தலம் விளங்குகிறது. இத்தலத்தின் தலவிருட்சம் “கல்லத்தி” ஆகும். இது கோவிலுக்குள் லட்சுமி தீர்த்தம் செல்லும் பாதையில் உள்ளது.

தீர்த்தங்கள்

மலையடிவாரத்தில் கிழக்கில் உள்ள சரவணப் பொய்கை , தை மாதத்தில் தெப்பத்திருவிழா நடைபெறும் . சத்திய தீர்த்தம் , மலையுச்சியிலுள்ள காசித் தீர்த்தம், கோவிலுக்குள் சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படும் சந்நியாசி தீர்த்தக் கிணறு , கோவிலுக்குள் உள்ள இலக்குமி தீர்த்தம் ஆகிய ஐந்தும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.

தென்பரங்குன்றம்

மலையின் தென் பகுதியில் சோலைகளும் , பச்சை பசேலென்று வயல் வெளிகளும் நிறைந்து காணப்படுகின்றன. மலையின் தென் பகுதியில் சமணக் குகை உள்ளது. மலையைக் குடைந்து கட்டப்பட்ட மண்டபமும் அதன் சிறப்புகளும் அழகுற அமைந்துள்ளன. இங்கு அர்த்தநாரி , பஞ்சமுக கணபதி , நடராஜரின் அழகிய திருவுருவம் ஆகியவை நேர்தியானவை . இது பல்லவர்களால் அமைக்கப்பட்ட குகை என்றும் , இங்கு சமண முனிவர்கள் தங்கியிருந்தனர் என்றும் கூறுவர். இங்குள்ள ஏழு கன்னியர் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். தென்பரங்குன்றில் இவ்விடத்தில் தான் முருகன் கோவில் முன்னர் இருந்தது என்றும் , அக்கோவில் பழுதுற்ற பின்னர் , வடபுறத்தில் தற்போதுள்ள இடத்தில் கோவில் எழுந்தது என்றும் கூறுவர்.

திருவிழாக்கள்

இக்கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் , கீழ்கண்ட திருவிழாக்கள் மிகச் சிறப்பானவை. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்கு இக்கோவில் முருகப் பெருமானும் , பவளக் கனிவாய்ப் பெருமாளும் மதுரைக்கு எழுந்தருளி 4 நாட்கள் அங்கு தங்கியிருந்து மதுரை மக்களுக்கு ஆசீர் வழங்கித் திரும்புவர். வைகாசி விசாகம் 10 நாட்களும் கந்த சஷ்டி திருவிழா 7 நாட்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி அன்று சந்நிதித் தெருவில் சூரசம்காரம் மக்கள் வெள்ளத்தின் நடுவே செய்து காட்டப்படும். கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை விழா 10 நாட்களும் தை மாதத்தில் கார்த்திகை திருவிழா 10 நாட்களும் , பங்குனிப் பெருவிழா 14 நாட்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

தல வரலாறு

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவி க்கு ஓம் எனும் பிரணவ(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

இந்நிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான் – பார்வதி தேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள்.இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் இருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.

முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் -தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

புராணங்கள் கூறும் வரலாறுகள்

முருகப் பெருமான் திருச்செந்தூரில் சூரபத்மன் மற்றும் அசுரர்களை சம்காரம் செய்து மீளும் போது பராசுரமுனிவரின் ஆறு புதல்வர்களின் சாபத்தை நீக்கும் பொருட்டும் , நான்முகன் மற்றும் தேவர்களின் வேண்டுதல்படியும் , பரங்கிரிநாதரை வணங்குதற் பொருட்டும் , திருப்பரங்குன்றம் எழுந்தருளினார். அசுரர்கள் அழிந்ததால் , இந்திர லோக பதவியைத் திரும்பப் பெற்ற இந்திரன் தேவர்களுடன் இங்கு வந்து முருகனை வணங்கி தன் மகள் தெய்வானையை திருமணம் செய்து கொள்ள வேண்டினான். முருகனும் இதற்கு சம்மதிக்க அனைத்து தெய்வங்களும் , தேவர்களும் , ரிஷிகளும் இங்கு ஒன்று கூடி முருகனின் திருமணத்தை நடத்தி வைத்தனர். இவர்கள் எல்லோருடைய ஆசீரையும் பெற நாம் இங்கு சென்று வணங்கினாலே போதும் என்பர். இந்திரனின் ஐராவதம் என்ற யானை தான் தெய்வானையை வளர்த்தது என்பதால், தெய்வானையை பிரிய மனமில்லாமல் இந்த யானை இங்கேயே தங்கிவிட்டதாகவும் , அதுவே கருவறையில் முருகனின் பாதத்தில் உள்ள யானை என்றும் கூறுவர்.

அம்பாள் மகிஷாசுரனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க , சிவனை வழிபட்டு பாப விமோசனம் பெற்ற தலம் இது என்றும் கூறுவர். தடாகத்தில் உள்ள மீன்களுக்கு துன்பம் செய்ததால் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்கு , பாராசரமுனிவரின் புதல்வர்கள் ஆறு பேர் இங்கு தடாகத்தில் தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுடைய சாபத்தை முருகன் தீர்த்தருளியதாகக் கூறுவர்.
திருக்கைலாயத்தில் சிவன் அம்பாளுக்கு பஞ்சாட்சர மந்திரம் உபதேசித்த போது , மடியிலிருந்த முருகன் அதைக் கேட்க நேர்ந்தது. இம்மந்திரத்தை குருமூலம் பெறாமல், மறைவில் கேட்க நேர்ந்தது தவறு என்பதை உலகுக்கு உணர்த்த , தானே இங்கு வந்து சிவனிடம் பாவ மன்னிப்பு பெற்ற தலம் என்பர்.

சிவவழிபாட்டில் வழுவிய ஆயிரம் முனிவர்களை பலியிட்டால் அழியாத வரம் கிடைக்கும் என்று எண்ணி கற்கிமுகி என்ற பெயர் உடைய ஒரு பூதம் 999 முனிவர்களைப் பிடித்து இவ்விடத்தில் ஒரு குகையில் அடைத்து வைத்திருந்தது. அச்சமயம் மதுரையில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வந்த நக்கீரர் என்பவர் சங்கப் புலவர்களில் ஒருவராய் இருந்து தமிழ் ஆய்ந்து வந்தார். ஒரு நாள் அவர் தவத்தில் இருந்த போது , ஆலிலை ஒன்று தண்ணீரில் பாதியும் , நிலத்தில் பாதியுமாய் விழுந்தது. நீரில் விழுந்த பகுதி மீனாகவும் , நிலத்தில் விழுந்த பகுதி பறவையுமாக மாறி ஒன்றை ஒன்று இழுத்தது. இதைக் கண்ட நக்கீரரின் தவம் தடைப்பட்டது.

இவருடைய தவம் வழுவியதால், பூதம் இவரையும் பிடித்துச் சென்று 1000 முனிவர்களையும் ஒரு சேர பலியிட எத்தனித்தது. மற்ற முனிவர்கள் கூறியபடி நக்கீரர் முருகனை எண்ணி திருமுருகாற்றுப் படை பாடியருளினார். உடனே முருகன் மயில் மீது பறந்து வந்து பூதத்தை சம்காரம் செய்து 1000 முனிவர்களையும் காத்தருகினார். நக்நக்கீரர் வேண்டுதல் படி மகிழ்ச்சியில் முருகன் தனது கைவேலால் கீறி கங்கை தீர்த்தம் வெளிவர அருளினார். இதுவே மலை உச்சியில் .காசி விஸ்வநாதர் கோவில் அருகிலுள்ள சுனை என்பர். இதை நினைவுப் படுத்தும் விதமாக வருடம் ஒருமுறை முருகனுடைய கை வேலை இத்தீர்த்தத்திற்கு எடுத்துச் சென்று அபிஷேகம் செய்வர்.

பெயர்க்காரணம்

பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று.

இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

சங்க இலக்கியம்

அகநானூற்றில் இந்த மலை முருகன் குன்றம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் திருமுருகாற்றுபடை, கலித்தொகை, மதுரை காஞ்சி, அகநானூறு, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. மாணிக்கவாசகர் , சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் , திருஞான சம்பந்தர் , நக்கீரர், அருணகிரி நாதர் , குமரகுருபரர் , தண்டபாணி ஸ்வாமிகள் , பாம்பன் ஸ்வாமிகள் இத்தலத்தை வழிபட்டு பாடியுள்ளனர்.

சிற்பங்கள்

கோவிலுக்குள் நுழைந்தவுடன் ஆஸ்தான மண்டபத்தில் தெய்வானை திருமணக்காட்சி, அர்த்த மண்டபத்தில் குடைந்து செதுக்கப்பட்ட உருவங்கள், அர்த்த மண்டபத்தில் பெருமாள் சந்நிதி வடக்கு சுவற்றில் குடைந்து செய்யப்பட்ட பாற்கடலில் பெருமாள், வராகவதாரம், நரசிம்மவதாரம் , அர்த்த மண்டபத்திலிருந்து கீழிறங்கும் போது இருபுறமும் உள்ள கஜலட்சுமி , அன்னபூரணி உருவங்கள் , பரங்கிரிநாதர் சந்நிதி சுவற்றில் கோபூஜை செய்யும் பார்வதி மற்றும், பூத கணங்கள் ஆகியவை சிற்பக்கலையின் உயர்வினை பறை சாற்றும். பண்டைய தமிழ் மக்கள் ஓவியக் கலையிலும் , வல்லுனராய்த் திகழ்ந்துள்ளனர். இங்கு ஒரு ஓவியச்சாலையே இருந்தது என்று கூறப்படுகிறது. சரவணப் பொய்கைக்கு செல்லும் வழியில் எழுத்து மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபத்தின் மேற்கூரையில் பல சித்திரங்கள் பழுதுற்ற நிலையில் இன்றும் உள்ளன.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *