வேதராஜன் திருக்கோயில் | Vedharajan Temple

அருள்மிகு வேதராஜன் திருக்கோயில்

மூலவர்:வேதராஜன்
உற்சவர்:கல்யாண ரங்கநாதன்
அம்மன்/தாயார்:அமிர்த வல்லி
தீர்த்தம்:இலாக்ஷ புஷ்கரிணி
ஊர்:திருநகரி
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

மங்களாசாசனம்

குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார்

திருநகரி ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே! வாலியைக் கொன்று அரசு இளையவானரத்துக்கு அளித்தவனே! காலின் மணிகரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே! ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ.

-குலசேகராழ்வார்

திருவிழா:

வைகாசி சுவாதி 10 நாள் திருவிழா, ஆவணி பவித்ர உற்சவம், தை 12 கருட சேவை, பங்குனி உத்திரம், மாத சுவாதி, பிரதோஷம்.

தல சிறப்பு:

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 35 வது திவ்ய தேசம். மேற்கு பார்த்து வீற்றிருந்த திருக்கோலம்

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு வேதராஜன் திருக்கோயில், திருநகரி-609 106 நாகப்பட்டினம் மாவட்டம்

போன்:

+91-4364-256 927, 94433 72567

பொது தகவல்:

தரிசனம் கண்டவர்கள்: பிரஜாபதி, திருமங்கையாழ்வார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டாட்சர விமானம் எனப்படும்.

பிரார்த்தனை

ஞானம், செல்வம் வேண்டுவோர் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம்செய்து, வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

தலபெருமை:

திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார். இவருக்கு எதிரே ஒரு கொடிமரமும், பெருமாளுக்கு எதிரே ஒன்றும் என இரண்டு கொடி மரங்கள் உள்ளன.

தல வரலாறு:

பிரம்மாவின் புத்திரன் கர்த்தம பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான். இவனுக்கு தரிசனம் தர பெருமாள் தாமதம் செய்ததால், வருத்தமடைந்த லட்சுமி பெருமாளிடம் கோபம் கொண்டு, இத்தலத்தில் குளத்தில் இருந்த தாமரை மலருக்குள் தன்னை ஒளித்து கொண்டாள். பெருமாள் லட்சுமியை தேடி இத்தலம் வந்து லட்சுமியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அருகிலுள்ள திருவாலியிலும் இதேபோல் ஆலிங்கன கோலத்தில் இருப்பதால், இரண்டும் சேர்த்து திருவாலி-திருநகரி ஆனது. திரேதாயுகத்தில் பிரஜாபதி உபரிசிரவஸு மன்னனாக பிறந்தான். இவன் இத்தலத்தின் மீது புஷ்பக விமானத்தில் பறந்து வரும்போது இவ்விடத்தில் பறக்காமல் அப்படியே நின்றுவிட்டது. எனவே, இத்தலம் மிகவும் புண்ணியமானது எனக்கருதி தனக்கு மோட்சம் வேண்டி பெருமாளிடம் தவம் செய்தான். கிடைக்கவில்லை. அடுத்த யுகத்தில் சங்கபாலன் என்ற பெயரில் ஒரு மன்னனின் மந்திரியாகப் பிறந்தான். அப்பிறவியிலும் தனக்கு மோட்சம் கேட்க, பெருமாள் கலியுகத்தில் கிடைக்கும் என கூறினார். கலியுகத்தில் நீலன் என்ற பெயரில் ஒரு படைத்தலைவனின் மகனாக பிறந்தான். இவன் திருவாலியில் வசித்த குமுதவல்லி நாச்சியாரை திருமணம் செய்ய நினைத்தான். அவள்,””ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்தால் நான் உங்களுக்கு மனைவியாவேன்,’ என்று நிபந்தனை விதித்தாள். இந்த அன்னதானத்திற்கு பொருள் தீர்ந்த பிறகு நீலன் வழிப்பறியில் ஈடுபட்டான். அந்த நேரத்தில் பெருமாள் லட்சுமியை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது நீலன் மறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் நீலனின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.இவ்வாறு திருவாலியின் வரலாற்றிற்கும் திருநகரியின் வரலாற்றிற்கும் ஒரே வரலாறு உள்ளது

About the author

Leave a Reply

Your email address will not be published.