பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் | Pranava Vyakrapureeswar Temple

அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்)
அம்மன்/தாயார்:பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை
தல விருட்சம்:இலந்தை
தீர்த்தம்:கொள்ளிடம், கவுரி
புராண பெயர்:உமாப்புலியூர், திருவோமாம் புலியூர்
ஊர்:ஓமாம்புலியூர்
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

மணந்திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறங்கம் ஐவேள்வி இணைந்தநால் வேதம் மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையால் உணரும் குணங்களும் அவற்றின் கொள்பொருள் குற்றம் மற்றவை யுற்றது மெல்லாம் உணர்ந்தவர் வாழும் ஓமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 31வது தலம்.

திருவிழா:

இங்கு குருபெயர்ச்சி விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

தல சிறப்பு:

சுயம்பு குருதலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 31 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி:

அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், ஓமாம்புலியூர்- 608 306. கடலூர் மாவட்டம்.

போன்:

+91- 4144-264 845

பொது தகவல்:

திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்தது என்றும், ஹோம புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார். உமாதேவி அருள் பெற்ற தலம் என்பதால் “உமாப்புலியூர்’ என்ற பெயர் “ஓமாப்புலியூர்’ என மாறிவிட்டதாகவும் கூறுகின்றனர். காவிரியின் வடகரையில் 63 சிவ ஸ்தலங்கள் உள்ளன. இவற்றில் தெட்சிணாமூர்த்திக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமையப்பெற்ற 31வது ஸ்தலம் ஓமாப்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயிலாகும்.

பிரார்த்தனை

கல்வி, கேள்விகளில் சிறந்து திகழ இங்கு அதிகளவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து தெட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்து வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வியாழக்கிழமை மற்றும் குரு பெயர்ச்சி காலங்களில் இங்குள்ள குரு பகவானுக்கு விசேஷ அபிசேக ஆராதனை செய்கிறார்கள்.

தலபெருமை:

உமாதேவியார் “ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவன் அதற்குரிய விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக் கும்போது அவரது கவனம் திசை திரும்பவே, அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி சிவன் தண்டனை கொடுத்து விட்டார். அதன்படி பார்வதிதேவி, பூமிக்கு வந்தார். அவர் ஓமாப்புலியூரில் தங்கியிருந்து சிவனை வணங்கி உபதேசம் பெற்றார். சிவன் தெட்சிணாமூர்த்தியாக உபதேசித்ததால் இது குருமூர்த்தி ஸ்தலமாக கருதப்படுகிறது.

குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது. குரு சன்னதி பொதுவாக கோயில் பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். ஆனால் இந்த தலத்தில் சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் தெட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார். இப்படிப்பட்ட அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. குரு ஸ்தலங்களில் தலைசிறந்ததாக கருதப்படுவதற்கு இதுவே. காரணம் ஆகும்.

தல வரலாறு:

தில்லையில் நடராஜ பெருமானின் திருநடனத்தை காணும் முன்பு வியாக்ரபாத முனிவர் ஓமாப்புலியூர் வந்தார். சிதம்பரத்தில் நடராஜரின் திருநடனத்தைக் காண தனக்கு அருள்தர வேண்டும் என வேண்டினார். வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்டதால் இவ்வூர் இறைவன் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார். இங்கு அம்பாள் பூங்கொடி என அழைக்கப்படுகிறாள்.

பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த சதானந்தன் என்ற அரசன் தொழுநோயால் பாதிக்கப்பட்டான். இவன் சிவபக்தன்.அசரீரியின் வாக்குப்படி இவ்வூரிலுள்ள வர்ந்தனான் குளத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றான்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: சுயம்பு குருதலம்.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *