இமையவரப்பன் திருக்கோயில் | Imayavarappan Temple

அருள்மிகு இமையவரப்பன் திருக்கோயில்

மூலவர்:இமையவரப்பன்
அம்மன்/தாயார்:செங்கமலவல்லி
தீர்த்தம்:சங்க தீர்த்தம், சிற்றாறு
புராண பெயர்:திருச்செங்குன்றூர்
ஊர்:திருச்சிற்றாறு
மாவட்டம்:ஆலப்புழா
மாநிலம்:கேரளா

பாடியவர்கள்:

மங்களாசாசனம்

நம்மாழ்வார்

எங்கள் செல்சார்வு யாமுடையமுதம் இமையவரப்பன் என்னப்பன் பொங்கு மூவுலகும் படைத்தளித்தழிக்கும் பொருந்து மூவுருவன் எம்மருவன் செங்கயலுகளும் தேம்பனை புடைசூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு அங்கு அமர்கின்ற ஆதியானல்லால் யாவர் மற்று என் அமர்துணையே.

-நம்மாழ்வார்

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி, திருவோணம்

தல சிறப்பு:

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 72 வது திவ்ய தேசம்.மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு. சிவனுக்கு இத்தல பெருமாள் தரிசனம் தந்துள்ளார். மூலவரின் விமானம் ஜெகஜோதி விமானம் எனப்படும்.

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு இமையவரப்பன் திருக்கோயில், திருச்சிற்றாறு – 689 121, ஆலப்புழா மாவட்டம் , கேரளா மாநிலம்.

போன்:

+91- 479 – 246 6828

பொது தகவல்:

கோயிலின் சுற்றுப்பிரகாரங்களில் அமைந்துள்ள விளக்குகளில் வர்ணம் பூசப்பட்டு வரிசையாக இருப்பது பார்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.

பிரார்த்தனை

தவறு செய்தவர்கள் வருந்தி மன்னிப்பு கேட்டால் உடனே மன்னிப்பு கிடைக்கும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் செய்தல்

தலபெருமை:

இக்கோயில் அமைந்துள்ள நகரத்தின் பெயர் செங்குன்றூர். கோயிலின் அருகே பாயும் நதியின் பெயர் சிற்றாறு. பெருமாளின் திருநாமம் இமையவரப்பன். நம்மாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்யும் போது மூன்று பெயர்களையும் பாடலில் உபயோகித்துள்ளார்.

தல வரலாறு:

பாரதப்போரில் தன் குருவான துரோணாச்சாரியாரை கொல்வதற்காக தர்மன் ஒரு பொய் கூறினான். அஸ்வத்தாமன் என்பவன் துரோணரின் மகன். இவன் இறந்து விட்டான் என சொன்னால், துரோணர் நிலை குலைந்து விடுவார் என்பது திட்டம். தர்மன் உண்மையை மட்டுமே சொல்வான் என்பதால், அவனை விட்டு அஸ்வத்தாமன் என்ற சொல்லை பலமாக சொல்லி (அஸ்வத்தாமன் என்ற) யானை இறந்து விட்டது என்ற சொல்லை மிக மெல்லிய சப்தத்தில் கூற செய்தனர். இதனால் போரில் துரோணாச்சாரியர் கொல்லப்பட்டார். தான் சொன்ன பொய்யினால் தான் துரோணர் கொல்லப்பட்டார். அவரது இறப்புக்கு தானே காரணம் என நினைத்து, நினைத்து தர்மன் மனம் வருந்தினான். பின் போர் முடிந்த பிறகு மன அமைதிக்காக இத்தலத்திற்கு வந்து தவம் இருந்ததாகவும், கோயிலை புதுப்பித்தாகவும் கூறப்படுகிறது. தர்மர் இத்தலம் வந்து வழிபாடு செய்வதற்கு முன்பே இமையவர்கள் (தேவர்கள்) இங்கு வந்து திருமாலைக்குறித்து தவம் இருந்தனர். இவர்களது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், தந்தைக்கு நிகராக தரிசனம் கொடுத்தார். இதனால் தான் இத்தல பெருமாள் “இமையவரப்பன்’ என அழைக்கப்படுகிறார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *