மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் | Mangalapureeswarar Temple

அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:மங்களபுரீஸ்வரர், சோபுரநாதர்
உற்சவர்:சோபுரநாதர்
அம்மன்/தாயார்:தியாகவல்லியம்மை, சத்யாயதாட்சி, வேல்நெடுங்கண்ணி
தல விருட்சம்:கொன்றை
தீர்த்தம்:கிணற்று தீர்த்தம்
புராண பெயர்:திருச்சோபுரம், தியாகவல்லி
ஊர்:திருச்சோபுரம்
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

விடை அமர்ந்து வெண்மழு ஒன்று ஏந்தி விரிந்து இலங்கு சடை ஒடுங்கத் தண்புனலைத் தாங்கியது என்னை கொலாம் கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்தத் தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுரம் மேயவனே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டுத்தலங்களில் இது 6 வது தலம்.

திருவிழா:

சிவராத்திரி, திருக் கார்த்திகை, அன்னாபிஷேகம், பங்குனி உத்திரம்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது. தெட்சிணாமூர்த்தி சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றுமொரு சிறப்பம்சம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 217 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 8.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு மங்களபுரீஸ்வரர் (சோபுரநாதர்) திருக்கோயில், திருச்சோபுரம் – 608 801 தியாகவல்லி, கடலூர் மாவட்டம்.

போன்:

+91-94425 85845

பொது தகவல்:

பிரகாரத்தில் சுப்பிரமணியர், கஜலட்சுமி, வீரட்டேஸ்வர லிங்கம், கண்ணப்பர், திரிபுவனசக்கரவர்த்தி , அவர் மனைவி வழிபட்ட லிங்கம், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் முதலிய சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனை

இசைப்பயிற்சி மாணவர்கள் இங்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

திருமணத் தடை உள்ளவர்களும், நோயால் அவதிப்படுபவர்களும் சுவாமிக்கு குளியல் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

மஞ்சள் குங்கும வழிபாடு: இத்தலத்தில் சோபுரநாதர், சதுர வடிவ பீடத்தின் மீது, மணல் லிங்கமாக காட்சி தருகிறார். லிங்கத்தின் மேல் பகுதியிலுள்ள சிறிய உருண்டை போன்ற அமைப்பை, கங்காதேவியின் வடிவம் என்கிறார்கள். லிங்கத்தை அகத்தியர் அமைத்தபோது ஏற்பட்ட கைதடமும் இருக்கிறது. மஞ்சளும், குங்குமமும் அம்பாள் வழிபாட்டிற்கு உரியது. ஆனால், திருமணத் தடை உள்ளவர்களும், நோயால் அவதிப்படுபவர்களும் சுவாமிக்கு குளியல் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுகின்றனர்.

அகத்தியர் அமைத்த லிங்கத்திலேயே அம்பாள் ஐக்கியமாகி விட்டதாகவும், அதன் காரணமாக சிவலிங்கத்துக்கு மஞ்சள், குங்கும வழிபாடு நடப்பதாகவும் ஐதீகம். இதனால், சுவாமிக்கு “மங்கள புரீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. பிற்காலத்தில் அம்பாளுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவளை “சத்யாயதாட்சி’ என்கின்றனர்.

தெட்சிணாமூர்த்தி சிறப்பு: சில தலங்களில் கையில் வீணை ஏந்தியபடி இசைக்கு அதிபதியாக காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இசையின் வடிவமாகவே அருளுகிறார். இவரது சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தெட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார்.

இசைப்பயிற்சி மாணவர்கள் இங்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர். இவர் ஞானம், அமைதி மற்றும் இசைக்கு அதிபதியாக இருப்பதாலும், மூலவர் சோபுரநாதர் மங்களம் தருபவராக இருப்பதாலும் இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றுமொரு சிறப்பம்சம்.

புதைந்த கோயில்: வங்கக்கடலின் கரையில் அமைந்த கோயில் இது. கடலே இத்தலத்தின் தீர்த்தம் ஆகும். மூலஸ்தானத்தில் சுவாமி மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

திருஞானசம்பந்தர் சுவாமியை வணங்கி, பதிகம் பாடியுள்ளார். கோஷ்டத்தின் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு இருபுறமும் மகாவிஷ்ணு, பிரம்மா இருவரும் அவரை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். மும்மூர்த்திகளின் இந்த தரிசனம் விசேஷமானது. பிரகாரத்தில் கண்ணப்பநாயனார் காட்சியளிக்கிறார். இக்கோயில் பல்லாண்டுகளுக்கு முன்பு கடல் சீற்றத்தால் மணலால் மூடப்பட்டு விட்டது. பிற் காலத்தில் சிவபக்தர் ஒருவர் இத்தலத்தை பற்றி அறிந்து சுவாமியை தரிசனம் செய்ய வந்தார். ஆனால் இங்கு கோயில் இல்லை. ஓரிடத்தில் கோபுர கலசத்தின் நுனி மட்டும் தெரிந்தது. அதன்பின், ஊர்மக்கள் மணலை அகற்றி இக் கோயிலை வெளிக்கொண்டு வந்தனர்.

தல வரலாறு:

கயிலாயத்தில் சிவன், அம்பாள் திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த தென்திசை வந்தார் அகத்தியர். அவர் வரும் வழியில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வங்கக்கடற்கரை வழியாக சென்றபோது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிவனிடம் தன் வலி தீர்க்க முறையிட விரும்பி, கடல் மணலால் லிங்கம் அமைக்க முயன்றார். ஆனால், எவ்வளவு முயன்றும் லிங்கத்தை சரியாக அமைக்க முடியவில்லை.

சிவன் தன்னை சோதிப்பதை உணர்ந்த அகத்தியர், அருகிலிருந்த மூலிகை செடிகளை பறித்து, அதன் சாறை மணலில் சேர்த்தார். அக்கலவையால் லிங்கம் அமைத்து வணங்கினார். வலி நீங்கியது. இந்த லிங்கம் இருந்த இடத்தில், பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

விஞ்ஞானம் அடிப்படையில்: தெட்சிணாமூர்த்தி சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது.

About the author

Leave a Reply

Your email address will not be published.