லோகநாதப் பெருமாள், திருக்கண்ணங்குடி கோயில் | Loganatha Perumal Temple, Thirukannankudi

திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோயில்

லோகநாதப் பெருமாள் கோயில், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில், திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோயிலாகும். இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும்.

மூலவர்: லோகநாதர், சியாமளமேனி பெருமாள் (விஷ்ணு)
உற்சவர்: தாமோதர நாரயணன்
அம்மன்/தாயார்: லோகநாயகி (லட்சுமி)
உற்சவர் தாயார்: அரவிந்தவல்லி
தல விருட்சம்: மகிழம்
தீர்த்தம்: ராவண புஷ்கரணி தீர்த்தம்
பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

மங்களாசாசனம் செய்தவர்கள்

திருமங்கையாழ்வார், மணவாள மாமுனிகள்
பெயர்: லோகநாதப் பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணங்குடி
ஊர்: திருக்கண்ணங்குடி
மாவட்டம்: நாகப்பட்டினம்
மாநிலம்: தமிழ்நாடு

மங்களாசாசனம் பாடியவர்கள்

திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை 10 பாசுரங்களில் (1748-1757) பாடியுள்ளார்.

மங்களாசாஸனம் வங்கமா முந்நீர் வரி நிறப் பெரிய வாளரவி னனை மேவிச் சங்கமா ரங்கைத் தடம லருந்திச் சாம மாமேனி என் தலைவன் அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்றெரி மூன்றும் செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங் குடியுள் நின்றானே.

திருமங்கையாழ்வார்

தல வரலாறு

வசிஷ்ட முனிவர் வெண்ணையால் கிருஷ்ண விக்கிரகம் செய்து வழிபட்டு வந்தார். அவரது ஆழ்ந்த பக்தியின் காரணமாக அந்த விக்கிரகம் உருகாமல் இருந்து வந்தது. ஒரு நாள் கிருஷ்ணர் சிறுவனாக வசிஷ்டரின் வீட்டுக்குள் நுழைந்து வெண்ணைய் விக்கிரகத்தைச் சாப்பிட்டு விட்டு வெளியே ஓடினார். ஓடிய சிறுவனைத் துரத்திச் சென்றார் வசிஷ்டர். சிறுவன் ஓடிய வழியில் ஒரு மகிழ மரத்தடியில் சில முனிவர்கள் அமர்ந்து கிருஷ்ணரைத் தியானம் செய்துகொண்டிருந்தனர். ஓடிவந்த சிறுவன் கிருஷ்ணரே என அவர்கள் புரிந்து கொண்டனர். சிறுவனாய் வந்த கிருஷ்ணர் அவர்களின் பக்தியில் மகிழ்ந்து, அவர்களுக்கு ஒரு வரம் தருவதாகச் சொல்ல, அவர்கள் கிருஷ்ணரை அவ்விடத்திலேயே தங்கிவிடுமாறு வேண்டினர். அவரும் அங்கேயே தங்கிவிட்டார். துரத்தி வந்த வசிஷ்டரும் கிருஷ்ணர் நடத்திய லீலையை அறிந்து கொண்டார். இந்நிகழ்வு நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் திருக்கண்ணன்குடி. அவ்விடத்தில் லோகநாதப் பெருமாள் கோவில் கோபுரத்துடன் எழுப்பப்பட்டது.

கிருஷ்ண பக்தியில் வசிஷ்டர் மிக சிறந்தவர். “கிருஷ்ணபிரேமை வசிஷ்டாய நாமா’ என்று சொல்வார்கள். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணெயில் கிருஷ்ணன் விக்கிரகம் செய்து, அதை தன் பக்தி மேலீட்டால் இளகாமல் வைத்து பூஜை செய்து வந்தார். இந்த பக்தியை கண்ட கண்ணன், சிறு குழந்தை வடிவம் கொண்டு கோபாலனாக வசிஷ்டரிடம் சென்றார். அங்கு வசிஷ்டர் பூஜை செய்து கொண்டிருந்த வெண்ணெய் கண்ணனை அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டார். இதைக்கண்ட வசிஷ்டர்,””அடே! அடே!”என விரட்டி சென்றார். திருக்கண்ணங்குடியை “கிருஷ்ணாரண்யம்’ என புராணங்கள் கூறுகிறது. இங்கு மகிழ மரத்தின் அடியில் நிறைய ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். வசிஷ்டரால் விரட்டப்பட்ட கண்ணன் இப்பகுதிக்கு ஓடி வந்தான். இவர் வருவதை தங்களது ஞான திருஷ்டியால் அறிந்த ரிஷிகள் கிருஷ்ணனை பாசக்கயிற்றால் கட்டிப்போட்டனர். இவர்களது பக்திக்கு கட்டுப்பட்ட கண்ணன்,””வசிட்டன் என்னை விரட்டி வருகிறான். வேண்டியதை சீக்கிரம் கேட்டுப்பெறுங்கள்”என்றார். அதற்கு ரிஷிகள்,””கண்ணா! நீ எங்களுக்கு தரிசனம் தந்தது போல் இத்தலத்திற்கு வருவோர்களுக்கு தரிசனம் கொடுத்தருள வேண்டும்,”என வேண்டினர். இவர்களது வேண்டுதலுக்கிணங்க கண்ணன் இத்தலத்தில் நிற்க, விரட்டி வந்த வசிஷ்டர் கண்ணனது பாதங்களை பற்றிக்கொண்டார். உடனே கோபுரங்களும், விமானங்களும் உண்டாகி விட்டன. இதையறிந்த பிரம்மனும் தேவர்களும் உடனே வந்து பிரமோற்சவம் நடத்தினர்.கண்ணன் கட்டுண்டு நின்ற படியால் “கண்ணங்குடி’ ஆனது.

தல பெருமை

பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 18வது தலம். பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 1.திருக்கண்ணமங்கை. 2. திருக்கண்ணபுரம். 3.கபிஸ்தலம். 4.திருக்கோவிலூர். 5.திருக்கண்ணங்குடி இத்தல தீர்த்தத்தின் பெயரைக்கேட்டாலே சகல பாவங்களும் விலகி விடும் என்பதால் இப்பெயர் பெற்றது. இத்தல பெருமாளின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம். தாயார் லோக நாயகி முகமும், உற்சவர் அரவிந்த நாயகி முகமும் ஒரே மாதிரி இருப்பது சிறப்பு. எல்லா திவ்ய தேசத்திலும் கருடாழ்வார் கைகளை குவித்து வணங்கும் நிலையில் இருப்பார். ஆனால் இத்தலத்தில் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு வைகுண்டத்தில் எழுந்தருளி இருப்பதைப்போல் அருள் பாலிக்கிறார். “ஊராக் கிணறு, உறங்காபுளி, தேராவழக்கு திருக்கண்ணங்குடி’ என்று இத்தலத்திற்கு திவ்ய தேச சிறப்பு பழமொழி உண்டு.

தல சிறப்பு

பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 18வது தலம். இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் “திருநீரணி விழா’ என்பது சிறப்பான விழாவாகும். இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை தான் நடைபெறும். இதற்கு அனைவரும் விபூதி அணிந்தே வருவார்களாம். உபரிசரவசு மன்னனுக்காக இந்த விழா எடுக்கப்பட்டது. சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்த விழா எடுத்துக்காட்டாகும்.

திருவிழா

கைகுண்ட ஏகாதசி

பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்

பிரார்த்தனை நிறைவேறியதும் கண்ணனுக்கு பால்பாயசம் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

பஞ்சகிருஷ்ண தலங்கள்

1. லோகநாதப் பெருமாள் கோவில்: திருக்கண்ணங்குடி
2. கஜேந்திரவரதர் கோவில்: கபிஸ்தலம்
3. நீலமேகபெருமாள் கோவில்: திருக்கண்ணபுரம்
4. பக்தவக்ஷலபெருமாள் கோவில்: திருக்கண்ணமங்கை
5. உலகளந்தபெருமாள் கோவில்: திருக்கோவிலூர்

பொது தகவல்

இத்தல இறைவனை பிரம்மா, கவுதமர், உபரிசரவசு, வசிட்டர், பிருகு, மாடரர், திருமங்கையாழ்வார் ஆகியோர் தரிசித்துள்ளனர். இங்குள்ள பெருமாள் உத்பல விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார்.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *