தமிழ் எழுத்து முறை | Tamil Script

தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துகளின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இவை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது. தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும், 216 உயிர்மெய் எழுத்துகளும், ஓர் ஆய்த எழுத்துமாக மொத்தம் 247 எழுத்துகள் தமிழ் நெடுங்கணக்கில் உள்ளன. தற்காலத்தில் வழங்கும் கிரந்த எழுத்துகள் தமிழ் நெடுங்கணக்கைச் சேர்ந்ததல்ல.

எழுத்துகள்

உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றுடனும் சேர்ந்து உருவாகும் எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகள் எனப்படும். உயிர்மெய்யெழுத்துகள் மொத்தம் 12×18 = 216 ஆகும். இவற்றுடன் 12 உயிர் எழுத்துகளும், 18 மெய் எழுத்துகளும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துகள் தமிழ் மொழியில் உள்ளன. தமிழ் நெடுங்கணக்கில் சேராச் சில கிரந்த எழுத்துகள் (ஜ, ஷ, ஸ, ஹ வரிசைகள்) 52ம் க்ஷ, ஸ்ரீ முதலான எழுத்துகளும் இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பலரும் எதிர்த்தும் வருகின்றனர்.

தமிழ் எழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்படும்.

தமிழ் எழுத்துகளின் வரலாறு

தமிழ் எழுத்து ஏனைய பிராமிய குடும்ப எழுத்துகள் போன்று பிராமி எழுத்துமுறையில் இருந்து உருவாகியது என்று கருதப்படுகின்றது. தொடக்ககாலத் தமிழ்க் கல்வெட்டுக்களில் காணப்படும் அசோக பிராமியை ஒத்த எழுத்துகளை ஆய்வாளர்கள் தமிழ்ப் பிராமி அல்லது தமிழி எனக் குறிப்பிடுகின்றனர். இது, பல அம்சங்களில் அசோக பிராமியில் இருந்து வேறுபட்டுக் காணப்பட்டது. எடுத்துக்காட்டாக, அசோக பிராமியைப் போலன்றித் தமிழ்ப் பிராமியில் அகரமேறிய உயிர்மெய்களில் இருந்து தனி மெய்யெழுத்தைப் பிரித்துக் காட்டுவதற்கான முறை ஒன்று இருந்தது. அத்துடன், ஐராவதம் மகாதேவனின் கூற்றுப்படி, தொடக்ககாலத் தமிழ்ப் பிராமியில் உயிர்மெய் எழுத்துகளில் உயிரொலிகளைக் குறிக்கச் சற்று வேறுபட்ட குறியீடுகள் பயன்பட்டன. மேலும், சமசுக்கிருதத்தில் இல்லாத ஆனால் தமிழில் உள்ள ஒலிகளைக் குறிக்கக் கூடுதலான எழுத்துகள் இருந்ததுடன், சமசுக்கிருதத்தில் உள்ள ஆனால் தமிழுக்குத் தேவையற்ற ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் இல்லாமலும் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒலிப்புள்ள மெய்யொலிகள் தமிழ்ப் பிராமியில் காணப்படவில்லை.

2 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய கல்வெட்டுகளில் சற்று மாறுபட்ட தமிழ்ப் பிராமி வடிவம் காணப்படுகிறது. இவ்வடிவம், தொல்காப்பியத்தில் விளக்கப்பட்ட தமிழ் எழுத்து முறையைப் பெருமளவுக்கு ஒத்ததாக உள்ளது. முக்கியமாக, அகரமேறிய மெய்யெழுத்துகளில் இருந்து தனி மெய்யைப் பிரித்துக்காட்ட புள்ளிகள் பயன்பட்டதைக் காண முடிகிறது. இதன் பின்னர் தமிழ் எழுத்துகள் வளைகோடுகளைக் கொண்டனவாக வளர்ச்சியடைந்தன. கிபி 5 ஆம் 6 ஆம் நூற்றாண்டுகளில் இவை தொடக்க வட்டெழுத்து என அழைக்கப்படும் வடிவத்தை அடைந்தன.

தற்காலத் தமிழ் எழுத்துகள் வட்டெழுத்துகளில் இருந்து வளர்ச்சி அடைந்தவை அல்ல. 7 ஆம் நூற்றாண்டில், பல்லவர்கள் புதிய தமிழ் எழுத்துமுறையைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துகள் கிரந்த எழுத்துகளை எளிமையாக்கி உருவாக்கப்பட்டவை. கிரந்த எழுத்துகள் சமசுக்கிருதத்தை எழுதுவதற்காகத் தென்னிந்தியாவில் உருவான எழுத்துகள். 8 ஆம் நூற்றாண்டளவில், தமிழகத்தின் வடபகுதியான சோழ நாட்டிலும், பல்லவ நாட்டிலும் இப்புதிய எழுத்துமுறை வட்டெழுத்துக்குப் பதிலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. தமிழகத்தின் தென் பகுதியில் இருந்த சேர நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வட்டெழுத்து முறை 11 ஆம் நூற்றாண்டில் பாண்டியநாடு சோழர்களால் கைப்பற்றப்படும்வரை பயன்பாட்டில் இருந்தன. பின் வந்த நூற்றாண்டுகளில் சோழ-பல்லவ தமிழ் எழுத்துமுறை நவீன தமிழ் எழுத்து முறையாக வளர்ச்சி பெற்றது.

தமிழ் எழுத்துகள்

உயிரெழுத்துகள் (12)

உயிரெழுத்துகளில் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து எழுத்துகள் குறைந்த ஒலியளவு கொண்டவை இதனால் இவை “குறில்கள்” என்றும், கூடிய ஒலிப்பளவு கொண்ட ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் எழுத்துகள் “நெடில்கள்” என்றும் குறிக்கப்படுகின்றன. ஐ, ஔ என்னும் இரு எழுத்துகளும் கூட்டெழுத்துகள். இவை முறையே அ + இ, அ + ஒ என்னும் சேர்க்கையால் உருவாகும் ஒலிப்புக்களைக் குறிக்கின்றன. தொல்காப்பியர் காலத் தமிழ் எழுத்து முறையில், ஏகாரமும், ஓகாரமும் மேல் புள்ளி பெற்று எகரத்தையும், ஒகரத்தையும் குறித்தன. பிற்காலத்தில் 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை எகரம், ஏகாரம் என்னும் இரண்டும் எ என்னும் எழுத்தாலும், ஒகரம், ஓகாரம் என்னும் இரண்டும் ஒ என்னும் எழுத்தாலும் குறிக்கப்பட்டன. இந்தக் குழப்பத்தைப் போக்குவதற்காக 18 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எனப்பட்ட இத்தாலிய மதபோதகரான கான்சுடன்டைன் பெசுக்கி என்பார் நெடிலைக் குறிக்க சுழிகளைப் பயன்படுத்தும் முறையைக் கையாண்டார். ஓகாரத்தைக் குறிக்க அவரது முறையே இன்றும் பயன்பட்டு வருகிறது. ஆனாலும் ஏகாரத்தைக் குறிக்க அவரது சுழிப்பு முறை இன்று பயன்பாட்டில் இல்லை. அதற்குப் பதிலாக எ என்னும் எழுத்தின் நிலைக்குத்துக் கோட்டில் கீழ் முனையில் இருந்து இடப் பக்கம் சாய்ந்த கீழ் நோக்கிய கோடொன்றைச் சேர்த்து இப்போது ஏ என எழுதப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஐ, ஔ ஆகிய எழுத்துகளைக் கைவிட்டு, அய், அவ் என்று எழுதவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனாலும் இக்கோரிக்கை இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

உயிரெழுத்துகள் 

மெய்யெழுத்துகள் (18)

பிற இந்திய மொழி எழுத்துமுறைகளைப் போலவே தமிழிலும் அகரமேறிய மெய்களே அடிப்படைக் குறியீடுகளாக இருக்கின்றன. இவற்றுக்கு மேலே புள்ளி இடுவதன் மூலம் மெய்யொலிகள் குறிக்கப்படுகின்றன. மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதில் இருந்து இது பழமையான வழக்கு என்பதை அறிந்துகொள்ள முடியும். பிற்காலத்தில், பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதும்போது பனையோலை கிழிந்து விடுவதைத் தவிர்ப்பதற்காகப் புள்ளியிடும் முறை கைவிடப்பட்டது. அப்போது, மெய்யெழுத்துகளும், அகர உயிர்மெய்களும் ஒரே மாதிரியாகவே குறிக்கப்பட்டு வந்தன. மயக்கத்தைத் தவிர்க்கும் பொருட்டுப் பிற்காலத்தில் மீண்டும் புள்ளியிடும் வழக்கம் புழக்கத்துக்கு வந்தது.

மெய்யெழுத்துகள்

உயிர்மெய்யெழுத்துகள் (216)

உயிரும் மெய்யும் சேர்ந்து உருவாகும் ஒலிகளைக் குறிப்பன உயிர்மெய் எழுத்துகள் ஆகும். உயிர்மெய் எழுத்துகளின் வடிவங்கள் குறித்துத் தொல்காப்பியம், எழுத்ததிகாரத்தில் 17 ஆவது நூற்பா கூறுகிறது. இதன்படி மெய் அகரத்தோடு கூடும்போது உருவம் திரிபடையாமல் இருக்கும். பிற உயிர்களோடு சேரும்போது உருவம் திரிபு அடையும். திரிபடையும் எழுத்துகள், பின்வருமாறு திரிபடைகின்றன:

தற்கால எழுத்து முறையில் இவை பின்வருமாறு அமைகின்றன.

தொல்காப்பியர் காலத்தில் மேல், கீழ் விலங்குகள், கோடு, புள்ளி என்பவை, தற்கால வடிவங்களுடன் வேறுபட்டுக் காணப்பட்டாலும், அடிப்படைக் கருத்துரு தற்கால எழுத்து முறையிலும் மாறாமல் இருப்பதைக் காணலாம்.

கீழேயுள்ள அட்டவணையின் முதலாவது வரிசையில் மெய்யெழுத்துகள் காட்டப்பட்டுள்ளன. முதல் நிரலில் உயிரெழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய நிரலும், உயிரெழுத்துக்குரிய வரிசையும் கூடும் இடத்தில் அவற்றின் புணர்ச்சியினால் உருவான உயிர்மெய்யெழுத்து காட்டப்பட்டுள்ளது.

தமிழ் அரிச்சுவடி

ஆய்த எழுத்து (1)

அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என பல பெயர்களுள்ள ஆய்த எழுத்து.

தமிழில் கிரந்த எழுத்துகள்

கிரந்தம் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் கேரளத்திலும் சமஸ்கிருத மொழியில் இருந்து தோன்றி தமிழில் பயன்படுத்தப்பட்ட சொற்களை எழுதப் பயன்பட்ட ஒரு லிபி (எழுத்து முறை). இருபதாம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்துகள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் சமற்கிருதம் மீது பொதுவாக செய்த தாக்கத்தாலும் கிரந்தத்தின் உபயோகம் பெருமளவு குறைந்து விட்டது.

தமிழில் சமஸ்கிருதம் மற்றும் தமிழின் கலப்பால் உருவான மணிப்பிரவாளம் பரவலாக இருந்த பொழுது கிரந்த எழுத்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. மணிப்பிரவாளத்தின் செல்வாக்கு குறைந்தாலும், ‘ஜ’, ‘ஶ’, ‘ஷ’, ‘ஸ’, ‘ஹ’ ,’க்ஷ’, ‘ஸ்ரீ’ போன்ற கிரந்த எழுத்துகள் வடமொழி மூலம் தோன்றிய சொற்களிலும் பிறமொழிச் சொற்களிலும், தமிழில் இல்லா இவ்வோசைகளை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.

தமிழில் கிரந்த எழுத்துகள்

தமிழ் எழுதும் முறைமை

தமிழ் எழுதும் முறைமை மூலம், நீங்கள் அடிப்படைத் தமிழ் எழுத்துகளை எழுதப் பழகலாம். பிறரைப் பழக்கலாம். நீங்கள் விரும்பும் கோப்பினை, உங்கள் கணினியிலேயே தரவிறக்கம் செய்து கொண்டு, இணைய இணைப்பு இல்லாமலேப் பயன் படுத்தலாம். ஒவ்வொரு கோப்பும், ஏறத்தாழ 6kb அளவிலேயே இருக்கிறது.

தமிழ் எண்கள்

தமிழில் 0 முதல் 9 வரைக்குமான எண்களும் 10, 100, 1000 ஆகியவற்றைக் குறிக்கவென தனி எண்களும் உள்ளன. அத்துடன் நாள், மாதம், ஆண்டு, செலவு, வரவு, மேலேயுள்ளபடி, ரூபாய், இலக்கம் என்பவற்றைக் குறிக்க குறியீடுகளும் உள்ளன.

தமிழ் எழுத்துகளும் கணினியும்

தமிழ் ஒருங்குறி U+0B80 முதல் U+0BFF வரை உள்ளது.

தமிழ் ஒருங்குறி மொழியியல்

வெளி இணைப்புகள்

தமிழ் எழுத்து முறை – Wikipedia

About the author

Comments

  1. தற்போது உள்ள தமிழ் வட்டு எழுத்துக்கள், கி.பி.4ம் நூற்றாண்டு வாக்கில் இடைப் புகுத்தப்பட்ட, அபுகிடா வகை அசோகர் கல்வெட்டு எழுத்துகள் !

    மெய் தமிழ் எழுத்துரூ வரிவடிவ நேர்கோடுகள் ஆகவே இருக்க வேண்டும் !!

    சிந்துவெளி மண்பாண்டங்களில் உள்ள கீரல் எழுத்துகள், தமிழி என்ற பெயரில் ஆய்வாளர்களால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆரம்ப கால எழுத்துரூ பலவேறு நிலப்பரப்பில், பலவேறு மக்கள் கூட்டத்தால், வேறு மரூஉவிய மொழிகள் பெயர்களால் தமிழின் 5 திரன்கள் கொண்டு உருவாகி பயன் படுத்தப்பட்டுள்ளது !!!

Leave a Reply

Your email address will not be published.