திருநீரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் | Ulagalanda Perumal Temple

அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்

மூலவர்:திருநீரகத்தான்
உற்சவர்:ஜெகதீசப்பெருமாள்
அம்மன்/தாயார்:நிலமங்கை வல்லி
தீர்த்தம்:அக்ரூர தீர்த்தம்
புராண பெயர்:திருநீரகம்
ஊர்:திருநீரகம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்

நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி

ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய்

உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்

காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா

காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு

பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்

பெருமானுன் திருவடியே பேணினேனே.

-திருமங்கையாழ்வார்

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி

தல சிறப்பு:

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 48 வது திவ்ய தேசம். இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திருநீரகம், காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.

போன்:

+91- 94435 97107, 98943 88279

பொது தகவல்:

இத்தல இறைவன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஜெகதீஸ்வர விமானம் எனப்படும். இத்தல இறைவனை அக்ரூரர் தரிசனம் செய்துள்ளார்.

பிரார்த்தனை

ஆணவம் நீங்க வழிபாடு செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருநீரகம் எனப்படும். இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே உள்ள திவ்ய தேசம் ஆகும். இந்த கோயிலின் உள்ளேயே திருஊரகம், திருக்காரகம், திருகார்வானம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு. ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

தல வரலாறு:

“நீரகத்தாய்’ என்று பாடலில் முதற்சொல்லாகவே திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த “திருநீரகம்’ முன் காலத்தில் எங்கிருந்ததென இதுவரை யாருக்கும் தெரியவில்லை. உற்சவரே மூலவரின் இடத்திலிருந்து அருள்பாலிக்கிறார். பெருமாள் நீர்மைத் தன்மை கொண்டவன். நீரிடை மீனாக அவதாரம் செய்தவன். நீர் மேல் அமர்ந்து அதையே இருப்பிடமாக கொண்டவன். பிரளய காலத்தின் போது இந்த பூமி நீரால் சூழ, அதன் மீது ஆலிலை கண்ணனாக மிதப்பவன். எனவே பெருமாளை நீரகத்தான் என திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆனால் இந்த தலம் எங்கிருந்தது என்று மட்டும் அவர் யாருக்கும் சொல்லவில்லை. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்த மூன்று தலங்களும் “திருஊரகத்துடன்’ வந்து விட்டதா?. அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.

About the author

Leave a Reply

Your email address will not be published.