அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் | Azhagia Singa Perumal Temple

அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில்

மூலவர்:முகுந்த நாயகன், அழகிய சிங்கர்
அம்மன்/தாயார்:வேளுக்கை வல்லி
தீர்த்தம்:கனக சரஸ், ஹேமசரஸ்
புராண பெயர்:திருவேளுக்கை, வேளுக்கை
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

மங்களாசாசனம்

பேயாழ்வார்

விண்ணகரம் வெஃகா விரிதிரை நீர் வேங்கடம் மண்ணகரம் மாமாட வேளுக்கை மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு.

-பேயாழ்வார்

திருவிழா:

வைகுண்டா ஏகாதசி

தல சிறப்பு:

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 47 வது திவ்ய தேசம்.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் கோயில், காஞ்சிபுரம்-631501 காஞ்சிபுரம் மாவட்டம்.

போன்:

+91- 44 6727 1692, 98944 15456

பொது தகவல்:

நரசிம்மரின் மேல் உள்ள விமானம் கனக விமானம். இந்த பெருமாளை பிருகு முனிவர் தரிசனம் செய்துள்ளார். கோயில் சுற்றுப்பிரகாரத்தில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். நரசிம்மருக்கு எதிரில் உள்ள கருடாழ்வார் நரசிம்மரின் உக்கிரம் தாளாது சற்றே தலை சாய்த்து பயத்துடன் இருப்பது மிகவும் அதிசய அமைப்பாகும்.

பிரார்த்தனை

துன்பங்கள் விலக பெருமாளிடம் பிரார்த்திக்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றுகின்றனர்.

தலபெருமை:

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்று. புராண வரலாற்றின் படி பிருகு முனிவருக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீகம். பேயாழ்வார் இத்தலத்தினை, உப்பிலியப்பன் கோயில், கும்பகோணம், திருப்பதி போன்ற தலங்களுக்கு இணையாகப் பாடியுள்ளார். இதிலிருந்து இத்தலத்தின் சிறப்பை அறியலாம். ஆழ்வார்களைத் தவிர சுவாமி தேசிகனும் இப்பெருமாளை “காமாஸீகாஷ்டகம்’ என்ற ஸ்லோகத்தால் போற்றியுள்ளார். இதை தினமும் பாராயணம் செய்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும். இதனை “காமாஷிகா நரசிம்ம சன்னதி’ என்றும் அழைப்பார்கள்.

தல வரலாறு:

திருமாலின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுகிற அவதாரம் நரசிம்ம அவதாரம். பெருமாளின் காக்கும் குணம் உடனே வெளிப்பட்ட அவதாரம். பக்தனின் வார்த்தையை பகவான் உடனே காப்பாற்றிய அவதாரம். “வேள்’ என்ற சொல்லுக்கு “ஆசை’ என்று பொருள். இரணியனை வதம் செய்த பின் பகவான் நரசிம்மர் அமைதியை விரும்பினார். அவர் இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் “வேளிருக்கை’ என்றாகி, காலப்போக்கில் “வேளுக்கை’ என்றாகி விட்டது. ஒருமுறை பிரம்மா யாகம் செய்த போது யாகத்தை அழிக்க அரக்கர்கள் வந்தனர். பிரம்மா பெருமாளிடம் இந்த யாகம் சிறப்பாக நடக்க அருள்புரியுமாறு வேண்டினார். பிரம்மாவின் வேண்டுதலை ஏற்றார் பெருமாள். முன்பு பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த அதே திருக்கோலத்துடன் “ஹஸ்திசைலம்’ என்ற குகையிலிருந்து புறப்பட்டு வேள்வியை அழிக்க வந்த அசுரர்களை விரட்டினார். அவர்கள் காஞ்சியில் இந்த இடத்தில் காணாமல் போய்விட்டார்கள். அங்கேயே மேற்கு நோக்கி அமர்ந்து யோக நரசிம்மராகி விட்டார். இவருக்கு ஆள் அரி, முகுந்த நாயகன் என்ற திருநாமங்களும் உண்டு.

About the author

Leave a Reply

Your email address will not be published.