திருவிஜயமங்கை விஜயநாதேஸ்வரர் திருக்கோயில் | Vijaya Natheswarar Temple

அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:விஜயநாதேஸ்வரர் ( விஜயநாதர்)
அம்மன்/தாயார்:மங்கள நாயகி (மங்கை நாயகி, மங்களாம்பிகை)
தீர்த்தம்:அர்ஜுன தீர்த்தம்
புராண பெயர்:திருவிசயமங்கை
ஊர்:திருவிஜயமங்கை
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்

அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்

மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை அண்ணல்கள் தமக்களப் பரிய அத்தனூர் தண்ணறுஞ் சாந்தமும் பூவு நீர்கொடு விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 47வது தலம்.

திருவிழா

திருக்கார்த்திகை, சிவராத்திரி, பங்குனியில் திருக்கல்யாணம் நடைபெறும்.

தல சிறப்பு

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 47 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்

காலை 9 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும்.. மற்ற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.

முகவரி

அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை-612 301. தஞ்சாவூர் மாவட்டம்.

போன்:

+91- 435- 294 1912, 94435 86453, 93443 30834

பொது தகவல்

மூலவர் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர்.

ஆயுள் விருத்தி வழிபாடு

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் இத்தலத்தைப் போற்றி தேவாரம் பாடியுள்ளனர். திருநாவுக்கரசர், எமனை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இதனால், ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயால் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். செயல்களில் வெற்றி பெற, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜயநாதரை வழிபட்டு வரலாம். அம்பாள் மங்களநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். படித்து முடித்து, முதலில் வேலைக்குச் செல்பவர்கள், தேர்வில் வெற்றி பெற விஜயநாதருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.

அளவில் சிறிய இக்கோயிலில் கோபுரம் கிடையாது. கோயிலுக்கு எதிரில் வெளியே அர்ஜுன தீர்த்தம் உள்ளது. பிரகாரத்தில் அனுக்கை விநாயகர், சண்டிகேஸ்வரர், காலைபைரவர், சூரியன், நால்வர் உள்ளனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.

பிரார்த்தனை

ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயால் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். செயல்களில் வெற்றி பெற, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜயநாதரை வழிபட்டு வரலாம். திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.

நேர்த்திக்கடன்

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, நெய் தீபமேற்றி, கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை

சோழர்கால முறைப்படி கட்டப்பட்ட கோயில். இங்கு மூலஸ்தான கோபுரம் பெரியதாகவும், ராஜகோபுரம் சிறியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் மங்கள நாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் அபய முத்திரையும், பின் இரண்டு கைகளில் ஒரு கையில் அட்சரமாலையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.

தல வரலாறு

மகாபாரத போரின்போது பாண்டவர், கவுரவர் படையினர் ஒருவருக்கொருவர் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். இவ்வேளையில், வேதவியாசர் அர்ஜுனரிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ஜுனன் சிவனை வேண்டி தவமிருந்தான். இதையறிந்த, துரியோதனர் முகாசுரனை அனுப்பி தவத்தை கலைக்க முயன்றார். பன்றி வடிவில் வந்த அசுரனை, அர்ஜுனன் வீழ்த்தினான். அங்கு வந்த ஒரு வேடன், தானே பன்றியை வீழ்த்தியாகச் சொன்னார். இருவருக்கும் வாக்குவாதம் உண்டானது. அவ்வேளையில், சுயரூபம் காட்டிய சிவன், பாசுபத அஸ்திரம் கொடுத்தார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், “ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ஜுனன் தகுதிபெற்றவன்தானா?’ என்றாள் சந்தேகத்துடன். சிவன் அவளிடம், “அர்ஜுனன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்,’ என்றார். அர்ஜுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினாராம். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அவனிடம் கொடுத்தார்.

அர்ஜுனர் தனக்கு அருள் செய்ததைப்போல இங்கிருந்து அருளும்படி வேண்டவே சிவன் எழுந்தருளினார். அர்ஜுனனுக்கு விஜயன் என்றும் பெயருள்ளதால், சிவன் “விஜயநாதர்’ என்று பெயர் பெற்றார். தலத்திற்கும் திருவிஜயமங்கை என்ற பெயர் ஏற்பட்டது.

சிறப்பம்சம்

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.

About the author

Comments

  1. இதில் வரும் தொடர்பு எண் தவறாக உள்ளது யாரும் இந்த எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *