ஜலநாதீஸ்வரர் திருக்கோயில் | Chalanatheeswarar Temple

அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:ஜலநாதீஸ்வரர்
அம்மன்/தாயார்:கிரிராஜ கன்னிகாம்பாள்
தல விருட்சம்:தக்கோலம்
தீர்த்தம்:நந்தி தீர்த்தம், கல்லாறு
புராண பெயர்:திருவூறல்
ஊர்:தக்கோலம்
மாவட்டம்:வேலூர்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டு அழகார் நன்றும் கானமர் மான்மறிக்கைக் கடவுள் கருதும் இடம் வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்து அழகார் நம்மை ஊனம் அறுத்தபிரான் திருவூறலை உள்குதுமே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 12வது தலம்.

திருவிழா:

சித்ரா பவுர்ணமியை ஒட்டி 10 நாள் பிரம்மோற்ஸவம், நவராத்திரி, கந்தசஷ்டி, வைகாசி விசாகம், ஆனிதிருமஞ்சனம், ஆடிப்பூரம், மார்கழி திருவாதிரை, மாசிமகம், தைப்பூசம், திருக்கார்த்திகை.

தல சிறப்பு:

இத்தலத்தில் காமதேனு வழிபட்டதால், இங்கு செய்யும் சிவ புண்ணியம் ஒன்றுக்கு நூறு மடங்காக பெருகும் என புராணம் கூறுகிறது. இத்தலத்தில் அம்மன் நின்ற நிலையில் வடக்கு பார்த்திருப்பதால் மிகவும் சக்தி உள்ளவளாக திகழ்கிறாள். இங்கு அம்மனுக்கு தான் முதல் பூஜை. இங்குள்ள சுவாமி, அம்மன், காளி, முருகன், தெட்சிணாமூர்த்தி ஒவ்வொன்றுமே மிகவும் சிறப்பு பெற்றது. நர்த்தன நிலையில் (உத்கடி ஆசனத்தில்) தெட்சிணாமூர்த்தியின் திருக்கோலம் வேறு எங்கும் காண முடியாதது. தமிழகத்தில் உள்ள சிறப்பு பெற்ற தெட்சிணாமூர்த்தி கோயில்களில் இது முக்கியமானது. அருணகிரிநாதர் இத்தல முருகனை பாடியுள்ளார். நிறம் மாறும் லிங்கம்: ஒரு முறை இப்பகுதியில் வெள்ளம் வந்த போது பார்வதிதேவி இங்குள்ள சிவனை அணைத்து காப்பாற்றியதன் அடையாளமாக லிங்கத்திருமேனியில் பள்ளம் இருப்பதையும், அதையும் தாண்டி வெள்ளம் அரித்தது போல் லிங்கத்தின் கீழ்ப்பகுதியில் வரிவரியாக மணல் கோடுகள் இருப்பதை இன்றும் காணலாம்.பார்வதிதேவி இந்த லிங்கத்தை அணைத்திருப்பதாக ஐதீகம் இருப்பதால் இங்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் இந்த லிங்கத்தை தொடாமல் தான் இன்றும் கூட அபிஷேகம் செய்கிறார்கள். இது இத்தலத்தின் மாபெரும் சிறப்பம்சமாகும். இது தவிர இன்னொரு அதிசயத்தையும் இந்த லிங்கத்தில் காணலாம். உத்தராயண காலத்தில் இந்த லிங்கம் செந்நிறமாக காட்சி தரும். அப்போது நல்ல மழை பொழிந்து பயிர் செழிக்கும். தட்சிணாயன காலத்தில் இதே லிங்கம் வெண்மையாக மாறும். அப்போது வறட்சி ஏற்பட்டு நிலம் காய்ந்து விடும். இத்தலத்தில் உள்ள அனைத்து சிலைகளும் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு சிற்பக்கலைக்கு எடுத்துகாட்டாக விளங்குகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 245 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு கிரிராஜ கன்னிகாம்பாள் சமேத சலநாதீஸ்வரர் திருக்கோயில், தக்கோலம்-631 151. வேலூர் மாவட்டம்.

போன்:

+91- 4177-246 427.

பொது தகவல்:

காமதேனு, இந்திரன், சந்திரன், எமன், திருமால், பாண்டவர்கள், சப்த கன்னியர், உததி முனிவர், தீர்க்கத முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபாடு செய்துள்ளனர்.

கோயில் அமைப்பு: கல்லாற்றின் கரையில் இரண்டு பிரகாரங்களுடன் மேற்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரமும், கிழக்கு நோக்கிய சுவாமி சன்னதியும், வடக்கு நோக்கிய அம்மன் சன்னதியும் அமைந்துள்ளது. கோபுரம் 1543ல் விஜயநகர அரசன் வீரப்பிரதாப சதாசிவ மகாராயர் கட்டியுள்ளார். மகாமண்டபத்தில் நடராஜர், ஐயப்பன், நவகிரக சன்னதிகள் உள்ளன.

முதல் பிரகாரத்தில் பஞ்சலிங்கம், தெட்சிணாமூர்த்தி, வள்ளிதெய்வானையுடன் முருகன், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், திருமால், சூரியன், சந்திரன், சப்தமாதர்கள் உள்ளனர்.

இரண்டாம் பிரகாரத்தில் அம்மன், சக்தி விநாயகர் சன்னதி, குளம், நந்தி, பலிபீடம், கொடிமரம் அமைந்துள்ளது.

பிரார்த்தனை

இத்தலத்தில் காமதேனு வழிபட்டுள்ளாள். எனவே நாமும் இங்கு வழிபாடு செய்தால் நூறு மடங்கு பலன் கிடைக்கும் என புராணம் கூறுகிறது.

விவசாயம் செழிக்க பிரார்த்தனை செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து பொங்கல் நைவேத்தியம் படைக்கின்றனர்.

தலபெருமை:

முறையற்ற யாகம் செய்ததற்காக தனக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை நினைத்து தக்கன் ஓலமிட்டதாலும், இத்தலத்தின் தலவிருட்சம் தக்கோலம் என்பதாலும் இத்தலத்திற்கு “தக்கோலம்’ என பெயர் வந்ததாக கூறுவர்.

இத்தலத்தில் உள்ள நந்தியின் வாயிலிருந்து எப்போதும் நீர் வழிந்து வந்ததாலும், இறைவனது திருவடியிலிருந்து நீர் சுரப்பதாலும் இத்தலத்திற்கு “திருவூறல்’ என்ற பெயர் ஏற்பட்டது.

தெட்சிணாமூர்த்தி சிறப்பு: கோஷ்டத்திலுள்ள யோக தெட்சிணா மூர்த்தி, கல்லால மரத்தின்கீழ் ஒரு காலை மடித்து பீடத்தில் இருத்திக்கொண்டு, வலது காலை கீழே தரையில் வைத்து உத்கடி ஆசன நிலையில் அமர்ந்துள்ளார். இந்த ஆசனம் மனதைக் கட்டுப்படுத்துவதாகும். மனம் அலைபாயும் மாணவர்கள் இவரை வணங்கலாம். ஒரு கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரையும் உள்ளது. காலடியில் முயலகன் இல்லை. இவர் தலையை இடதுபுறம் சாய்த்து, மாணவர்களை அடக்கி ஆளும் ஆசிரியர் போன்ற பாவனையில் இருக்கிறார். இந்த அபூர்வ கோலத்தை வேறெங்கும் காணமுடியாது.

வித்தியாசமான கோமுகி: சிவன் சன்னதியிலிருந்து அபிஷேக தீர்த்தம் வெளியேறும் கோமுகி, பூதகணத்தின் முகமாக வித்தியாசமாக உள்ளது. வெளிப்பிரகாரத்தில் நின்ற நிலையில் காட்சி தரும் கிரிராஜ கன்னிகாம்பாளை தரிசித்து விட்டுதான் சுவாமியை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள துர்க்கை சாந்தமே வடிவ மாக அருள் செய்கிறாள். இத்தலத்தை “திருவூறல்’ என நாவுக்கரசரும், சுந்தரரும் பாடியுள்ளனர். இவ்வூரில் ஏழு சிவாலயங்கள், ஏழு விநாயகர் கோயில்கள், ஏழு கிராம தேவதை கோயில்கள் உள்ளன.

தல வரலாறு:

தேவகுருவான பிரகஸ்பதியின் தம்பி உததி முனிவர் தன் நோய் நீங்க, சிவனை வழிபட, நந்தி தேவர் தன் வாய் வழியாக கங்கையை பாயவிட்டார். அது இங்குள்ள சிவலிங்கத்தைச் சுற்றி வந்து, மற்றொரு நந்தியின் வாயிலிருந்து வெளியேறியது. அதில் நீராடி சிவனை வழிபட்ட முனிவர் நோய் நீங்கப்பெற்றார். ஜலம்(தீர்த்தம்) சூழ்ந்து சென்றதால் சிவன் “ஜலநாதீஸ்வரர்’ என பெயர் பெற்றார். தற்போது இதுபோல் தண்ணீர் வரவில்லை. (கங்கோத்பத்தி போன்ற புராதன பூஜை முறைகளைக் கடைபிடித்தால் மீண்டும் தண்ணீர் வர வாய்ப்புண்டு என்கிறார்கள்)

தட்சன் நடத்திய யாகத்திற்கு அவனது மகள் தாட்சாயணி (பார்வதி) சென்ற போது, அவளை அவன் அவமானப்படுத்தினான். சிவன் தட்சனின் தலையை அறுத்தார். அவனும், தன் சொல் மீறி சென்ற பார்வதியும் பூலோகத்திலுள்ள க்ஷீர நதிக்கரையில் (பாலாறு) தன்னை நினைத்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி, தட்சன் சிவனை வழிபட்டு ஆட்டுத்தலை பொருத்தப் பெற்றான். தட்சன் தனக்கு தலை வேண்டி ஓலமிட்டு (சப்தமிட்டு) வழிபட்டதாலும், தலையிழந்த அவனுக்கு ஆட்டுத்தலை கொடுத்து தக்க கோலத்தை கொடுத்ததாலும் இவ்வூர் “தக்கோலம்’ என்று பெயர் ஏற்பட்டது.

தாட்சாயணி இங்கு வந்த போது, பாலாற்றில் பெருவெள்ளம் சென்றது. அவள் நதிக்கரையில் உள்ள மணலை அள்ளி லிங்க வடிவமாக்கி வழிபட்டாள். தியானத்தில் இருந்தபோது வெள்ளம் லிங்கத்தை சூழ்ந்தது. லிங்கத்தை காப்பாற்றுவதற்காக அவள் அதனை அணைத்துக் கொண்டாள். இந்த லிங்கமே இப்போது இக்கோயிலில் இருக்கிறது. பார்வதி லிங்கத்தை அணைத்த தடமும் லிங்கத்தில் இருக்கிறது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நிறம் மாறும் லிங்கம்: உத்தராயண காலத்தில் இந்த லிங்கம் செந்நிறமாக காட்சி தரும். அப்போது நல்ல மழை பொழிந்து பயிர் செழிக்கும். தட்சிணாயன காலத்தில் இதே லிங்கம் வெண்மையாக மாறும். அப்போது வறட்சி ஏற்பட்டு நிலம் காய்ந்து விடும்.

About the author

Leave a Reply

Your email address will not be published.