செங்கண்மால் திருக்கோயில் | Senganmal Ranganathar Temple

அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில்

மூலவர்:செங்கண்மால், பள்ளிகொண்ட ரங்கநாதர்,
அம்மன்/தாயார்:செங்கமல வல்லி
தீர்த்தம்:சூரிய புஷ்கரிணி
ஊர்:திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்

சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்துளென் செங்கண்மாலை கூரணிந்த வேல்வலவன் ஆலிநாடன் கொடிமாட மங்கையர்கோன் குறையலாளி பாரணிந்த தொல்புகழோன் கலியன் சொன்ன பாமாலை யிவையைந்து மைந்தும் வல்லார் சீரணிந்த உலகத்து மன்னராகிச் சேண்விசும்பில் வானவராய்த் திகழ்வார் தாமே.

-திருமங்கையாழ்வார்

திருவிழா:

கைகுண்ட ஏகாதசி

தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இத்தலம் மட்டும் தான் அம்பலம் என அழைக்கப்படுகிறது.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 37 வது திவ்ய தேசம்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு செங்கண்மால் ரங்கநாதர் திருக்கோயில், திருத்தெற்றியம்பலம், திருநாங்கூர் – 609 106. நாகப்பட்டினம் மாவட்டம்

போன்:

+91- 4364 – 275 689

பொது தகவல்:

இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சயன கோலத்தில் நான்கு புஜங்களுடன் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் வேத விமானம் எனப்படும்.சிவன், செங்கமல நாச்சியார் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர். கருவறையில் லட்சுமி நாராயணர், ஸ்ரீதேவி, பூமாதேவி, சக்கரத்தாழ்வார், சந்தானகோபால கிருஷ்ணன் ஆகியோரும் அருள்பாலிகின்றனர்.செங்கமலவல்லி தாயார் தனி சன்னதியில் உள்ளார். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி12 ஆழ்வார்கள், அனுமன், சக்கரத்தாழ்வார் ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.

பிரார்த்தனை

இத்தல பெருமாளை வணங்கினால் அரசாளும் வல்லமை கிடைக்கும் என்பதும், அரசு பதவிகள் சம்பந்தப்பட்ட பிரார்த்தனைகள் உடனுக்குடன் நிறைவேறுகிறது என்பதும் நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு பொங்கல் படைத்து, துளசி அர்ச்சனை செய்து வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இத்தலம் மட்டும் தான் “அம்பலம்’ என அழைக்கப்படுகிறது. திருநாங்கூரில் “பள்ளிகொண்ட பெருமாள் கோயில்’ என்றால் தான் அனைவருக்கும் தெரியும். திருநாங்கூர் வந்த 11 பெருமாள்களில், இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆவார். இவரை வணங்கினால் ஸ்ரீரங்கம் பெருமாளை வணங்கியதற்கு சமம். கிழக்கு பார்த்த இத்தலத்தில் பெருமாள் ஆதிசேஷன் மீது நான்கு புஜங்களுடன் பள்ளி கொண்ட பெருமாளாக அருள்பாலிக்கிறார். தலையும், வலது கையும் மரக்கால் மேல் வைத்து கொண்டு, இடது கரத்தை இடுப்பின் மீது வைத்து கீழே தொங்கவிட்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவரது தலைப்பக்கம் ஸ்ரீதேவியும், பாதத்தில் பூமாதேவியும் வீற்றிருக்கின்றனர்.

தல வரலாறு:

இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை தூக்கி கொண்டு பாதாள உலகத்தில் மறைத்து வைத்து விட்டான். தேவர்கள், முனிவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவரும் பூமியை காப்பாற்றுவதற்கு வராக அவதாரம் எடுக்க சம்மதித்தார். இதை கேட்டவுடன் மகாலட்சுமி,””பகவானே! நான் ஒரு நொடி கூட உங்களை விட்டு பிரியாமல் தங்களது மார்பில் குடியிருப்பவள். நீங்களோ என்னை விட்டு வராக அவதாரம் எடுக்கபோவதாக கூறுகிறீர்கள். நான் எப்படி தனியாக இருப்பது,”என வருத்தப்பட்டாள். இதே போல் ஆதிசேஷனும், “”பரந்தாமா! நீங்கள் பூமியை காக்க பாதாள உலகம் சென்று விட்டால் என் கதி என்னாவது?” என வருத்தப்பட்டார். இதைக்கேட்ட பெருமாள், “”பயப்படாதீர்கள். எல்லாம் நன்மைக்கு தான். நீங்கள் இருவரும் “பலாசவனம்’ சென்று என்னை தியானம் செய்ய புறப்படுங்கள். அங்கே சிவபெருமானும் வருவார். நான் இரண்யாட்சனை வதம் செய்து விட்டு உங்களுக்கு அனுக்கிரகம் செய்ய அங்கு வந்து விடுகிறேன்,” என்றார். அத்துடன் கலியுகத்தில் இத்தலம் “திருத்தெற்றியம்பலம்’ என அழைக்கப்படும். என் தீவிர பக்தரான ஸ்ரீபாஷ்யகாரர், தீட்சை பெற்ற 108 வைஷ்ணவர்களை அழைத்து என்னை ஆராதனை செய்ய இருக்கிறார். நான் அங்கிருந்து உலகத்தை காத்து ரட்சிக்க போகிறேன். கலியுகம் முழுவதும் அங்கேயே நித்தியவாசம் செய்ய போகிறேன்,” என்றருளினார். வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, பாதாள உலகிற்கு சென்று இரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டு அது இருக்க வேண்டிய இடத்தில் மெல்ல சுழல விட்டார். இதையறிந்த மகாலட்சுமியும், ஆதிசேஷனும் பூமிக்கு வந்து மகாவிஷ்ணு குறித்து தவம் செய்ய ஆரம்பித்தனர். மகாவிஷ்ணு தான் கொடுத்த வாக்குப்படி பலாசவனம் (திருத்தெற்றியம்பலம்) சென்று அங்கிருந்த சிவன், மகாலட்சுமி, ஆதிசேஷனுக்கு அருள்புரிந்தார். பின் அங்கேயே போர்புரிந்த களைப்பு தீர, சிவந்திருந்த அழகான கண்களுடன் பள்ளி கொண்டார். இதனால் இத்தல பெருமாள் “செங்கண்மால் ரங்கநாதர்’ என்றழைக்கப்படுகிறார்.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *