மதுரை கூடலழகர் திருக்கோயில் | Koodalazhagar Temple

மதுரை கூடலழகர் திருக்கோயில்

மூலவர்:கூடலழகர்
உற்சவர்:வியூகசுந்தரராஜர்
அம்மன்/தாயார்:மதுரவல்லி, மரகதவல்லி, வகுளவல்லி, வர குணவல்லி
தல விருட்சம்:கதலி
தீர்த்தம்:ஹேமபுஷ்கரிணி.
புராண பெயர்:திருக்கூடல்
ஊர்:மதுரை
மாவட்டம்:மதுரை
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்

பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மங்களாசாஸனம்

அடியோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

-பெரியாழ்வார்

திருவிழா

வைகுண்ட ஏகாதசி , நவராத்திரி

தல சிறப்பு

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு’ என்ற “திருப்பல்லாண்டு’ பாடல் இயற்றப்பட்ட தலம் மதுரை. இவ்வூரில் கூடலழகர் என்ற பெயரில் பெருமாள் அருளுகிறார். மார்கழி மாதத்தில் இத்தலத்தை தரிசிப்பது சிறப்பு. அஷ்டாங்க விமானம் : பெருமாள் கோயில்களில் 96 வகையான விமானங்கள் அமைக்கப்படும். இதில் அஷ்டாங்க விமானம் மிகவும் புண்ணியம் தருவதாகக் கருதப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதிலுள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழுவதில்லை. மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் “ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.

திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை – 625 001 மதுரை மாவட்டம்

போன்

+91- 452 2338542

பொது தகவல்

பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் வகையில் ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜ கோபுரம், எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில் எட்டு பிரகாரங்களுடன் அமைந்த கோயில் இது. ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகம், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், மணவாள மாமுனிகள், விஸ்வக்ஷேனர், ராமர், கிருஷ்ணர், லட்சுமிநாராயணன், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. சூரிய மண்டலத்தில் சூரியன் அஷ்டாங்க விமானத்துடன் கூடிய ரதத்தில் வலம் வருவார். இந்த ரதத்தின் மாதிரி சிற்பம் கோயிலின் சுற்றுச்சுவரில் வடிக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனை

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியறிவிற்காக பிரார்த்தனை செய்கிறார்கள்

நேர்த்திக்கடன்

இங்கு தாயாருக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

தலபெருமை

ஸ்ரீ மதுரவல்லி ஸமேத ஸ்ரீ கூடல் அழகர் மங்களாசாஸனம் மதுரவல்லி மணாளா மங்கலங்கள் நிறைந்தவனே கிருதமாலைக் கரையமர்ந்த கூடல் அழகா மங்கலங்கள்! அடியாரின் துயர்தீர்க்க நீயமர்ந்த கதலிவனம் விடிந்திட்ட பொழுதான பெருமரீளே கூடல் அழகா மங்கலங்கள்! அருள்வேண்டி வழிநிற்கும் அடியவரைத் திருக்கையால் அழைத்தருளும் திருமாலே கூடல் அழகா மங்கலங்கள்! அருள்வதற்காய் பாம்பணையில் வீற்றிருந்து காத்தருளும் நெடுமாலே பரமபதநாதா கூடல் அழகா மங்கலங்கள்!

உயர்வேத ஒளியாகி உலகெங்கும் நிறைவாகி நின்றருளும் சூரியநாராயணா கூடல் அழகா மங்கலங்கள்!

இத்தாரையைக் காத்திடவே யோக நித்திரையைக் கொண்டவனே பள்ளிகொண்ட பரந்தாமா கூடல் அழுகா மங்கலங்கள்!

குறை நீக்கும் கோவிந்தா உன் அட்டாங்க விமானம் மறை போற்றும் மாதவா கூடல் அழகா மங்கலங்கள்!

மார்க்கண்டேய மகரிஷியின் தவத்தாலே உருவான எழுகடல் புண்ணிய தீர்த்தத்தின் புருஷாத்தமனே கூடல் அழகா மங்கலங்கள்!

தவம் செய்த காசியப முனிவரின் சேஷதீர்த்தம் முன்தோன்றி வரம்தந்த நெடுமாலே கூடல் அழகா மங்கலங்கள்!

திருவடியின் தாமரையை அடியவர்க்கு உகந்தளிக்கும் சக்கர தீர்த்தம் நீராடித்தினம் தொழவே கூடல் அழகா மங்கலங்கள்!

நற்கதியை அடைந்திட தேவர்களும் நீராடும் மானசரோவம் வினைதீர்க்கும் வித்தகனே திருமாலே கூடல் அழகா மங்கலங்கள்!

பரம்பொருளாய் மறையோர்கள் உனைக்கண்ட பதியாக வரம் தருவாய் வரதராஜா கூடல் அழகா மங்கலங்கள்!

திருமார்பில் திருமகளைக் கொண்டவனே திருமங்கை ஆழ்வாரின் கோயில் கொண்ட கோவலரே கூடல் அழகா மங்கலங்கள்!

பரம் உனக்கே பல்லாண்டு இசைத்திட்ட விட்டுசித்தன் மெய்சிலிர்க்க வந்துநின்ற கருணாகாரா கூடல் அழகா மங்கலங்கள்!

கார்மேகக் கூட்டத்தைக் காத்து நின்று அடியவரின் துயர் தீர்த்துப் புலி காக்கும் புருஷாத்தமா கூடல் அழகா மங்கலங்கள்!

தேவர் முனிவரை காக்கும் உன் சக்ராயுதம் காலநேமியை வதம் செய்த கருடவாகனா கூடல் அழகா மங்கலங்கள்!

மணவாள மாமுனிகள் மனத்திருந்து பூவுலகைக் காத்தருளும் திரிவிக்கிரமா கூடல் அழகா மங்கலங்கள்!

மங்கலங்கள் சொல்லிய மங்கலத்தால் அடியாரின் மனமெல்லாம் அருள் சுரக்கும் மதுசூதனா கூடல் அழகா மங்கலங்கள்!

வெற்றி தரும் பெருமாள்

இங்குள்ள உற்சவர் “வியூக சுந்தர்ராஜன்’ என்று அழைக்கப்படுகிறார். எந்த ஒரு செயலையும் செய்யும்முன்பு, சரியாக திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். இவ்வாறு எதிலும் வெற்றி தரும் அழகராக இவர் திகழ்வதால், இப்பெயரில் அழைக்கப்படுகிறார். இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் போர் புரியச் செல்லும் முன்பு, இவரை வேண்டி வெற்றிக்காக வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனாலும் இப்பெயர் ஏற்பட்டதாகவும் சொல்வர்.

முக்கோல முகுந்தன்

அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது நிலையில், சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களும், அஷ்டதிக் பாலகர்களும், ஓவிய வடிவில் அருளுகின்றனர். இதனால் இந்த சன்னதியை, “ஓவிய மண்டபம்’ என்று அழைக்கிறார்கள். மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருளுகிறார். இவ்வாறு, பெருமாள் இத்தலத்தில் நின்ற, அமர்ந்த, கிடந்த என மூன்று கோலங்களிலும் காட்சி தருகிறார். மேலும் பூவராகர், லட்சுமி நரசிம்மர், நாராயணன், லட்சுமி நாராயணன், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரையும் விமானத்தில் தரிசிக்கலாம். மலைக்கோயில்களில் பவுர்ணமியன்று கிரிவலம் போல், இங்கே பக்தர்கள் விமானத்தை வலம் வருகிறார்கள்.

புலவர் கூடலழகர்

ஒருமுறை மதுரையில் தொடர்ந்து மழை பெய்யவே, மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாயினர். தங்களை மழையிலிருந்து காத்தருளும்படி பெருமாளை வேண்டினர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சுவாமி, நான்கு மேகங்களை ஏவினார். அவை, மதுரையைச் சுற்றி நான்கு மாடங்களாக ஒன்று கூடி, மழையிலிருந்து மக்களை காத்தது. இவ்வாறு, நான்கு மேகங்கள் ஒன்று கூடியதால் இத்தலம், “நான்மாடக்கூடல்’ என்றும், கூடல் மாநகர்’ என்றும் பெயர் பெற்றது. சுவாமியும், “கூடலழகர்’ என்று பெயர் பெற்றார். இந்த பெருமாள் “துவரைக் கோமான்’ என்ற பெயரில் மதுரை தமிழ்ச் சங்கத்தில் புலவராக அமர்ந்திருந்ததாக பரிபாடல் கூறுகிறது. எனவே இவரை, “புலவர் கூடலழகர்’ என்றும் சிறப்பித்துக் கூறுகிறார்கள்.

மீன் சின்னம்

பாண்டிய மன்னர்களின் சின்னம் மீன். இந்த சின்னம் உருவானதற்கு இத்தலத்து பெருமாளே காரணமாவார். முற்காலத்தில் இக்கோயிலைச் சுற்றி இருபுறத்திலும் மாலையிட்டதுபோல, வைகை நதி, கிருதுமால் நதி ஆகியவை ஓடின. இதில் கிருதுமால் நதிசுருங்கி ஓடையாகி விட்டது. பாண்டிய மன்னனான சத்தியவிரதன், இத்தல பெருமாள் மீது அதீத பக்தி செலுத்தினான். ஒரு முறை அவன் கிருதுமால் நதியில் நீராடிய போது, பெருமாள் மீன் வடிவில் தோன்றி உபதேசம் செய்தார். தனக்கு அருளிய சுவாமியின் நினைவாக மீன் சின்னத்தை வைத்துக்கொண்டான்.

தல வரலாறு

பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரருக்கு, பெருமாளை அர்ச்சாவதார (மனித ரூபம்) வடிவில் தரிசிக்க வேண்டுமென ஆசை எழுந்தது. தன் விருப்பம் நிறைவேற, இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவருக்குக் காட்சி தந்தார். பின்பு சனத்குமாரர், தேவசிற்பி விஸ்வகர்மாவை வரவழைத்து தான் கண்ட காட்சியை அப்படியே வடிவமைக்கச் செய்தார். அதை மிக அழகிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டைசெய்தார். அவரே கூடலழகர் எனப்பட்டார். இத்தலம் கிருதயுகத்திலேயே அமைக்கப்பட்டு விட்டது. கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்களிலும் சிறப்புற்று விளங்குகிறது. எனவே இத்தல பெருமாள் யுகம் கண்ட பெருமாள்’ எனப்படுகிறார்.

சிறப்பம்சம்

அதிசயத்தின் அடிப்படையில்

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு’ என்ற “திருப்பல்லாண்டு’ பாடல் இயற்றப்பட்ட தலம் மதுரை. இவ்வூரில் கூடலழகர் என்ற பெயரில் பெருமாள் அருளுகிறார். மார்கழி மாதத்தில் இத்தலத்தை தரிசிப்பது சிறப்பு. அஷ்டாங்க விமானம் : பெருமாள் கோயில்களில் 96 வகையான விமானங்கள் அமைக்கப்படும். இதில் அஷ்டாங்க விமானம் மிகவும் புண்ணியம் தருவதாகக் கருதப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதிலுள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழுவதில்லை. மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் “ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *