திருவித்துவக்கோடு உய்யவந்தபெருமாள் திருக்கோயில் | Uyyavandha Perumal Temple

அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில்

மூலவர்:உய்யவந்த பெருமாள்(அபயப்ரதன்)
அம்மன்/தாயார்:வித்துவக்கோட்டு வல்லி (பத்மாஸனி நாச்சியார்)
தீர்த்தம்:சக்கரதீர்த்தம்
புராண பெயர்:திருமிற்றக்கோடு
ஊர்:திருவித்துவக்கோடு
மாவட்டம்:பாலக்காடு
மாநிலம்:கேரளா

பாடியவர்கள்:

மங்களாசாசனம்

குலசேகராழ்வார்

தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை விரைகுழவும் மலர்பொழில் சூழ் வித்துவக் கோட்டம்மானே! அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள்நினைந்தே அழுங்குழவி அதுவே போல் இருந்தேனே!

-குலசேகராழ்வார்

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி, திருவோணம்

தல சிறப்பு:

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 67 வது திவ்ய தேசம்.அம்பரீஷ மகராஜவுக்கு தரிசனம் கொடுப்பதற்காக பெருமாள் இத்தலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியிருப்பதாக தல புராணம் கூறுகிறது.

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு- 679 303 (திருவிச்சிக்கோடு), பாலக்காடு மாவட்டம், கேரளா மாநிலம்

போன்:

+91- 98954 03524

பொது தகவல்:

இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் தமிழ் பேசுகின்றனர். கோயில் சுவர்களில் அமைந்துள்ள அழகிய சுதைச்சிற்பங்களும், சிற்ப வேலைப்பாடுகளும், அர்ஜுனன் தவம் செய்த காட்சி, கிருஷ்ண லீலா காட்சிகள் போன்றவை மிகவும் அற்புதமாக உள்ளது.

பிரார்த்தனை

கேரள மாநில மக்கள் பெரும்பாலானோர் இத்தலத்தில் தான் பித்ரு தர்ப்பணம் கொடுக்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு தீபம் ஏற்றி துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

தலபெருமை:

காசிவிஸ்வநாதரே இங்கு எழுந்தருளியிருப்பதாலும், பத்து நதிகள் ஒன்றாக இணையும் பாரதப்புழா நதிக்கரையில் கோயில் அமைந்திருப்பதாலும் இத்தலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்ததாகும். பெருமாள் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் விமானம் தத்வகாஞ்சன விமானம் ஆகும். அம்பரீஷன், பஞ்சபாண்டவர்கள் ஆகியோர் பெருமாளை தரிசித்துள்ளனர்.

தல வரலாறு:

மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தென்னிந்திய பகுதிக்கு வந்தபோது இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தை கண்டனர். அங்கிருந்த அழகும், தெய்வீகம் கலந்த அமைதியும் கண்ட அவர்கள் சில காலம் அங்கேயே தங்க முடிவு செய்தனர். அந்த நேரத்தில் தினமும் பூஜை செய்வதற்காக கோயில் கட்டி சிலைகளை அமைத்தனர். முதலில் அர்ஜுனன் மகாவிஷ்ணுவின் சிலையை அமைத்தான். இதுவே மூலஸ்தானமாக கருதப்படுகிறது. சுற்றுப்பகுதியில் தர்மர் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும், நகுல சகாதேவர் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும், பீமன் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும் அருள்பாலிக்கிறார்கள். கோயிலில் நுழைந்தவுடன் கணபதியும் தெட்சிணாமூர்த்தியும் வீற்றிருக்கின்றனர். சாஸ்தா, நாகர், பகவதி தேவிக்கு தனித்தனி சன்னதி உள்ளது. பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தங்களது வன வாசத்தில் பெரும்பாலான நாட்களில் இங்கேயே தங்கி பூஜை செய்ததாக கூறப்படுகிறது. வெகு காலத்திற்கு பின் பாண்டிய மன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது. நெடுங்காலமாகவே இக்கோயிலில் பெருமாள் வழிபாடு மட்டுமே இருந்து வந்தது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்கு சென்று, அங்கேயே தங்கி வெகுகாலம் வாழ்ந்திருந்தார். அப்போது அவரது தாயாரின் உடல் நிலை மோசமாகி இறக்கும் நிலையில் இருப்பதாக தகவல் வந்தது. இதைக்கேள்விப்பட்ட அவர் காசியிலிருந்து தன் தாயை பார்க்க புறப்பட்டார். அவர் கிளம்பும் போது, இவரது பக்தியின் காரணமாக காசி விஸ்வநாதரும், முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறப்படுகிறது. முனிவர் வரும் வழியில் இந்த கோயிலை கண்டு, தனது குடையை இத்தலத்தில் வைத்து விட்டு குளிக்க சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்த போது குடை வைத்திருந்த பலிபீடம் வெடித்து சிதறி அதிலிருந்து ஒரு சிவலிங்கம் தோன்றியிருப்பதையும், குடை மறைந்து விட்டதையும் கண்டார். காசியிலிருந்த விஸ்வநாதரே, பஞ்சபாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த இத்தலத்தில் தங்குவதற்கு வந்து விட்டதாகவும், இதற்கு அந்த முனிவர் காரணமாக இருந்ததாகவும் கூறுவர். மூலவரை தரிசிக்கும் முன் இந்த சிவலிங்கத்தை தரிசித்து செல்லவேண்டும். கேரளாவில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இத்தலம் விளங்குகிறது. இத்தலத்ததை இப்பகுதி மக்கள் “ஐந்து தல மூர்த்தி தலம்’ என அழைக்கின்றனர்.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *