
கரோனா தொற்றால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சொந்த கிராமத்தில் உருவப்படம் வைத்து மக்கள் அஞ்சலி செலுத்தினர்
கரோனா தொற்றால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் சொந்த கிராமமான விழுப்புரம் அருகே வெங்கமூர் கிராமத்தில் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன், கடந்த 2-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை, ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று ஜூன் 10 காலை உயிரிழந்ததார். அவரது மறைவு திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் கண்ணம்மாபேட்டையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜெ.அன்பழகன் மறைந்த தகவல் அறிந்த அவரின் சொந்த கிராமமான விழுப்புரம் அருகே வெங்கமூர் கிராமத்தில் உள்ள அவரின் வீட்டின் முன் கிராம மக்கள் அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து அழுது அஞ்சலி செலுத்தினர்.