சப்தபுரீஸ்வரர் திருக்கோயில் | Sapthapureeswarar Temple

அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:சப்தபுரீசுவரர்
அம்மன்/தாயார்:ஓசைகொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள்
தல விருட்சம்:கொன்றை
தீர்த்தம்:சூரிய தீர்த்தம், ஆனந்த தீர்த்தம் (கோயிலின் எதிரில் உள்ளது)
புராண பெயர்:சப்தபுரி, திருத்தாளமுடையார் கோயில்
ஊர்:திருக்கோலக்கா
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என்மனக் கருத்தை ஆளும் பூதங்கள் பாடநின் றாடும் அங்கணன் தனை எண்கணம் இறைஞ்சும் கோளிலிப் பெருங்கோயில் உள்ளானைக் கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 15வது தலம்.

திருவிழா:

சித்திரை திருவாதிரையில் சீர்காழி சட்டை நாதர் கோயிலில் திருவிழா கொண்டாடப்படும். இரண்டாம் நாளன்று பால் உற்சவம் நடக்கும். அதன்பின் திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளுவார். அன்று இரவு சிவபெருமான் சம்பந்தருக்கு பொன்தாளம் தருவார். மறுநாள் காலை பூப்பல்லக்கில் சம்பந்தர் திரும்புவது இங்கு நடக்கும் சம்பிரதாய திருவிழா. கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக் கிழமை தோறும் தீர்த்தவாரி நடக்கிறது.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 15 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோயில், திருக்கோலக்கா- 609 110, சீர்காழி நாகப்பட்டினம் மாவட்டம்.

போன்:

+91- 4364-274 175.

பொது தகவல்:

கோயிலின் எதிரில் திருக்குளம் ஆனந்ததீர்த்தம், முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுனையில் ரிஷபாரூடர் தரிசனம்- உள்நுழைந்ததும் வலப்பால் வாகன மண்டபம், நுழையும் போது நால்வர், அதிகார நந்தி சன்னதிகள் உள்ளன.

பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன. உள்மண்டபத்தில் வலப்பால் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராஜ சபை உள்ளது.

அம்பாள் சன்னதி தனிக்கோயிலாக உள்ளது – நின்ற திருமேனி. ஞானசம்பந்தர் பொன் தாளத்தை இரு கைகளிலும் ஏந்தி நிற்கும் உற்சவத் திருமேனி தரிசிக்கத்தக்கது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

பிரார்த்தனை

வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, ஓசை நாயகியிடம், “”ஜடப்பொருளான தாளத்திற்கு ஓசை கொடுத்த நாயகியே, பேசும் சக்தியைக்கொடு,’ என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும். மகாலட்சுமி தவம் இருந்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்த தலம் என்பதால், திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் பெண்கள் இங்குள்ள மகாலட்சுமிக்கு, தொடர்ந்து 6 வாரம் மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

பேசும் சக்தி வந்தவுடன் தங்கத்தாலான தாளத்தை வாங்கி காணிக்கை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

இசைக்கலையில் விருப்பமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் இசையில் வல்லவராகலாம். கோயிலின் நுழைவு வாயிலிலேயே ஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும், ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர். இங்குள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லா செல்வங்களும் அருளக்கூடியவள்.திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால் இத்தலம் திருக்கோலக்கா எனப்பட்டது. ஓசை நாயகியின் சன்னதியில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், இன்னிசை நிகழ்த்துபவர்கள் மாபெரும் புகழை அடைவார்கள் என்பது கண்கூடான உண்மை. தற்போது திருத்தாளமுடையார் கோவில் என அழைக்கப்படுகிறது.

தல வரலாறு:

பார்வதிதேவியால் ஞானப்பால் கொடுக்கப்பட்ட திருஞான சம்பந்தர், பல தலங்களுக்கு சென்று, தனது சிறு கைகளால் தாளம் போட்டு பாடுவதைப்பார்த்தார் சிவன். குழந்தையின் கைகள் வலிப்பது பொறாமல், அவருக்கு தங்கத்தால் ஆன இரண்டு தாளங்களை கொடுத்தார். தட்டிப்பார்த்தார் சம்பந்தர். ஆனால் அதிலிருந்து ஓசை வரவில்லை. உடனே அந்த தாளத்திற்கு ஓசை கொடுத்தாள் அம்மன். எனவே தான் இங்குள்ள மூலவர் தாளபுரீஸ்வரர் எனவும், அம்மன் ஓசைநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *