அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில்
மூலவர்:நர்த்தனபுரீஸ்வரர் ( ஆடவல்லார்), நடனேஸ்வரர்
அம்மன்/தாயார்:பாலாம்பிகை, உமாதேவி
தல விருட்சம்:வில்வம், பலா
தீர்த்தம்:சங்கு தீர்த்தம், குளம்
புராண பெயர்:தலையாலங்கானம்
ஊர்:திருத்தலையாலங்காடு
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
அப்பர்
தேவாரப்பதிகம்
மெய்த்தவத்தை வேதத்தை வேதவித்தை விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் தன்னை எய்த்தவமே உழிதந்த ஏழையேனை இடர்க்கடலில் வீழாமே ஏறவாங்கிப் பொய்த்தவத்தார் அறியாத நெறி நின்றானைப் புனல் கரந்திட்டு உமையொடொரு பாகம் நின்ற தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே.
-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 93வது தலம்.
திருவிழா:
தை அமாவாசை, மாசி சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம்.
தல சிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 156 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், தலையாலங்காடு-612 603 சிமிழி போஸ்ட், செம்பங்குடி வழி, குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91- 4366 – 269 235, +91- 94435 00235.
பொது தகவல்:
சிறிய ஊர், கோயில் தெற்கு நோக்கியது. சுவாமி அம்பாள் கோயில்கள் மட்டுமே உள்ளன. சுவாமி சன்னதியில் விநாயகர், விசுவநாதர், தலவிநாயகர், முருகன், பைரவர், நால்வர் சன்னதிகள் உள்ளன.
மூலவர் அழகான மேனி. அம்பாள் தெற்கு நோக்கிய சன்னதி. இக்கோயில் “எண்கண்’ கோயிலுடன் இணைந்தது. அருமாமையில் எண்கண், குடவாயில் பெருவேளூர், முதலிய திருமுறைத் தலங்களும், மணக்கால், காட்டூர் முதலிய வைப்புத் தலங்களும் உள்ளன.
பிரார்த்தனை
வெண்குஷ்டம் உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகும், என்பதும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி பிரார்த்தித்தால் சிறந்த பலன் உண்டு என்பதும் நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை:
கோயிலின் முன்பு தீர்த்தம் உள்ளது. இது மிகவும் விசேஷமானது. இதில் நீராடி இறைவனுக்குத் தீபமிட்டு உறுதியுடன் வழிபட்டால் வெண்குஷ்டநோய் நீங்கபெறும் என்பது இன்றும் மக்களின் அசையாத நம்பிக்கையாகும்.
தல வரலாறு:
தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை அழிப்பதற்காக வேள்வி ஒன்றை நடத்தினார்கள். அதில் தோன்றிய யானையின் தோலை சிவன் உரித்தார். மானை தன் கையில் ஏந்திக்கொண்டார். முயலகன் என்ற அரக்கனை அழித்து அவனது முதுகின் மீது ஏறி நர்த்தனம் ஆடிய தலம் இது.
கபில முனிவர் பூஜித்த தலம்.சங்க காலத்தில் இத்தலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் ஏனைய தமிழ் வேந்தர் இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இதில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றிபெற்றான். அவனுக்கு தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.