அம்பேத்கர் | B. R. Ambedkar

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார்.

உயர் கல்வி, தீண்டாமை

உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.

பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.

‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர். இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.

2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு

இளமை

அம்பேத்கர் பிரித்தானிய இந்தியாவில் மாவ் எனுமிடத்தில் (இப்போது மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.

அம்பேத்கரின் குடும்பப் பின்னணி தற்போதைய மகாராட்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பேவாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

இராம்ஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் ‘சுபேதார் மேஜர்’ என்ற தகுதி பெற்றவர்.

துன்பங்கள்

மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் இராம்ஜி இளம் வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.

டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.

கல்வி

1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைத் முடித்த அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார்.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள்

அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. அவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் தொடமாட்டார்கள்.

கேள்விகள் கேட்பதும் கிடையாது. தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற கையால் பருகவேண்டும். அமருவதற்கு இம்மாணவர்கள் ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும்.

வடமொழி கற்கவும் தடை இருந்தது. இக்கொடுமைகளைக் கண்ட அம்பேத்காரின் பிஞ்சுமனம் வெம்பியது.

இயற்பெயர்

பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர் என்பது அம்பேத்கரின் இயற்பெயராகும். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும்.

இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட பிராமண ஆசிரியரான மகாதேவ அம்பேத்கர் இவரின் குடும்பப் பெயரான அம்பேவாமேகர் என்பதை மாற்றி தன் குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இவரின் பெயரில் சேர்த்தார்.

இவர் அம்பவாடே என்னும் கிராமத்தில் பிறந்ததால் இவரை அம்பவாதேகர் என்று முதலில் அழைத்தனர். பின்னர் அதுவே அம்பேத்கர் என்றானது என்பது ஒரு சாரரின் கருத்து. 1904 ஆம் ஆண்டு இவரது குடும்பம் மும்பைக்குச் சென்றது.

கல்வி

அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து தனது கல்வியைச் தொடர்ந்தார் அம்பேத்கர். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

இவரது குடும்பமே அம்பேத்கரின் கல்வியில் ஆர்வம் காட்டியது. மெட்ரிகுலேசன் தேர்வு முடிந்ததும் அம்பேத்கருக்கும் ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

பரோடா மன்னர்

கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர விரும்பிய அம்பேத்கருக்கு பரோடா மன்னர் உதவி புரிந்தார். சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆயினும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்புடனும் அனுதாபத்துடனும் நூல்கள், உணவு மற்றும் உடைகள் கொடுத்து உதவினார்.

இவரின் உதவியால் அம்பேத்கர் நன்கு படித்து இளங்கலைப் பட்டதாரியானார். படிப்பு முடிந்ததும் குடும்பச் சுமையை ஏற்பதற்காக சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக ‘லெப்டினன்ட்’ பதவியில் வேலைக்குச் சேர்ந்தார்.

அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார். பின்னர் மும்பைக்கு வந்த பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துக் கூறினார்.

கொலம்பியா பல்கலைக் கழகம்

மிகவும் வேதனையடைந்த மன்னர், மிகச் சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலை பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றார்.

அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்

1913ஆம் ஆண்டு சூன் 4 ஆம் நாள் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

உயர் கல்வி

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார். அங்கு அவர் 1915-ல் ‘பண்டைய இந்தியாவின் வாணிகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.

இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதினார். பின்னர், ‘இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார்.

டாக்டர் பட்டம்

இந்த ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இக்கட்டுரை ஆங்கிலத்தில் ‘இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி’ என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது.

இன்று இந்தியாவில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் பொழுது ஒவ்வொருவரும் புரட்டிப்பார்க்கும் உயர் நூலாக இன்றும் உள்ளது. மேலும் அம்பேத்கர் ‘பிரித்தானிய இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார்.

‘ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.

சமூகப்பணிகள்

பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் முனைவர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரத்தில், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார்.

வட்ட மேசை மாநாடு

1930-ல் இலண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், ‘என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன்.

அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென முனைவர் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

இரட்டை வாக்குரிமை

இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் ‘இரட்டை வாக்குரிமை” தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

பூனா ஒப்பந்தம்

இதன் விளைவாக செப்டம்பர் 24 – 1932-ல் காந்திஜிக்கும், முனைவர் அம்பேத்கருக்கும் இடையே ‘பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.

புத்த மதம்

வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து முனைவர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார்.

இந்திய அரசியல் சட்டம்

இவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது, அதன் ஒரு பகுதியான ‘இந்து சட்டத் தொகுப்பு மசோதா’விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.

1952 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னான காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றமையினால் 1952-ல் அந்த சட்டம் நிறைவேறியது. சமூக நீதிப் போராளி முனைவர் அம்பேத்கர் 1956 – திசம்பர் 6 அன்று காலமானார்.

தீண்டாமைக்கு எதிராக

புனே உடன்படிக்கை

தாழ்த்தப்பட்டவர்களிடம் அம்பேத்கருக்கு இருந்த ஆதரவாலும், செல்வாக்காலும் பிரித்தானிய அரசால் இவர் 1932ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார்.

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமே வாக்களிக்கமுடியும்) என்று கோரியதை காந்தி கடுமையாக எதிர்த்தார்.

இக்கோரிக்கை இந்து சமுகத்தை இரண்டு குழுக்களாக பிரித்துவிடும் என்று அஞ்சினார்.

பிரித்தானியர்கள் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி தொகுதி ஒதுக்கினர். இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார்.

அவர் புனேவிலுள்ள ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மதன் மோகன் மால்வியா, பால்வான்கர் பாலோ போன்ற தலைவர்கள் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் அம்பேத்கர் காந்தியுடன் உடன்பாடு செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டார் இது புனே உடன்படிக்கை எனப்படும். இதன்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதில் அனைவரும் வாக்களிக்கலாம் என்றும் முடிவாகியது.

அம்பேத்கரின் புகழ்பெற்ற குற்றச்சாட்டு, “காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி.

காலத்திற்கேற்ப இவர் குணம் மாறும், ஆதரவும் மாறும், ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தாழ்த்தப்பட்டவர்கள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது”.

பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார், “காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான்.

ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!”

இந்திய அரசியலமைப்பில் பங்கு

இந்தியா விடுதலை பெற்றவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அம்பேத்கரை, காங்கிரசு அரசு சட்ட அமைச்சராக பதவியேற்றுக் கொள்ளும்படி அழைத்தது.

அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார். ஆகத்து 29ல் அம்பேத்கர் இந்திய அரசிலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவரானார்.

அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு மிகச்சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்றுவியலாளரும் இந்திய அரசியலமைப்பை நன்கு அறிந்தவருமான கிரான்வில்லா ஆசுட்டின் கூறுகிறார்.

அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை வழங்கியது. அரசியலமைப்பு 1949 நவம்பர் 26, அன்று மக்களவையில் ஏற்கப்பட்டது.

இந்து நெறியியல் சட்டத்தை கொண்டு வருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1951ம் ஆண்டு இவர் தன் பதவியை துறந்தார்.

ரிசர்வ் வங்கி உருவாக்கத்தில் பங்கு

அம்பேத்கர் 1921ம் ஆண்டு வரை தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றிய பொழுது பொருளாதாரம் குறித்து 3 துறைசார் புத்தகங்களை எழுதியிருந்தார்.

கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.

பௌத்த சமயத்திற்கு மாறுதல்

அம்பேத்கர் பழங்கால இந்தியாவைப்பற்றியும் மானிடவியலைப்பற்றியும் செய்த ஆராய்ச்சியின் மூலம் மகர் மக்கள் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பௌத்த பழக்கங்களை விட மறுத்ததால் கிராமத்தை விட்டு வெளியே தீண்டத்தகாதவர்கள் போல் வாழ வற்புறுத்தப்பட்டார்கள் என்றும் கருதினார்.

இதனாலயே அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்று கருதினார். இதைப்பற்றி யார் சூத்திரர்கள்? (Who were the Shudras?) என்ற புத்தகத்தை எழுதினார்.

பௌத்த சமயத்தை பற்றி நன்கு படித்த அம்பேத்கர் 1950 முதல் பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை முழுவதுமாக திருப்பினார்.

இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் மற்றும் அறிஞர்களின் கருத்தரங்கில் கலந்து கொண்டார். புனேக்கு அருகில் புதிய பௌத்த விகாரை அர்பணித்த பின் தான் பௌத்தத்தை பற்றி புத்தகம் எழுதிக்கொண்டுள்ளதாகவும் விரைவில் அது நிறைவடையும் என்று கூறினார்.

அதிகாரபூர்வமாக பௌத்த சமயத்திற்கு திரும்புவது பற்றி திட்டமிட்டுக் கொண்டிருந்தார். 1954ம் ஆண்டு இரு முறை பர்மாவிற்கு பயணம் மேற்கொண்டார்.

இரண்டாவது முறை மூன்றாவது உலக பௌத்த சமய மாநாடு ரங்கூனில் நடைபெற்றதில் கலந்து கொள்ள சென்றார். 1955ம் ஆண்டு பாரதீய பௌத்த மகாசபாவை தோற்றுவித்தார்.

1956ம் ஆண்டு புத்தரும் அவரின் தம்மமும் (The Buddha and His Dhamma) என்ற புத்தகத்தை எழுதினார். இவரின் மறைவுக்கு பின் அப்புத்தகம் வெளியிடப்பட்டது.

இலங்கை பௌத்த துறவி ஹம்மல்வா சதாடிஷ்சாவை கலந்த பின் 1956 அக்டோபர் 14 அன்று நாக்பூரில் உள்ள தீக்சாபூமியில் அதிகாரபூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார்.

இவருடன் இவரது ஆதரவாளர்கள் 500,000 பேரும் பௌத்த சமயத்திற்கு மாறினார்கள். அதன் பின் இவர் காட்மாண்டுவில் நடைபெற்ற நான்காவது உலக பௌத்த கருத்தரங்கத்திற்கு சென்றார். இவரின் புத்தர் அல்லது கார்ல் மார்க்சு என்ற புத்தகம் நிறைவுபெறாமலேயே உள்ளது.

மரணம்

1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும் 1954 சூன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்க நேர்ந்தது. இவரின் உடல்நலம் அதிகரித்த கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டது. 1955ம் ஆண்டில் இவரது உடல்நலம் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 திசம்பர் 6ல் டில்லியிலுள்ள இவரது வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.

பௌத்த சமய முறையில் இவரின் உடல் தாதர் சௌபதி கடற்கரையில் திசம்பர் 7 அன்று தகனம் செய்யப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

1956 திசம்பர் 16, அன்று மதமாற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்பே அம்பேத்கர் மரணமடைந்ததால் இவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திலேயே இவரது உடலை பார்க்க வந்தவர்கள் மத மாற்றம் செய்து கொண்டனர்.

மரணத்திற்கு பின் இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ம் ஆண்டு வழங்கப்பட்டது.

அம்பேத்கர் கருத்துக்கள்

‘எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்?

இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’

1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது முனைவர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.

ஆவணப்பதிவுகள்

மகாராட்டிர அரசின் கல்வித்துறை, முனைவர் அம்பேத்காரின் உரையாடல்களையும், உரைகளையும் தொகுதிகளாக வெளியிட்டுள்ளன. அவை வருமாறு;-

கெளரவிப்புகள்

அம்பேத்கரின் 124-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, மன்மத வருடம், சித்திரை 1-ஆம் நாள் (ஏப்ரல், 14, 2015), கூகிள் தன் டூடில் தளத்தில் அம்பேத்கரின் படத்தை வெளியிட்டு கெளரவப்படுத்தியது.

வெளி இணைப்புகள்

அம்பேத்கர் – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.