அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில்
மூலவர்:வில்வாரண்யேஸ்வரர் (வில்வநாதர், திருக்கொள்ளம்பூதூருடையார்)
அம்மன்/தாயார்:சவுந்தர நாயகி (அழகிய நாச்சியார்)
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:பிரம்ம, அக்னி, கங்கா தீர்த்தம்
ஆகமம்/பூஜை :காமிக ஆகமம்
புராண பெயர்:கூவிளம்பூர், செல்லூர், திருக்களம்பூர்
ஊர்:திருக்கொள்ளம்புதூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்
சம்பந்தர்
தேவாரப்பதிகம்
ஓடம்வந் தணையும் கொள்ளம் பூதூர் ஆடல்பேணிய அடிகளை யுள்கச் செல்ல வுந்துக சிந்தையார் தொழ நல்கு மாறருள் நம்பனே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 113வது தலம்.
திருவிழா
சித்திரை பிரமோற்சவம், கார்த்திகை பிரதோஷ நாளில் சுவாமி புறப்பாடு, சித்ரா பவுர்ணமியில் பஞ்ச மூர்த்திபுறப்பாடு. நவராத்திரியில் அம்மன் புறப்பாடு. ஐப்பசி அமாவாசையில் திருஞான சம்பந்தர் திருவிழா, கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர்பூஜை, தைப்பூசம்.
தல சிறப்பு
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 177 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி
அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர், செல்லூர் – 613 705 குடவாசல் வழி, திருவாரூர் மாவட்டம்.
போன்
+91- 4366 – 262 239.
பொது தகவல்
கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி 75 அடி உயரத்தில் 2 பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. உள்பிரகாரங்களில் பொய்யாத விநாயகர், வலம்புரிவிநாயகர், முருகன், ஆதிவில்வநாதர், கஜமுக்தீஸ்வரர், பஞ்சலிங்கம், கஜலட்சுமி ஆகிய சன்னதிகள் உள்ளன. பிரம்மா, அகத்தியர், அர்ச்சுனன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜசோழன் இவர்கள் காலத்தில் கட்டியிருக்க வேண்டும் என கல்வெட்டுகள் கூறுகிறது.
பிரார்த்தனை
சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு.
நேர்த்திக்கடன்
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை
பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று. தலவிருட்சம் வில்வம். கூவிளம் என்பதற்கு வில்வம் என்பது பெயர். கூவிளம்புதூர் என்ற பெயர் மருவி காலப்போக்கில் கொள்ளம்புதூர் ஆனது.
தல வரலாறு
பல சிவத்தலங்களை தரிசித்து பாடி வந்த ஞானசம்பந்தர், இத்தலம் வரும் போது வழியில் உள்ள வெட்டாறில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஓடம் ஓட்டுபவர்களால் ஓடம் செலுத்த முடியாமல் ஆற்றின் கரையிலேயே ஓடத்தை விட்டு சென்றனர். ஆனால் சிவனை தரிசிக்காமல் செல்ல கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் சம்பந்தர். எனவே ஆற்றின் கரையில் இருந்த ஓடம் ஒன்றை அவிழ்க்க செய்து அதன் மீது தன் அடியவர்களுடன் ஏறினார். தமது நாவையே ஓடக்கோலாக கொண்டு, “கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டமாடிய நம்பனை யுள்கச் செல்வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறரு ணம்பனே’ எனும் திருப்பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடம் ஆற்றின் மறுகரையை அடைந்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பதிகங்ளை பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு. இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது.
சிறப்பம்சம்
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்