மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில் | Mandira Pureeswarar Temple

அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:மந்திரபுரீஸ்வரர் (சூதவனப்பெருமான்)
அம்மன்/தாயார்:பெரிய நாயகி, பிருகந் நாயகி
தல விருட்சம்:மா மரம்
தீர்த்தம்:மார்க்கண்டேயர், அனுமன், குஞ்சிதம், கவுதம தீர்த்தம், நெல்லி தீர்த்தம்
ஆகமம்/பூஜை :காரண ஆகமம்
புராண பெயர்:திருவுசாத்தானம், கோயிலூர்
ஊர்:கோவிலூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

நீருடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்

போருடைச் சுக்கிரீவன் அநுமன் தொழக்

காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெம்

சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 107வது தலம்.

திருவிழா:

சித்ரா பவுர்ணமியில் பிரமோற்சவம் நடக்கிறது. ஆனியில் நடராஜர் திருமஞ்சனமும், ஆடிப்பூரத்தில் அம்மன் புறப்பாடும், ஆவணி மூலத்தில் அபிஷேக ஆராதனையும், சுவாமி புறப்பாடும் நடைபெறும். ஐப்பசி அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை ஆகிய நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

தல சிறப்பு:

வெண்மை நிறத்துடன் அமிர்த சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கருவறைச்சுவரில் ஜ்வரஹரேஸ்வரர் மூன்று முகங்களுடனும், மூன்று திருவடிகளுடன் காட்சி தருகிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 170 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர், முத்துப்பேட்டை – 614 704. திருத்துறைப்பூண்டி தாலுகா, திருவாரூர் மாவட்டம்.

போன்:

+91- 4369 – 262 014, 99420 39494

பொது தகவல்:

கோயில் 5 நிலை ராஜகோபுரம், 2 பிரகாரங்களுடன் விளங்குகிறது. கோயிலின் மேற்கு பகுதியில் வருணன் பூஜித்த லிங்கம், ராமர் பூஜித்த லிங்கம், மார்க்கண்டேயர் பூஜித்த லிங்கம், விஸ்வாமித்திரர் பூஜித்த லிங்கம் உள்ளது.

மிகவும் பழமையான கோயில் என்பதால் இங்கு நவகிரகம் கிடையாது. நவகன்னிகைகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள்.

பிரார்த்தனை

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

ராமர் இலங்கை செல்லவும், போரில் வெற்றி பெறவும் வேதாரண்யம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய மூன்று இடங்களில் அணை கட்டுகிறார். கடல் அலைகளும் மீன்களும் அணையை கரைத்து விடுகின்றன.

தடைகளை நீக்க வேண்டி ராமர் இத்தலம் வந்து மந்திர ஆலோசனை பெற்று ராமமேஸ்வர கடலில் பாலம் கட்டியதாகவும், இந்த அணையே நிலையாக இருந்தது என்று வரலாறு கூறுகின்றன. எனவே இறைவன் “மந்திரபுரீஸ்வரர்’ என வழங்கப்படுகிறார். ராமர் இத்தல இறைவனிடம் கடலில் அணைகட்டுவதற்குரிய வழிவகைகளை உசாவிய (கேட்டு தெரிந்து கொண்ட) இடமாதலால் இத்தலத்திற்கு “திருவுசாத்தானம்’ என பெயர் ஏற்பட்டது.

பாற்கடலில் அமிர்தம் கடையும் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் இருந்ததாக புராணங்கள் கூறுகிறது. மார்க்கண்டேயர் தன் மீது எமன் வீசிய பாசக்கயிறின் வடுக்கள் நீங்குவதற்காக இங்கு திருக்குளம் அமைத்து வழிபாடு செய்துள்ளார். சிதம்பரத்தில் சாயரட்சை நேரத்தில் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை காணமுடியாமல் வருந்திய விஸ்வாமித்திரர் இத்தலம் வருகிறார். இவரது வருத்தத்தை போக்க இங்கு நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது, சிதம்பரத்தில் ஆடிய தாண்டவத்தை விஸ்வாமித்திரருக்கு இறைவன் காட்டுகிறார். எனவே இத்தலம் சிதம்பரத்திற்கு இணையாக கோயில் ஆனதால், ஆதிசிதம்பரம் என்றும் கோவிலூர் எனவும் அழைக்கப்படுகிறது.

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, ராமருக்கு வெற்றி கிடைத்த தலமாதலால் இத்தலத்தை நினைத்தாலே வெற்றி. வேத மந்திரங்கள் படிப்பவர்கள் இத்தல இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு. அஷ்டாவக்ர முனிவரால் வருணபகவானுக்கு ஏற்பட்ட தொழு நோய், இத்தல இறைவனை வணங்கியதால் நீங்கியது. வழக்கமாக எருமை தலையின் மீது அருள்பாலிக்கும் துர்கை, இத்தலத்தில் எருமை இல்லாமல் அருள்பாலிக்கிறாள். இத்தல விநாயகரின் திருநாமம் சூதவன விநாயகர்.

தல வரலாறு:

காசிப முனிவரின் மனைவி வினதை. இவர்களது மகன் கருடன். ஒரு முறை இவன் தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அமிர்த கலசத்தை எடுத்து வருகிறான். இதைப்பார்த்த இந்திரன் பின் தொடருகிறான்.

கருடன் வேகமாக வந்ததால் கலசத்திலிருந்து அமிர்தம் சிந்தியது. அவ்வாறு சிந்திய இடங்களில் மாமரங்கள் தோன்றி சூதவனமாக காட்சி தருகிறது. இந்த வனத்தில் வீற்றிருக்கும் இறைவன் மீது அமிர்தம் சிந்தியதால், சிவன் வெண்மை நிறமாக காட்சி தருகிறார்.

பதஞ்சலி முனிவரின் அருளால் இந்த காடுகள் அழிக்கப்பட்டு கோயில் உருவானது. ராமபிரானுக்கு மந்திர உபதேசம் வழங்கியதால் இறைவன் சற்று இடதுபுறம் சாய்ந்தும், குனிந்தும் காணப்படுகிறார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: வெண்மை நிறத்துடன் அமிர்த சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *