திருவாவினன்குடி
திருவாவினன்குடி ஆறுபடை வீடுகளுள் ஒன்று. 3-ம் படை வீடாக பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக் கோயில் குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன
வரலாறு
திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூாிய பகவானும் இத்தலத்து முருகப்பெருமானை வழிபட்டமையால் திருஆஇனன்குடி என்று பெயா் பெற்றதாக சொல்லப்படுகிறது. சங்க காலத்தில் இந்த ஊா் திருவாவினன்குடி என்றே அழைக்கப்பட்டதாகவும், மாம்பழத்திற்காக கோபம் கொண்டு வந்தமா்ந்த முருகப்பெருமானை சிவனும் பாா்வதியும் இத்திருத்தலத்திற்கு வந்து ஞானப் “பழம் நீ” என்று முருகனுக்கு சூட்டிய பெயரே நாளைடவில் மருவி பழநி என்று ஊா் பெயா் வர காரணமானதாக ஸ்தல புராணம் கூறுகின்றது.
அமைவிடம்
இத் திருத்தலம் பழநி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் பழநி மலை அடிவாரத்தில் வையாபுாி ஏாிக்கரையில் அமைந்துள்ளது. இக் கோவிலின் வடகிழக்கு திசையில் சரவணப் பொய்கை உள்ளது. இத்தலத்தில் உள்ள பெருமானை வழிபட்ட பின்னரே மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணித் தெய்வத்தை வழிபடுவது மரபு.
மூன்றாம் படைவீடு விளக்கம்
மூன்றாம் படைவீடு என்பது பழநி மலைக்கோவிலா அல்லது திருவாவினன்குடி திருத்தலமா என்பதில் பலருக்கும் மிகப்பொிய சந்தேகம் உள்ளது. திருவாவினன்குடி கோவிலையே நக்கீரா் பெருமான் திருமுருகாற்றுப்படையிலே முருகனின் மூன்றாம் படைவீடாக,
“தாஇல் கொள்கை மடந்தையொடு சில்நாள் ஆவி னன்குடி அசைதலும் உாியன்: அதாஅன்று”
அதாவது, குற்றம் இல்லாத கோட்பாடுடன், யாவா்க்கும் நன்மையே விளைவிக்கும் உயா்ந்த கொள்கை உடைய தன் துணைவியோடு சிலகாலம் ஆவினன்குடியில் தங்கியிருப்பதற்கு உாிமை உடையவன் என்று போற்றி பாடியுள்ளாா் என்பதாக சொல்லப்படுகிறது. கோபம் கொண்டு வந்து அமா்ந்த இடமான பழநி மலைக்கோவிலில் தண்டாயுதபாணித் தெய்வமாகவும், திருவாவினன்குடி திருத்தலத்தில் மயில் மீது அமா்ந்த குழந்தை வேலாயுத சுவாமியாகவும் காட்சியளிக்கிறாா். சங்க காலத்தில் இந்த இரண்டு திருத்தலங்களையும் சோ்த்தே இந்த ஊாின் பெயா் திருவாவினன்குடி என்று இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன.
ஆக நக்கீரா் பெருமகனாா் பாடிய திருத்தலம் பழநி மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி கோவில் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு தலமாகவே கொள்ளலாம். எனவே மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி திருத்தலம் இரண்டையுமே மூன்றாம் படைவீடாகக் கொள்ள வேண்டும்.
திருவிழாக்கள்
அறுபடை வீடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழா, திருவாவினன்குடி திருத்தலத்திலே கொடியேற்றத்துடன், திருக்கல்யாணம் மற்றும் தோ் வடம் பிடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தால் நடத்தப்படுகின்றன.
பழனி முருகன் கோயில்
(மலைக் கோயில்)
பழனி மலை மீது கோயிலில் அமைத்துள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது ஆகும் .முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

போகர் வரலாறு
போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும். அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார்.
அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.
இங்கிருக்கும் முருகன் விக்கிரகத்தில் ஒரு கிளியின் உருவம் இருக்கிறது. “திருப்புகழ்” எனும் முருகனை போற்றி பாடல் தொகுப்பை இயற்றிய அருணகிரிநாதர் தான் கிளி வடிவில் முருகனுடன் இருக்கும் பேறு பெற்றிருக்கிறார் என்பது ஐதீகம். பழனி மலைக்கு செல்லும் வழியில் இடும்பனின் சந்நிதி இருக்கிறது. இடும்பனுக்கு அதிகாலையில் முதலில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகே, மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுதுகிறது. முற்காலத்தில் வாழ்ந்த “இடும்பன்” எனும் அரக்கன் தனது தோளில் ஒரு கட்டையில் “சக்திகிரி,சிவகிரி” என்ற மலைகளை தூக்கி சென்று கொண்டிருந்தான். அப்போது இந்த பழனி மலையில் தான் தூக்கி வந்த இருமலைகளையும் வைத்து களைப்பாறும் போது, இங்கு கோவில் கொண்டிருக்கும் முருகபெருமானுடன் சண்டையிடும் நிலை ஏற்பட்டது. முருகனுடனான சண்டையில் தோற்ற இடும்பன் முருகனின் பக்தனானான். இரண்டு மலைகளை தூக்கி வந்த இடும்பனை கௌரவிக்கும் விதமாக பழனி மலை முருகனுக்கு காவடி தூக்கி செல்லும் வழிபாடு முறை உண்டானது. இந்த பழனி மலை முருகன் ஆண்டியாக தோற்றமளிக்க காரணம் கல்வியை பயிற்றுவிக்கும் ஆசிரியர் எப்படி கையில் கொம்பை வைத்துக்கொண்டு மாணவர்களை அடிக்காமல், அவர்களை அதட்டி கல்வியை கற்பிக்கிறாரோ அது போல் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் இருக்கும் நிலையாமையை நினைவுறுத்தி, மக்களை ஞானப்பாதைக்கு திருப்பும் “ஞானாசிரியனாக” இத்தலத்தில் கையில் தண்டத்துடன் காட்சியளித்து தண்டாயுதபாணியாக இருக்கிறார்.
திருவிழாக்கள்
பழனி திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு நடக்கும் குறிப்பிடத்தக்க திருவிழாக்கள்,
தைப்பூசம்
பங்குனி உத்திரம்
சூரசம்ஹாரம்
தல சிறப்பு
திருவண்ணாமலை அருணாச்சல மலையை மக்கள் சித்ராபவுர்ணமி அன்று எவ்வாறு கிரிவலம் வருகின்றனரோ அதுபோல் அக்னி நட்சத்திர நாளில் பக்தர்கள் இப்பழனி மலையை கிரிவலம் செய்வது மிகவும் சிறப்பானதாகும். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையை கிரிவலம் வந்த பின்பு, 450 மீட்டர் உயரமா உள்ள மலையை 690 படிகள் எறிகடந்து வர வேண்டும். நடந்து மலையை ஏற முடியாதவர்களுக்கு மலைக்கு மேல் செல்வதற்கு ரோப் கார் வசதியும் இருக்கிறது. இங்கிருக்கும் முருகப்பெருமானுக்கு நல்லெண்ணெய், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி என்ற நான்கு பொருட்களை கொண்டு தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. பன்னீர் அபிஷேகம் மார்கழி மாதத்தில் மட்டும் செய்யப்படுகிறது. சந்தனம், பன்னீர் தவிர்த்து மீதி அபிஷேக பொருட்கள் எல்லாம் முருகன் விக்கிரகத்தின் தலையில் வைத்து எடுத்துவிடுகின்றனர். முருகன் சிலை மீது வைத்து எடுக்கப்படும் “சிரசு விபூதி” சித்தர்களின் உத்தரவின் பேரில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரிதான பிரசாதமாகும். பொதுவாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடக்கும். ஆனால் பழனி முருகன் கோவிலில் விஷேஷ நட்சத்திர தினங்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஒரு நாளில் ஆறு முறை முருகனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது. ஒரு முறை அபிஷேகம் செய்து அலங்காரம் செய்த பின்பு பூக்கள் அர்ச்சனை, மாலை சாற்றுவது போன்ற எதுவும் செய்யப்படுவதில்லை. திருப்பதி கோவிலின் பிரசாதமாக லட்டு எவ்வாறு புகழ் பெற்றுள்ளதோ, அதுபோல் பழனி தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பழனி பஞ்சாமிர்தம் உலகப்புகழ் பெற்றது. இக்கோவிலின் பஞ்சாமிர்த பிரசாதத்தை சாப்பிடுபவர்களுக்கு அவர்களின் உடலில் இருக்கும் நோய்கள் நீங்குகிறது என்பது அனுபவம் பெற்றவர்களின் உறுதியான வாக்கு. மேற்குத்திசையில் இருக்கும் கேரள மாநிலத்தை பார்த்தவாறு தண்டாயுதபாணி இந்த கோவிலில் வீற்றிருப்பதால், மலையாள பக்தர்கள் மிக அதிகளவில் பழனி முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.
Comments