எட்டுத்தொகை & பத்துப்பாட்டு

எட்டுத்தொகை

எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியம். இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது. இவற்றில், பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. அகத்தையும் புறத்தையும் பற்றிய பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர். தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டமையால், தொகை எனப் பெயர் பெற்றது. இத்தொகையுள், ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102.

எட்டுத்தொகை நூல்களுள், பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து, மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்து, சில சமயம் வஞ்சிப்பாவால் வரப்பெற்று அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லையாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. இந்நூல்கள், கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர்.

எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா பின்வருவது:

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை

இவற்றுள்,

அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.

புறப்பொருள் பற்றியவை : புறநானூறு, பதிற்றுப்பத்து.

அகமும் புறமும் கலந்து வருவது: பரிபாடல்.

அகப்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைத்துள்ளன. புறப்பொருட் பாடல்களுள் சில அழிந்தும், சில சிதைந்தும், பாடவேறுபாடுகள் மிகுந்தும் காணப்படுகின்றன.

தொகுப்பு

பரிபாடலில் எட்டு பாடல்கள், அகம் பற்றியன. இவை, கடவுள் பற்றிய பாடல்களாகவும், தனிப்பாடல்களாகவும், ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டவை. புறநானுற்றில், வஞ்சிப் பாடல்கள் சில உள்ளன. இடத்திற்கேற்ப, தேவையான துறைகளுள் பாடல்களைப் பாடியுள்ளனர். புறத்திணைகளுள் வாழ்க்கைக்கு என்றும் இன்றியமையாத அறங்களையும், ஒழுக்கங்களையும் வலியுறுத்தும் பாடாண் முதலிய துறைகளைப் பாடியுள்ளனர். கிடைத்த பாடல்களில், குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் என நான்கு திணைகட்கும் நான்கு நூறு என ஒரு வகையாகத் தொகை கொண்டனர். ஐங்குறுநூற்றுள் பாலைக்கும் ஒரு நூறு கொண்டனர். பிற்காலத்தார், நான்கு திணைப் பாடல்களை ஐந்திணைக்கும் பலவகையாகப் பிரித்திருக்கக்கூடும். பாடல்களின் அடியளவுகளைக் கொண்டு பல தொகை நூல்களைத் தொகுத்துள்ளனர்.

3அடிச் சிறுமையும் 6அடிப் பெருமையுமுடைய பாடல்களை ஐங்குறுநூறு என்றனர். ஐந்து புலவர்கள் நூறுநூறாக பாடிய தனித்தன்மையையும் உடையது இத்தொகை நூல். சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையென்ற சேரன் ஆதரவால், கூடலூர்க்கிழார் இதனைத் தொகுத்தார்.

4-8 அடியெல்லையினையுடைய பாடல்களைக் குறுந்தொகை ஆக்கினர். 9-12 அடிப்பாடல்கள் நற்றிணையாக அமைந்தன. 13-31 அடிப்பாடல்கள் நெடுந்தொகையாய் அகநானூறு ஆயின.

அகத்திற்கு நானூறு என்பதற்கேற்ப, புறத்திற்கும் நானூறு பாடல்களைத் தொகுத்தனர். புறநானூறும், பதிற்றுப்பத்தும் புறத்தைப் பற்றியன. மற்றவை அகம் பற்றியன. சிறப்பாக ஒரு பகுதியைப் பேசினாலும், திணை நூல்களின் பாடல்களை அறம், பொருள் ,இன்பம் என்னும் முப்பகுதிகளைப் பற்றிய உண்மைகளை இடையிடையே தம்முள் விரவப் பெற்றுள்ளன. புறப்பாடல்களில் அரசரின் போர்கள், கொடை ஆகியவை பற்றியும், அகப்பாடல்களில் வாழ்க்கைக்குரிய ஒழுக்கவுண்மைகளைப் பற்றியும், அரிய குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. கடையெழு வள்ளல்களைப் பற்றிய குறிப்புக்கள் புறநானூற்றிலும், அகப்பாடல்களிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன.தம்மைப் புரந்த வள்ளல்களை நன்றியுடன் குறிப்பிடும் குறிப்புகளே இவை. கடைச்சங்கத் தொடக்கத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், கரிகாலனும் இலங்கியுள்ளனர். அக்காலத்தே ஆண்ட சேர, சோழ, பாண்டியர், சிற்றரசர்கள், குறுநில மன்னர் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள், புறநானூற்றில் மிகுதியாகவும், அகநூல்களில் ஓரிரு வரிகளாகக் கலந்தும் காணப்படுகின்றன.

பொதுவாக எட்டுத்தொகை நூல்களில், பண்டைத் தமிழ் அரசர்களின் போர்த்திறங்களையும், வரையாது வழங்கும் வள்ளன்மைப் பண்பையும், மறக்குடி மகளிரின் மாண்பினையும், போர்த் தவிர்க்க இடைநின்ற சான்றோர்களின் இயல்புகளையும், ஐந்திணைக்குரிய அன்பொழுக்கங்களையும், புராணச் செய்திகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் அறியலாம்.

பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும்.

பத்துப்பாட்டு நூல்கள்

ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில் எழுந்ததென்பதே பலரது கருத்து. இந்த அரிய தொகுப்புக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

பத்துப் பாட்டால் அறியலாகும் செய்திகள்

இத்தொகுதியிலுள்ள நூல்கள் சங்க இலக்கியங்களுள் சிறப்பிடம் பெறுபவை. இவற்றில் பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை, பண்பாடு பற்றிய பல அரிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. வரலாற்றுச் சம்பவங்கள், அரசர்களினதும் வள்ளல்களினதும் இயல்புகள், பொது மக்களின் காதல் வாழ்க்கை, அக்காலக் கலைகள், நகரங்கள் பற்றிய தகவல்கள், இயற்கை பற்றிய வருணனைகள் போன்றவை தொடர்பான பல தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகின்றது. பத்துப் பாட்டு நூல்களில் இயற்கைக்கு முரண்பட கற்பனைகளோ பொருந்தா உவமைகளோ காணப்பெறவில்லை. பண்டைத் தமிழ்ர் வாழ்வை உள்ளது உள்ளபடிக் கட்டும் காலக் கண்ணாடியாக இவை விளங்குகின்றன.

வாய்பாட்டுப் பாடல்

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து
என வரும் பழம்பாடல், பத்துப் பாடு நூல்கள் எவை என்பதை மிகத் தெளிவாகக் காட்டும்.

அடிவரையறை

இத்தொகுப்பிலுள்ள பத்து நூல்களும் நீண்ட அகவற் பாக்களால் ஆனவை. இவற்றுள் 103 அடிகளைக் கொண்டமைந்த முல்லைப் பாட்டுக்கும், 782 அடிகளையுடைய மதுரைக் காஞ்சிக்கும் இடைப்பட்ட நீளங்களைக் கொண்டவையாக ஏனைய நூல்கள் அமைந்துள்ளன.

“நூறடிச் சிறுமை நூற்றுப் பத்தளவே
ஏறிய அடியின் ஈரைம் பாட்டு
தொடுப்பது பத்து பாட்டெனப் படுமே
அதுவே, அகவலின் வருமென அறைகுவர் புலவர்”.
-(பன்னிருபட்டியல் 266-267) என்பது இதன் இலக்கணமாகும்.

பதிப்புகள்

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல்கள் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1889 ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலர் முழு தொகுதியாகவும், இதிலுள்ள நூல்களிற் சிலவற்றைத் தனித் தனியாகவும் புதிய உரைகளுடன் வெளியிட்டுள்ளனர்.

வெளி இணைப்புகள்

எட்டுத்தொகை – Wikipedia

பத்துப்பாட்டு – Wikipedia

தமிழ் இலக்கியம்

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *