விஜயகாந்த் | Vijayakanth

விஜயகாந்த் (Vijayakanth, பிறப்பு: 25 ஆகத்து 1952) ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

இளமைக்காலம்

விஜயகாந்த் என்னும் விஜயராஜ், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால், விஜயகாந்த் மதுரையில் வளர்ந்தார். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் விஜயகாந்த் தனது பதின்ம வயதில் சிறுசிறு பணிகளைச் செய்துவந்தார்.

மண வாழ்க்கை

விஜயகாந்த், 1990 ஆம் ஆண்டில் பிரேமலதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இருமகன்கள் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை

1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றிபெற்றனர். இப்பின்புலத்தில் விஜயகாந்த் தானும் அரசியலில் ஈடுபடும் எண்ணங்கொண்டார். அதனை அவ்வப்பொழுது வெளியிட்டும் வந்தார்.

அரசியல் கட்சி

2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

2006 ஆம் ஆண்டு தேர்தல்

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். இத்தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

2011 ஆம் ஆண்டு தேர்தல்

பின்னர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

2016 ஆம் ஆண்டு தேர்தல்

பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். இவர் அணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அத்தேர்தலில் இவர் உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் இவரும், இவருடைய கூட்டணி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தனர். இவர் போட்டியிட்ட உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில், 34,447 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்

திரைப்பட வாழ்க்கை

இயக்குநர் காஜா ‘விஜயராஜ்’ என்னும் பெயரை விஜயகாந்த் என மாற்றி வைத்தார். திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். தொடர் முயற்சிக்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார்.

முதல் படம்

 ‘இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவருக்கு, அப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.காஜா வைத்த பெயர்தான் விஜயகாந்த்.

இவர் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார். 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்னும் படம் நூறாவது படமாக வெளிவந்து வெற்றியை ஈட்டித் தந்தது. இந்தப் படம் தான் இவருக்கு கேப்டன் என்னும் அடை மொழியைத் தந்தது.

1980-ல் வெளியான ‘தூரத்து இடி முழக்கம்’ திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் விஜயகாந்த். ஆனால் ஓர் அதிரடி நாயகனாக விஜயகாந்த் அறியப்பட்டது 1981-ல் வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் இருந்துதான். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் படமான இது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கண்டது. இதன் இந்திப் பதிப்பில் ரஜினிகாந்தும், தெலுங்குப் பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்தனர். விஜயகாந்த்-எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணி இணைந்து அதே ஆண்டில் ‘சாதிக்கொரு நீதி’, ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ‘நீதி பிழைத்தது’ என மூன்று திரைப்படங்களை வெளியிட்டது. ரஜினிகாந்திற்கு ஒரு எஸ்.பி.முத்துராமன் என்பதுபோல், விஜயகாந்திற்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொல்லலாம். இவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் 17 படங்களில் நடித்திருக்கிறார். இதே போல் ‘சிவப்பு மல்லி’ தந்த வெற்றியால் ராம நாராயணன் இயக்கத்திலும் இவர் 17 படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் கதாநாயகனாக நடித்து 1984-ல் மொத்தம் 18 படங்களும், 1985-ல் 17 படங்களும் வெளியாகின. இன்றுவரை இது அசைக்க முடியாத சாதனையாக உள்ளது. தொடர்ந்து புரட்சிகரமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவந்ததால் 1985-ம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் ‘புரட்சிக்கலைஞர்’ என அழைக்கப்பட்டார்.

இந்தி எதிர்ப்பு

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் பின்நாட்களில் தமிழைத் தவிர வேறு எந்த மொழித் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இத்தனைக்கும் இவரது படங்கள் சில தெலுங்கில் டப்பாகி ஆந்திர தேசத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தன. அங்கிருந்து வாய்ப்புகள் வந்தபோதும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

ரஜினி-கமல் போட்டி

ரஜினி-கமல் போட்டிக்கு நடுவே தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி வெற்றி கண்டவர் விஜயகாந்த். ‘பி’ மற்றும் ‘சி’ சென்டர்களில் விஜயகாந்த் படம் என்றாலே அது ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. இவரது சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் பெருகியதாலோ என்னவோ… அதன்பின்பு பல திரைப்படங்களிலும் சண்டைக்காட்சிகளில்தான் விஜயகாந்தின் அறிமுகமே இருக்கும். சுவரில் கால்களை ஊன்றி எம்பிக்குதித்து எதிரிகளை தனது கால்களால் பந்தாடுவது இவரது ட்ரேட் மார்க்காகவே இருந்தது. கிராமங்களின் ஊர்த் திருவிழாக்களில் ரஜினி-கமல் படங்களைத் திரையிட பெரிய சண்டையே நடக்கும். அந்த நேரத்தில் விஜயகாந்த் திரைப்படம் எதாவது ஒன்றைத் திரையிட்டு கிராமத்தின் மொத்தக் கூட்டத்தையும் சண்டையின்றி உட்கார வைப்பது ஒரு ட்ரிக்காகவே பயன்பட்டு வந்தது.

புதுமுக இயக்குநர்கள்

புதுமுக இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி, திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநராக அறிமுகப்படுத்திய பெருமையும் விஜயகாந்தையே சேரும். ஆபாவானன் – ஆர்.அரவிந்தராஜ் கூட்டணியில் ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’ போன்ற திரைப்படங்களும், ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’ போன்ற வெற்றிப்படங்களை அளித்தவர் விஜயகாந்த். ஒருகாலத்தில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் நேராகக் கதை சொல்லும் இடமாக விஜயகாந்தின் அலுவலகம்தான் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் கதாபாத்திம்

போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆக்ஷன் ஹீரோ ஆக முடியாது என்பது கோலிவுட்டில் எழுதப்படாத விதி. அந்த வகையில் போலீஸ், ராணுவம் என யூனிஃபார்ம் அணிந்து நியாயத்திற்காகப் போராடும் கதாபாத்திரத்தில் அதிகம் நடித்தவர் விஜயகாந்த் தான். இன்றும் போலீஸ் வேடமென்றால் தமிழ் ரசிகர்களின் மனதில் முதலில் வந்து நிற்பது விஜயகாந்தாகத்தான் இருக்கும். தனது 100-வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் ‘கேப்டன்’ ஆக ப்ரோமோசன் கிடைத்தது. ரஜினியின் 100-வது படமான ‘ராகவேந்திரா’, கமலின் 100-வது திரைப்படமான ‘ராஜபார்வை’ போன்ற திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி கண்டிருந்த நிலையில், அந்தக் காலகட்டத்தில் நடித்த நடிகர்களில் 100-வது படம் வெற்றிப்படமாக அமைந்ததும் இவருக்குத்தான். ‘ஊமை விழிகள்’, ‘புலன் விசாரணை’, ‘செந்தூரப் பூவே’, ‘சத்ரியன்’ போன்ற படங்களில், தனது நிஜ வயதைவிட அதிகமான வயதுடைய கதாபாத்திரங்களில் நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்

 • 1979 – இனிக்கும் இளமை
 • 1979 – அகல் விளக்கு
 • 1980 – நீரோட்டம்
 • 1980 – சாமந்திப்பூ
 • 1980 – தூரத்து இடிமுழக்கம்
 • 1981 – சட்டம் ஒரு இருட்டறை
 • 1981 – சிவப்பு மல்லி
 • 1981 – நெஞ்சில் துணிவிருந்தால்
 • 1981 – சாதிக்கொரு நீதி
 • 1981 – நீதி பிழைத்தது
 • 1982 – பார்வையின் மறுப்பக்கம்
 • 1982 – சிவந்த கண்கள்
 • 1982 – சட்டம் சிரிக்கிறது
 • 1982 – பட்டணத்து ராஜாக்கள்
 • 1982 – ஓம் சக்தி
 • 1982 – ஆட்டோ ராஜா
 • 1983 – சாட்சி
 • 1983 – டௌரி கல்யாணம்
 • 1983 – நான் சூட்டிய மலர்
 • 1984 – மதுரை சூரன்
 • 1984 – மெட்ராஸ் வாத்தியார்
 • 1984 – வெற்றி
 • 1984 – வேங்கையின் மைந்தன்
 • 1984 – நாளை உனது நாள்
 • 1984 – நூறாவது நாள்
 • 1984 – குடும்பம்
 • 1984 – மாமன் மச்சான்
 • 1984 – குழந்தை ஏசு
 • 1984 – சத்தியம் நீயே
 • 1984 – தீர்ப்பு என் கையில்
 • 1984 – இது எங்க பூமி
 • 1984 – வெள்ளை புறா ஒன்று
 • 1984 – வைதேகி காத்திருந்தாள்
 • 1984 – நல்ல நாள்
 • 1984 – ஜனவரி 1
 • 1984 – சபாஷ்
 • 1984 – வீட்டுக்கு ஒரு கண்ணகி
 • 1985 – அமுதகானம்
 • 1985 – அலையோசை
 • 1985 – சந்தோச கனவுகள்
 • 1985 – புதுயுகம்
 • 1985 – நவகிரக நாயகி
 • 1985 – புதிய சகாப்தம்
 • 1985 – புதிய தீர்ப்பு
 • 1985 – எங்கள் குரல்
 • 1985 – ஈட்டி
 • 1985 – நீதியின் மறுபக்கம்
 • 1985 – அன்னை பூமி
 • 1985 – ஏமாற்றாதே ஏமாறாதே
 • 1985 – சந்தோச கனவு
 • 1985 – தண்டனை
 • 1985 – நானே ராஜா நானே மந்திரி
 • 1985 – ராமன் ஶ்ரீராமன்
 • 1986 – அம்மன் கோயில் கிழக்காலே
 • 1986 – அன்னை என் தெய்வம்
 • 1986 – ஊமை விழிகள்
 • 1986 – எனக்கு நானே நீதிபதி
 • 1986 – ஒரு இனிய உதயம்
 • 1986 – சிகப்பு மலர்கள்
 • 1986 – கரிமேடு கரிவாயன்
 • 1986 – நம்பினார் கெடுவதில்லை
 • 1986 – தர்ம தேவதை
 • 1986 – மனக்கணக்கு
 • 1986 – தழுவாத கைகள்
 • 1986 – வசந்த ராகம்
 • 1987 – வீரபாண்டியன்
 • 1987 – கூலிக்காரன்
 • 1987 – சட்டம் ஒரு விளையாட்டு
 • 1987 – சிறை பறவை
 • 1987 – சொல்வதெல்லாம் உண்மை
 • 1987 – நினைவே ஒரு சங்கீதம்
 • 1987 – பூ மழை பொழியுது
 • 1987 – ஊழவன் மகன்
 • 1987 – ரத்தினங்கள்
 • 1987 – வீரன் வேலுத்தம்பி
 • 1987 – வேலுண்டு வினையில்லை
 • 1988 – உழைத்து வாழ வேண்டும்
 • 1988 – உள்ளத்தில் நல்ல உள்ளம்
 • 1988 – காலையும் நீயே மாலையும் நீயே
 • 1988 – செந்தூரப்பூவே
 • 1988 – தம்பி தங்கக் கம்பி
 • 1988 – தெற்கத்திக்கள்ளன்
 • 1988 – தென்பாண்டிச்சீமையிலே
 • 1988 – நல்லவன்
 • 1988 – நீதியின் மறுப்பக்கம்
 • 1988 – பூந்தோட்ட காவல்காரன்
 • 1988 – மக்கள் ஆணையிட்டால்
 • 1989 – என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
 • 1989 – தர்மம் வெல்லும்
 • 1989 – பொறுத்தது போதும்
 • 1989 – பொன்மன செல்வன்
 • 1989 – மீனாட்சி திருவிளையாடல்
 • 1989 – ராஜநடை
 • 1990 – எங்கிட்ட மோதாதே
 • 1990 – சத்ரியன்
 • 1990 – சந்தனக் காற்று
 • 1990 – சிறையில் பூத்த சின்ன மலர்
 • 1990 – பாட்டுக்கு ஒரு தலைவன்
 • 1990 – புதுப்பாடகன்
 • 1990 – புலன் விசாரணை
 • 1991 – கேப்டன் பிரபாகரன்
 • 1991 – மாநகர காவல்
 • 1991 – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
 • 1992 – காவியத் தலைவன்
 • 1992 – சின்ன கவுண்டர்
 • 1992 – தாய்மொழி
 • 1992 – பரதன்
 • 1993 – எங்க முதலாளி
 • 1993 – ஏழை ஜாதி
 • 1993 – கோயில் காளை
 • 1993 – செந்தூரப் பாண்டி
 • 1993 – ராஜதுரை
 • 1993 – சக்கரைத் தேவன்
 • 1994 – ஆனஸ்ட் ராஜ்
 • 1994 – என் ஆசை மச்சான்
 • 1994 – சேதுபதி ஐ.பி.எஸ்
 • 1994 – பதவிப் பிரமாணம்
 • 1994 – பெரிய மருது
 • 1995 – கருப்பு நிலா
 • 1995 – காந்தி பிறந்த மண்
 • 1995 – திருமூர்த்தி
 • 1996 – அலெக்சாண்டர்
 • 1996 – தமிழ்ச் செல்வன்
 • 1996 – தாயகம்
 • 1997 – தர்மச்சக்கரம்
 • 1998 – உளவுத்துறை
 • 1998 – வீரம் விளைஞ்ச மண்ணு
 • 1998 – தர்மா
 • 1999 – பெரியண்ணா
 • 1999 – கள்ளழகர்
 • 1999 – கண்ணுபடப் போகுதையா
 • 2000 – வானத்தைப் போல
 • 2000 – சிம்மாசனம்
 • 2000 – வல்லரசு
 • 2001 – வாஞ்சிநாதன்
 • 2001 – நரசிம்மா
 • 2001 – தவசி
 • 2002 – ராஜ்ஜியம்
 • 2002 – தேவன்
 • 2002 – ரமணா
 • 2003 – சொக்கத்தங்கம்
 • 2003 – தென்னவன்
 • 2004 – எங்கள் அண்ணா
 • 2006 – சுதேசி
 • 2006 – பேரரசு
 • 2006 – தர்மபுரி
 • 2007 – சபரி
 • 2008 – அரசாங்கம்
 • 2010 – விருதகிரி
 • 2016 – தமிழன் என்று சொல்

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *