திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில் | Vaigalnathar Temple

திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில்

மூலவர்:வைகல்நாதர் (செண்பகாரண்யேஸ்வரர்)
அம்மன்/தாயார்:கொம்பியல்கோதை (சாகா கோமளவல்லி)
தல விருட்சம்:செண்பகம்
தீர்த்தம்:செண்பக தீர்த்தம்
புராண பெயர்:வைகல்மாடக்கோயில்
ஊர்:திருவைகல்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்

அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

தேவாரப்பதிகம்

மாலவன் மலரவன் தேடி மால்கொள மாலெரி யாகிய வரதர் வைகிடம் மாலைகொ டணிமறை வாணர் வைகலில் மாலன மணியணி மாடக் கோயிலே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 33வது தலம்.

திருவிழா

மாசி சிவராத்திரி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்னபிஷேகம். சிவனுக்குரிய அனைத்து திருவிழாவும் சிறப்பாக நடக்கிறது.

தல சிறப்பு

இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 96 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், வைகல்மாடக்கோயில், ஆடுதுறை – 612 101, நாகப்பட்டினம் மாவட்டம்.

போன்

+91- 435 – 246 5616

பொது தகவல்

பாடல்பெற்ற பெருமை உடைய இக்கோயில் தற்போது மிகவும் சிதிலமடைந்து உள்ளது. பாதுகாப்பும், வசதியும் அற்று கோயில் பொலிவு குறைந்து காணப்படுகிறது.

தரிசிக்கும்போது உள்ளத்தில் மிஞ்சுவது கோயிலின் நிலையை எண்ணி வருந்தும் ஏக்கமே! ஒருகால வழிபாடு சிவாசாரியாரின் உள்ளத்து ஆர்வத்தால் நடைபெறுகிறது.

கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி அளித்து கோயில் நிலையை உயர்த்த பாடுபடுவோம்.

பிரார்த்தனை

கேட்டதெல்லாம் கொடுக்கும் இறைவன்

நேர்த்திக்கடன்

பிரார்த்தனை நிறைவேறியதும் தினசரி பூஜைக்கு ஏற்ற பொருளுதவி அளிக்கலாம்.

தலபெருமை

கோச்செங்கண்ணன் கட்டிய மாடக்கோயிலில் இதுவும் ஒன்று. வைகல் என்ற ஊரில் கட்டப்பட்ட மாடக்கோயிலாக விளங்குவதால் “வைகல் மாடக்கோயில்’ ஆனது. இவ்வூரில் சிவனது மூன்று கண்ணைப்போல் மூன்று கோயில் உள்ளன.

வலக்கண்ணாக விசாலாட்சி உடனாகிய விஸ்வநாதர் கோயில், இடக்கண்ணாக பெரியநாயகி சமேத பிரமபுரீஸ்வரர் கோயில், நெற்றிக்கண்ணாக கொம்பியல் கோதை உடனாகிய வைகல் நாதர் திருக்கோயில். இந்த மூன்று திருக்கோயிலுமே பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமாகும்.

தன் குட்டியை தேடி வருந்திய யானை, தனது தந்தத்தால் இங்கிருந்த ஈசல் புற்றை காலால் மிதித்து சேதப்படுத்தியது.

தன் புற்றிணை மிதித்து அழித்த யானையின் உடலை ஈசல் கடித்து கொன்றன. தங்கள் தவறை உணர்ந்த யானைக்குட்டியும், ஈசலும் இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றன என புராணம் கூறுகிறது.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் பூமி தேவி, தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்டினாள்.

இவளது வேண்டுகோளை ஏற்ற பெருமாள் பூமிதேவியை திருமணம் செய்து கொண்டார். இதனால் மகாலட்சுமிக்கு பெருமாள் மீதுகோபம் ஏற்பட்டது. எனவே லட்சுமி தேவி செண்பகவனம் எனும் இத்தலத்தை அடைந்து கடும் தவம் செய்தாள்.

பெருமாளும், பூமி தேவியும் பிரிந்து போன லட்சுமியை காண இத்தலம் வந்தனர். இவர்களை தேடி வந்த பிரம்மனும் இத்தல இறைவனை வழிபட்டார். சிவனின் திருவருளால் பெருமாள் லட்சுமி, பூமாதேவி இருவரையும் மனைவியராகப்பெற்றார்.

சிறப்பம்சம்

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார்.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *