அறுபடைவீடுகள்

அறுபடைவீடுகள்

தமிழ் நாட்டில், இந்து சமயக் கடவுள்களில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு இடங்கள்:

  1. திருப்பரங்குன்றம் – மதுரை மாவட்டம்
  2. திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் – தூத்துக்குடி மாவட்டம்
  3. திருவாவினன்குடி (எ) பழனி – திண்டுக்கல் மாவட்டம்
  4. திருவேரகம் (எ) சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் – தஞ்சாவூர் மாவட்டம்
  5. திருத்தணி அல்லது குன்றுதோறாடல் – திருவள்ளூர் மாவட்டம்
  6. பழமுதிர்சோலை – மதுரை மாவட்டம்

திருப்பரங்குன்றம்

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

திருச்செந்தூர்

திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது.

பழனி

பழனி, முருகனின் மூன்றாம் படை வீடாகும். நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.

சுவாமிமலை

சுவாமிமலை முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இது கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் எனப் பெயராயிற்று.

திருத்தணி

திருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். இவ்விடத்தின் மலையின் வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்ட தலமாகும். திருத்தணி குன்றின் மீது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தணி முருகன் கோயில் உள்ளது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது. முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.

பழமுதிர்சோலை

பழமுதிர்சோலை – முருகனின் ஆறாம் படைவீடாகும். முருகப் பெருமான் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். இங்குள்ள முருகன் கோயில், விஷ்ணு கோயிலான அழகர் கோவில் மலை மீது அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார்

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *